உத்தர பிரதேசத்தில், கடந்த 2015ல், வினாயகர் சதுர்த்தியையொட்டி கங்கையில் விநாயகர் சிலையை கரைக்க சென்ற துறவிகளை அன்றைய உத்தரபிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் தடுத்தார். இதற்கு துறவிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். இதனால் அவர்களை கலைக்க, அன்றைய அகிலேஷ் அரசு துறவிகள் மீது காவல்துறையை ஏவி மிருகத்தனமாக தாக்குதல் நடத்தியது. இதில், பல துறவியர்கள் படுகாயமடைந்தனர். இது பொதுமக்களிடமும் துறவிகள் சமூகத்திலும் பெரும் அதிருப்திக்கு வழிவகுத்தது.
சமீபத்தில், ஹரித்வார், காங்கலில் உள்ள சங்கராச்சாரியார் ஸ்வரூபானந்த் சரஸ்வதியின் ஆசிரமத்திற்கு சென்ற அகிலேஷ் யாதவ், அங்கு, தான் கடந்த 2015ல் தடியடி நடத்த உத்தரவிட்டதற்கு வருத்தம் தெரிவித்தார். 2015 சம்பவத்தில் சங்கராச்சாரியாரின் சீடரான சுவாமி அவிமுக்தேஷ்வர்நந்த் என்ற துறவியும் படுகாயமடைந்தார். அகிலேஷ், அவரை ஆசிரமத்தில் சந்தித்தார். துறவிகள் மீதும் அப்பாவிகள் மீதும் துப்பாக்கிச் சூடு, லாதிசார்ஜ் நடத்துவதும் பிறகு செய்ததற்கு மன்னிப்பு கேட்பது ஒன்றும் சமாஜ்வாதி கட்சிக்கு புதியதல்ல.
அகிலேஷின் தந்தையும் முன்னாள் உ.பி முதல்வருமான முலாயம் சிங் யாதவ், 1990 அக்டோபரில் அயோத்திக்கு சென்ற கரசேவகர்களின் மீது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டார். இதில், கோத்தாரி சகோதரர்கள் உட்பட பல கரசேவகர்கள் உயிரிழந்தனர். பின்னர், 2017ல் நடைபெறவுள்ள தேர்தலில் தங்கள் கட்சி நிச்சயம் மண்ணைக் கவ்வும் என்பதை உணர்ந்துகொண்ட முலாயம்சிங், 2016ல், கரசேவையின்போது நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்தார். அதேபோல தற்போது, உத்தரபிரதேச சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தோல்வி பயத்தில் ஆறு ஆண்டுகள் கழித்து தன் தவறுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார் அகிலேஷ்.