இந்திய பத்திரிகை உலகின் பிதாமகர் ராம்நாத் கோயங்கா (1904 ஏப்.3 –1991 அக்.5). மக்களாட்சி முறையின் நான்காம் தூண் பத்திரிகைகள் என்பதை தனது செயல்பாடுகள் மூலமாக நிலைநாட்டியவர். அவர் நாட்டின் ஜனநாயகத்தைக் காப்பதிலும், ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுப்பதிலும் முன்னணியில் நின்று, பத்திரிகையாளர்களுக்கு முன்னுதாரணமாக விளங்குகிறார்.
தொழில் நிமித்தமாக 1926-ல் சென்னை வந்த கோயங்கா, சுதந்திரப் போராட்டங்களில் ஈடுபாடு காட்டினார். சமூகத்தின் கட்டமைப்பையும் அதன் பிரச்னைகளையும் தேவைகளையும் நன்கு தெரிந்துகொண்டார். 1926-ல் தமிழ்நாடு சட்ட மேலவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.அரசாங்கம் நியமித்த எம்.எல்.சி. பதவியை ஏற்றுக்கொண்டாலும், அரசின் தவறுகளையும் குறைகளையும் தயங்காமல் சுட்டிக்காட்டினார்.
1932-ல் சதானந்தம் சென்னையில் நடத்திய ‘தி பிரீ பிரஸ் ஜர்னல்’ இதழ் சரிவடைந்ததை ஒட்டி, தனது சொந்த ஊர்தி மூலம் தானே அவ்விதழை ஒவ்வொரு இடங்களுக்கும் சேர்ப்பித்தார். மேலும் டி.பிரகாசத்தின் ‘ஸ்வராஜ்யா’வுக்கும் உதவிகளைச் செய்து வந்தார். 1936 அக்.26-ல், ‘இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமணி’ ஆகிய நாளேடுகளின் பெரும்பான்மைப் பங்குதாரராகவும் உரிமையாளராகவும் ஆனார். 1941-ல் தேசிய இதழாசிரியர் மாநாட்டின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1942-ம் ஆண்டு இரண்டாவது உலகப் போரின்போது நாடெங்கும் நடந்து வந்த அரசு அராஜகங்களை உலகறியச் செய்ய வேண்டும் என்று நினைத்த கோயங்கா ஆங்கிலயே அரசு அக்கிரமங்களை பற்றிய செய்திகளை சேகரித்து ஒரு நூலாக வெளியிட்டார். தனது அச்சகத்தில் ரகசியமாக 1000 கணக்கான பிரதிகள் அச்சிட்டு அந்த ஆங்கில நூலுக்கு ‘இந்தியாவில் படுகொலை” (India Ravaged) என்று தலைப்புத் தந்தார். இந்த நூலின் பிரதிகளை, ரகசியமாக பிரிட்டன் நாடாளுமன்ற அங்கத்தினர்களுக்கு அனுப்பியும் வைத்தார்.
பிரதமராக இருந்த இந்திரா காந்தியின் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட நெருக்கடி நிலையின்போது (1975 ஜூன் 26 – 1977 மார்ச் 21) நாடு முழுவதும் மக்களின் அடிப்படை உரிமைகள் நசுக்கப்பட்டன; எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டு, விசாரணை இன்றிச் சிறையில் அடைக்கப்பட்டனர். குறிப்பாக, பத்திரிகைச் சுதந்திரம் கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டது. அந்த நெருக்கடி நிலையைக் கடுமையாக எதிர்த்து, துணிச்சலுடன் குரல்கொடுத்தவர் கோயங்கா. நெருக்கடி நிலையிலிருந்து நாடு மீள்வதற்காக ஜனதா கட்சியை நிறுவியதிலும் கோயங்கா பெரும் பங்கு வகித்தார். ஆர்.எஸ்.எஸ். நடத்திய அரசுக்கு எதிரான தலைமறைவுப் போராட்டத்துக்கு பல வகைகளிலும் அவர் உதவினார்.
பத்திரிகை உலகின் சுதந்திரத்திற்கும் நடுநிலைமைக்கும் சான்றாக வாழ்ந்த ராம்நாத் கோயங்கா 1991, அக். 5-ல் மறைந்தார். அரசியல் கட்சிகள், அதிகார மையங்கள், வியாபாரக் குழுமங்கள், நண்பர்கள் வட்டம் என்று எதன் பிடியிலும் சிக்காமல் சுதந்திரமாகப் பத்திரிகை வெளிவர வேண்டும் என்பதில் ராம்நாத் கோயங்கா உறுதியாக இருந்தார். நாட்டின் நலனே தனது பத்திரிகையின் லட்சியம் என்பது அவரது உறுதியான தீர்மானமாகும். சுயநலத்துக்காக எந்த எல்லைக்கும் செல்லத் தயங்காத தற்போதைய ஊடகத்தினருக்கு கோயங்காவின் வாழ்க்கை மிகச் சிறந்த திசைகாட்டி.
-முத்துவிஜயன்