சென்னையில், அ.தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து பேசிய முதல்வர் பழனி்சாமி, ‘தி.மு.கவினர் தனிமனித அவதுாறு பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர். நான் முதல்வராக இருப்பதால், அதைப்பற்றி பேசக் கூடாது என்று நினைத்தேன். ஆனால், தாய்மார்களை பார்த்ததால் இதை பேசுகிறேன். என் தாய் கிராமத்தில் பிறந்தவர், விவசாயி. இரவு, பகல் பாராமல் காடு கழணியில் பாடுபட்டவர். இறந்து விட்ட அவரை பற்றி தரக்குறைவாக பேசுகின்றனர். ஒருவர் ஏழையாக இருந்தாலும் பணக்காரராக இருந்தாலும் தாய் என்பவர் உயர்ந்தவர். பெண்ணை இழிவாக பேசியவருக்கு, ஆண்டவன் அதற்குரிய தண்டனையை வழங்குவான். என் தாய் என்று பார்க்கவில்லை. அவரை உங்கள் குடும்பத்தில், ஒரு தாயாக பார்க்கிறேன். எவ்வளவு கீழ்தரமாக பேசி உள்ளார். சற்று நினைத்துப் பாருங்கள். முதல்வருக்கே இந்த நிலை என்றால், உங்களைப் போன்றவர்களுக்கு, எப்படி பாதுகாப்பு அளிப்பார்கள்? இவர்கள், ஆட்சி அதிகாரத்துக்கு வந்தால் உங்கள் நிலை என்ன, எப்படி அராஜகம் செய்வர், எப்படியெல்லாம் பெண்களை இழிவுப்படுத்துவார்கள் என்பதை சற்று சிந்தித்து பாருங்கள். இதை நான் எனக்காக நான் கேட்கவில்லை. தாய்மார்களை கொச்சைப்படுத்தி, இழிவுப்படுத்தி பேசுவோருக்கு நீங்கள்தான் தக்க தண்டனை தர வேண்டும்’ என கண்ணீர் மல்க பேசினார்.