காட்சி- 1
கண்மணி சமையல் அறையில் வேலை செய்து கொண்டிருக்கிறாள். அங்கிருந்து தனது மகளைக் கூப்பிடுகிறாள். ஆனால், ருத்ரா ஹெட்போனை மாட்டிக்கொண்டு போனை நோண்டிக்கொண்டிருந்தாள். எத்தனைமுறை அழைத்தும் பதில் வராததால் கண்மணி ருத்ராவின் அருகில் சென்று
கண்மணி : ”எப்போ பாரு போன் கையிலே” (என்று சொல்லிக்கொண்டே போனைக் கையிலிருந்து பிடுங்கினாள்.)
ருத்ரா : ”அம்மா… அம்மா”
கண்மணி : ”போய் ஒழுங்கா படுத்துத்தூங்கு. அப்பத்தான் ஈவ்னிங் பார்க்குக்கு கூட்டிட்டு போவேன்” (என்று சொன்னதும், ருத்ரா அங்கிருந்து செல்கிறாள்.)
காட்சி- 2
(கண்மணி அவளது வேலைகளை முடித்துவிட்டு சற்று ஓய்வெடுக்கும்போது ருத்ரா அருகில் வந்து) ”அம்மா பார்க்” (என்று சொல்லும்போது அவள் கைகளில் மொபைலும் ஹெட்போனும் இருந்தது.)
கண்மணி: ”அந்த டேபிளில் இருந்து ஒரு நோட்டும் பேனாவும் எடுத்துட்டு வா. நான் உன்னை கூட்டிட்டு போறேன்.” (ருத்ரா எடுத்து வருகிறாள்.) கண்மணி: ”போற வழியில இந்த லிஸ்ட குடுத்துட்டுப் போய்டலாம்.”
ருத்ரா: ”என்ன லிஸ்ட் மா?”
கண்மணி: ”ப்ரொவிஷன் லிஸ்ட்” (என்று சிரித்துக்கொண்டே சொல்கிறாள். லிஸ்ட் எழுதத் தொடங்குகிறாள். ருத்ராவை அழைத்து…)
கண்மணி: ”அங்கே சாமி படத்துக்கிட்ட இருந்து 1,000 ரூபாயை எடுத்துட்டு வா.” (ருத்ரா அங்கிருந்து இரண்டு 500 ரூபாயை எடுத்துக்கொண்டு வருகிறாள். கண்மணி சற்று யோசித்து விட்டு ஒரு வாரத்திற்கு போட்ட லிஸ்டை இரண்டு வாரத்திற்கு மாற்றுகிறாள். 2000 ரூபாய் தேவைப்படுகிறது. ருத்ராவை அழைத்து 2000 ரூபாயை எடுத்துக்கொண்டு வரச்சொல்கிறாள்.. ருத்ரா கொண்டு வந்து தருகிறாள்.)
கண்மணி: ”ஒரு காலத்தில மாசத்துக்கே 2000 ரூபாய்தான் ஆனது. இப்ப 2 வாரத்துக்குக்கூட தாங்கமாட்டேங்குது.”
ருத்ரா : (ஒரு காதில் ஹெட்போன் மாட்டிய படியே) ”அன்னைக்கு அந்த 2000 வாங்காம இருந்திருந்தா, இன்னிக்கு இந்த 2000 ஆகிருக்காதுல்ல மா.” (இதைக்கேட்ட கண்மணி யோசித்துப் பார்க்கிறாள். அங்கிருந்த மொபைல் ஹெட்போனில் ஏதோ கேட்கிறது. அதை எடுத்து காதில் வைக்கிறாள். அதிலிருந்து ஒரு குரல்.)
”ஏதோ ஒரு கட்சிக்காரன் குடுக்கிற 2000மோ, 5000மோ, 10,000மோ உங்களுக்கு ஒருவாரம் சந்தோஷத்தைக் குடுக்கலாம். ஆனா அதுக்காக நீங்க குடுக்கிற விலை என்ன தெரியுமா? உங்களோட 5 வருஷ சந்தோஷம். நேர்மையான அரசியல்வாதிய நோட்ல இருக்கற காந்தித் தாத்தாக்குள்ள தேடாதீங்க. அரசியல் மாற்றம் நம்ம விரல்லதான் இருக்கு. நீங்க போடுற ஒரு சரியான ஓட்டு உங்க தலையெழுத்த மாத்திடும்னு மறந்துடாதீங்க.”
ஊழல் இல்லாத தமிழகம் காண நமது ஓட்டில் இருந்து துவங்குவோம்.