மத வியாபாரிகள் பித்தலாட்டம் அம்பலம்

பாரதத்தில் சிறுபான்மையினரின் வளர்ச்சி கணிசமாக கூடியுள்ளது என்கிறது 2011 சென்ஸஸ். ஆனால் ஆந்திர பிரதேசத்தில் மட்டும் கிறிஸ்தவர் எண்ணிக்கை (1971 லிருந்து 2011 வரைக்குமான ஒரு ஆய்வின்படி) குறைந்ததாகக் காட்டப் பட்டுள்ளது. மாறாக எஸ்.சி மக்கள் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. இதில் நடந்துள்ள மோசடி பற்றி ஒய்.எஸ்.ஆர்.சி.பி. கட்சி எம்.பியான ரகு ராஜூ பிரதமர் அலுவலக அமைச்சருக்கு எழுதிய கடிதம் மிகப் பெரிய விவாதமாகியுள்ளது.

பல ஆண்டுகளாகவே ஆந்திர மாநிலத்தில், ஹிந்து மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்திற்கு பெரிய அளவில் மத மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. அங்கே ஒரு மதத்திலிருந்து மற்றொரு மதத்திற்கு மாறுவதைக் கட்டுப்படுத்தவோ கண்காணிக்கவோ எந்த சட்டமும் கிடையாது. மத மாற்றத்தை பதிவு செய்ய கட்டாய ஏற்பாடும் கிடையாது. இதன் காரணமாக ஆந்திர மாநிலத்தில் ஹிந்து மதத்திலிருந்து கிறிஸ்தவத்திற்கு செய்யப்பட்ட பெரும்பாலான மாற்றங்கள் பற்றி எந்த அதிகாரபூர்வ பதிவும் கிடையாது. எஸ்.சி, கிறிஸ்தவர் என்ற சொற்கள் இரண்டும் ஒன்றுக்கொன்று மாற்றாகப் பயன்படுத்தப்பட்டு அரசின் நிதி சுரண்டப்படுவதால், நிஜ எஸ்.சி. மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது சேகரிக்கப்பட்ட விவரங்களால் இந்த சுரண்டல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

1971க்கும் 2011க்கும் இடையில் ஆந்திர மாநில மக்கள் தொகை 78.43 சதவீதம் உயர்ந்துள்ளது. இதே காலத்தில் கிறிஸ்தவ மக்கள் தொகை எண்ணிக்கை குறைந்துள்ளது மிகவும் ஆச்சரியத்தை அளிக்கிறது. அங்கே 1971-ல் 14.87 லட்சமாக இருந்த கிறிஸ்தவர்கள் 2011-ல் வெறும் 6.82 லட்சம்! எல்லா மாநிலத்திலும் சிறுபான்மையினரின் மக்கள் தொகை கூடுதலாக இருக்கும் போது ஆந்திராவில் மட்டும் கிறிஸ்தவர்கள் காணாமல் போவது ஏன்? ஏசுவே விளக்க வேண்டும்.

குண்டூர் மாவட்டத்தில்தான் மோசம்: 1971ல் 4.15 லட்சத்திலிருந்து 2011ல் வெறும் 0.89 லட்சமாக குறைந்துள்ளது. அனைத்து கிறிஸ்தவர்களும் எங்கே மறைந்து விட்டார்கள்? இது ஒரு அபத்தமான சூழ்நிலை. ஒரு கிராமத்தில் கிறிஸ்தவர்கள் எண்ணிக்கை பூஜ்ஜியம்! ஆனால் அதே கிராமத்தில் 11 சரச்சுகள்! இன்னொரு அபத்தம்: பிரகாசம் மாவட்டத்தின் பெடா அரவிடு மண்டலத்தில், 33 போதகர்களுக்கு ரூ. 5,000 அரசு உதவித் தொகை வழங்கியது. ஆனால் அந்த ஊரில் 2011ல் வெறும் 16 கிறிஸ்தவர்கள்தான். வெறும் 16 கிறிஸ்தவர்கள் உள்ள ஊரில் 33 போதகர்கள்!

குண்டூர் மாவட்டம் படு மோசம்: 1961 ல்5.24 சதவீதம் பேர் எஸ்.சி மக்கள்; 13.40 சதவீதம் கிறிஸ்தவர்கள். 2011 ல் எஸ்.சி எண்ணிக்கை 19.59 சதவீதமாக உயர்ந்துள்ளது, கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 1.84 சதவிதமாக ஆகிவிட்டது! தேர்ந்தெடுக்கப்பட்ட பதவி களில் இடஒதுக்கீடு, பரிந்துரைக்கப்பட்ட பதவிகள், வேலைகள், கல்வி வாய்ப்புகள், உதவித்தொகை, விடுதிகள், வீட்டுவசதி போன்ற பல வாய்ப்புகளையும், வசதிகளையும் பெற கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுபவர்கள், ஹிந்து- எஸ்.சி சாதி சான்றிதழ் பெற்றுள்ளனர்.

எஸ்.சி.களுக்கு அரசியல் சாசனம் வழங்கிய சிறப்பு வசதிகளை முற்றிலும் தவறாக பயன்படுத்தும் வேலை இது. தகவல் உரிமை பெறும் சட்டத்தின் மூலம், சந்திரண்ண கிறிஸ்துமஸ் கானுகா (Chandranna Christmas Kanuka) என்ற திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட கிறிஸ்துவர்களின் எண்ணிக்கை என்ன என்ற கேள்விக்கு, “தாழ்த்தப் பட்ட மக்கள் அனை வரும் கிறிஸ்தவர்களாகவே பார்க்கப்படுகி றார்கள். ஆகவே இந்த திட்டத்தில் அனைத்து தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் கிடைக்கும்படி ஆணை பிறப்பிக்கப்பட்டது” என்பது அரசாங்க அதிகாரிகள் கொடுத்த பதில்!

ஒருங்கிணைந்த பேராயர்கள் அமைப்பின் கூட்டம், மேற்கு கோதாவரி மாவட்டத்தில் ஜீலுகுமில்லி கிராமத்தில் 2019 சட்ட மன்றத் தேர்தலின் போது நடந்தது. மேற்படி கூட்டத்தில் ஒருங்கிணைந்த ஆந்திர பிரதேசத்தில் ஐந்து லட்சம் பேராயர்கள் பணியாற்றுவதாகவும், சுமார் இரண்டு கோடிக்கும் அதிகமான கிறிஸ்தவர்கள் வாழ்வதாகவும் அந்த அமைப்பின் செயலாளர் கே.ராஜேந்திர பிரசாத் கூறியது ஆழ்ந்து சிந்திக்க வைக்கிறது. இரண்டு கோடி கிறிஸ்தவர்கள் வாழ்வதாக கூறுகிறார்கள் இவர்கள்; மக்கள் தொகை கணக்கெடுப்பு எவ்வாறு 6.82 லட்சம் மட்டுமே காட்டுகிறது? அரசு விளக்கம் கொடுக்கவில்லை. வருவார் என்று பிரச்சாரம் செய்யப்படுகிற ஏசுவும் இது பற்றி வாய் திறக்க வரக் காணோம்..

கோவிட் 19 பேரழிவு நிவாரண நிதியாக ஆந்திர பிரதேச அரசு ரூ.34 கோடியை தலைக்கு ரூ.5,000 வீதம் 31,017 அர்ச்சகர்களுக்கும், 7,000 இமாம் / மௌல்விகளுக்கும், 29,841 பேராயர்களுக்கும் வழங்கியது. தாழ்த்தப்பட்ட / பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கொடுக்கப்பட்ட நிவராணத் தொகையை, ஹிந்து எஸ்.சி என சான்றிதழ் காட்டி இதே 29,841 பேராயர்களும் பெற்றுள்ளார்கள். இது சம்பந்தமாக சட்ட உரிமைகள் பாதுகாப்பு மன்றம் என்ற அமைப்பு மூலம் தாழ்த்தப்பட்ட மக்களின் தேசிய அமைப்பிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேற்படி புகாரில், பேரிடர் நிவாரண நிதி பெற்ற பேராயர்களில் 58.14 சதவீதம் பேர் எஸ்.சி. சான்றிதழ்கள் வைத்திருப்பதாகவும், 13.37 சதவீதம் பேராயர்கள் பிற்பட்ட வகுப்பு சான்றிதழ் வைத்திருப் பதாகவும் ஆதாரங்களுடன் புகார் அளித்துள்ளார்கள்.

புனரமைக்கவும், மராமத்துப் பணிகளை நடத்துவும் சர்ச்சுக்கு ரூ 5 லட்சம் வீதம் 76 சர்ச்சுகளுக்கு அரசு நிதி வழங்கியது. 2014 – 2019 ல், 817 சர்ச்சுகளுக்கு புனரமைக்க நிதி ஒதுக்கப்பட்டது. அவை அனைத்தும் எஸ்.சி. மக்கள் குடியிருக்கும் பகுதிகளில் உள்ள சர்ச்சுகளே! இது மறைமுகமாக தாழ்த்தப் பட்ட ஹிந்து மக்களை மத மாற்றம் செய்ய ஒரு குறுக்கு வழி. அரசே இந்த வழியில் போவதுதான் அக்கிரமம். அது மட்டு மல்லாமல், வெளிநாட்டு கிறிஸ்தவ என்.ஜி.ஓ மூலமாக கிடைக்கும் கோடிக்கணக்கான ரூபாய் நிதியை கொண்டு, கிறிஸ்துவ சுவிசேஷ லாபிகள் வெட்ககேடான முறையில் மத மாற்றம் செய்வது ஆந்திராவில் தாழ்த்தப்பட்ட / பிற் படுத்தப்பட்ட மக்களை நசுக்கி அழிவின் விளம்பிற்கு தள்ளுகிறது என சட்ட உரிமை பாதுகாப்பு மைய ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

– ஈரோடு சரவணன்