பாரதம் முழுவதும் உள்ள, 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், இரண்டுக்கும் மேற்பட்ட நோய்களினால் பாதிக்கப்பட்ட 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி, மார்ச் ஒன்றில் துவங்கியது. இந்த தடுப்பூசி திட்டத்தின் துவக்க நாளில் மட்டும் சுமார் 29 லட்சம் பேர் பதிவு செய்திருக்கின்றனர் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி போட்டுக்கொள்ள பதிவு செய்வதற்காக, www.cowin.gov.in என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. தகுதி உள்ளவர்கள் அந்த இணையதளத்திலும் ஆரோக்கிய சேது செயலியிலும் முன்பதிவு செய்யலாம். மொபைல் எண் வாயிலாக, குடும்பத்தினரின் பெயர்களையும் முன்பதிவு செய்ய முடியும். முன்பதிவின்போது, மூத்த குடிமக்கள் புகைப்பட அடையாள அட்டையையும், 45 வயதிற்கு மேற்பட்டோர் அடையாள அட்டையுடன் மருத்துவ சான்றிதழையும் தரவேற்றம் செய்ய வேண்டும்.
இதைத்தவிர, தடுப்பூசி மையங்களுக்கு நேரில் சென்றும், முன்பதிவு செய்யலாம். தடுப்பூசி போடப்படும் தனியார் மருத்துவமனைகளின் விவரங்களை https://www.mohfw.gov.in/pdf/PMJAYPRIVATEHOSPITALSCONSOLIDATED.xlsx என்ற இணைய முகவரியில் அறியலாம். தனியார் மருத்துவமனைகள் தடுப்பூசிக்கு ரூ. 250/- க்கு மிகாமல் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. www.maps.mapmyindia.com என்ற இணைய தளத்தில் நாடு முழுவதும் உள்ள கொரோனா தடுப்பூசி செலுத்தும் அரசு, தனியார் மையங்கள், எங்கெங்கு அமைந்துள்ளன என்ற விபரங்களை, வரைபடத்துடன் காணலாம்.
இதுவரை 1,48,54,136 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள், கண்காணிப்பாளர்களின் பயன்பாட்டுக்காகவே, கோ-வின் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அதனை பதிவிறக்கம் செய்யத் தேவையில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 540 அரசு மருத்துவமனைகள், 761 தனியார் மருத்துவமனைகள் என 1,300 மையங்களில் தடுப்பூசி போடப்படுகிறது. தடுப்பூசி போட்டவர்கள் 30 நிமிடங்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டு வீட்டிற்கு அனுப்பப்படுகின்றனர். நமது நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட உலகின் மிகச்சிறந்த தடுப்பூசியின் நம்பகத்தன்மையை மக்களுக்கு உணர்த்தும் விதமாக பிரதமர், துணை ஜனாதிபதி, ஆளுனர் உட்பட பலர் போட்டுக்கொண்டுள்ளனர்.