பாரதியார் தன் 23-ம் வயதில் சகோதரி நிவேதிதையை சந்தித்தார். அப்போது ‘உங்களுடைய மனைவியை அழைத்து வரவில்லையா’ என நிவேதிதை கேட்டார். அதற்கு ‘எங்கள் சமுதாய வழக்கப்படி மனைவியை வெளியில் அழைத்து செல்வதில்லை. மேலும் மனைவிக்கு அரசியல் குறித்து ஏதும் தெரியாது’ என்றார் பாரதியார்.
இதை கேட்ட சகோதரி நிவேதிதை மனம் வருந்தினார். அவர் பாரதியாரிடம் ‘உங்கள் மனைவிக்கே நீங்கள் சம உரிமையும், விடுதலையும் கொடுப்பதில்லை. இந்த நிலையில் நீங்கள் நாட்டுக்கு எப்படி விடுதலை பெற்றுத் தருவீர்கள்’ என கேட்டார்.
இந்த நிகழ்வுதான் பாரதியாருக்கு, பெண்கள் பற்றிய சிந்தனையை மாற்றியமைத்தது. குருமணி என அவரை புகழ்ந்த மகாகவி பாரதியார், தன்னுடைய ‘சுதேச கீதங்கள்’ நூலை அவருக்கு அர்ப்பணித்தார்.
சகோதரி நிவேதிதையை சந்தித்த பின்னர் பாரதியின் தேசபக்திக் கனல் இன்னும் கொழுந்துவிட்டு எரிந்தது. பெண் விடுதலை குறித்த அவரது கண்ணை திறந்தவர் நிவேதிதை என்றால் அது மிகை அல்ல.
அந்த காலத்திலேயே பகல் 12 முதல் மாலை 4 மணிவரை பெண்களுக்கான பள்ளியை நடத்தினார்.
கல்வியுடன் அவர்களை நகருக்கு அழைத்து சென்று வெளியுலக அறிவையும் வளர்த்தார் நிவேதிதை. இன்று பெண்கள் கல்வியை கற்க முடிகிறது, சம்பாதிக்க முடிகிறது. தங்கள் எண்ணங்களை மற்றவர்களுக்கு தைரியமாக புரியவைக்க முடிகிறது என்றால் அதற்கு பின் சகோதரி நிவேதிதை போன்றோரின் துணிச்சல் மிக்க பெண்களின் உழைப்பும், தியாகமும் உள்ளதை யாரும் மறுக்க முடியாது.
சகோதரி நிவேதிதையின் பிறந்த தினம் இன்று.