இந்த முறை, வாசகர்களுடன் தன் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்பவர் ஓர் அசாதாரணமானவர். ஆமாம், முறைசார் கல்வி ஏதோ காரணத்தினால் தடைபட்டுப் போனால் நொந்து கொண்டு நொடித்துப் போனவர்கள் பலர். அதற்கு நேர் எதிர்-நம்பிக்கையும் உற்சாகமும் தான் இவருடைய கல்வியும் தகுதிச் சான்றிதழும்..
இன்னொன்றும் உண்டு. தான் இன்னாரின் வாரிசு என்று பரம்பரைப் பெருமை பேசிக் கொண்டு வாழ்க்கை நடத்துபவர்கள் மத்தியில் சொந்த சொந்தத் திறமையைக் கொண்டே முன்னேற்றம் அடைந்து வருபவர் இவர்.
பத்திரிக்கையாளர் – திரைத் துறை – குறும்பட இயக்குனர் என்று தன் பாதையைத் தனக்குத் தானே செதுக்கிக் கொண்டு முன்னேறி வருகிறார், வித்தகன் எஸ் சேகர். விஜயபாரதம் சார்பாக அவருடன் உரையாடுபவர் எம் ஆர் ஜம்புநாதன். அவர் பேட்டி இன்றும் நாளையுமாக இரண்டு பகுதிகளாக வெளி வரும். முதல் பகுதி இன்று.
வாழ்க்கை என்ற பல்கலைக் கழகத்தில் தான் படித்தேன் என்கிறீர்கள். அப்படி நீங்கள் கற்றுக் கொண்ட ஒன்றைக் குறிப்பிடுங்களேன்…..
மறக்க இயலா வாழ்வியல் அனுபவம். அற்ற குளத்து அறுநீர்ப் பறவை போல்” எனத் தொடங்கும் ஒளவையின் மூதுரை நினைவுக்கு வருகிறது.
சென்னையில் பழைய ஜார்ஜ் டவுனில் வெங்கடேச மேஸ்திரி தெருவில் எங்கள் பூர்வீக வீடு மிகப் பெரியதாக இருந்தது. நான் குழந்தையாக இருந்த போது அந்த வீடு ஒரு சத்திரம் போல எப்போதும் உறவினர்களால் நிறைந்திருக்கும். கணக்கு பாராமல் அவர்களுக்காக செலவு செய்தவர் என் அப்பா. களைப்பு அறியாமல் அவர்களுக்கு சமைத்துப் போட்டவர் என் அம்மா.
குடும்பத்தின் நிலை மாறியது. செல்வம் குன்றியது. அந்த பூர்வீக வீட்டை விற்று விட்டு வேறொரு வீட்டுக்குக் குடி பெயர்ந்தோம். அதன் பிறகு எங்கள் வீட்டுக்கு உறவினர்கள் வருகை குறைந்து போனது.
என் இன்ப துன்பங்களில் பங்கேற்ற உண்மையான உறவு என் நல்ல நண்பர்களே!
அந்தப் பல்கலைக் கழகத்தில் கற்றுக் கொடுத்த சில ஆசிரியர்கள் …
அம்மாவிடம் இருந்தே தொடங்குவேன்.. பெண்களை மதிக்க வேண்டும். அவர்களைச் சமமாக நடத்த வேண்டும், சிந்தித்துச் செயல்படு. வாயைச் சுருக்கி பிறர் கருத்தைக் கேட்க காதைத் திறந்து வைத்துக் கொள்., நாம் செய்யும் நன்மை தீமைகளைக் கடவுள் சாட்சியாக இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறார், தெய்வத்தின் தீர்ப்பிலிருந்து யாரும் தப்ப முடியாது என்பவை சில.
என் அப்பா தலைமைச் செயலகத்தில் பச்சை மையில் கையெழுத்திடும் Gazetted officer ஆகப் பணியாற்றியவர். அப்படி இருந்தும் அவர் எப்போதும், எவரிடமும் கையூட்டு வாங்கியதில்லை! செய்யும் தொழிலில் நேர்மை, சமூகத்தில் நற்பெயர் நிலைக்க வாழ்தல், ஒழுக்கமான வாழ்க்கை முறை ஆகியவை என் அப்பாவிடம் நான் கற்றுக் கொண்ட பாடங்கள்.
என் நெருங்கிய நண்பன் ‘சிநேகா ‘ பாலாஜி என்கிற கணேசனிடம் நான் கற்ற நல்ல குணங்கள்… தன்னால் இயன்ற உதவிகளை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் எல்லோருக்கும் செய்ய வேண்டும், உதவியை வாங்கியவரிடம் நன்றியை எதிர்பாராத பெருந்தன்மை, கண்ணியமான நடத்தை ஆகியவை.
வெவ்வேறு துறைகளில் பணி புரிந்த அனுபவங்கள்..
இப்போதைய பணி தொடர்பான அனுபவங்களையே சொல்கிறேன். சினிமாவுடன் ஒப்பிடுகையில் வெப் சீரிஸின் முதலீடு குறைவு. எனவே வெப்சீரிஸ் இயக்குனர் வாய்ப்பு கிடைப்பது சற்று எளிது. ஒரு நல்ல வெப்சீரிஸ் டைரக்டர் ஆவதே என் இலக்கு! இந்த இலக்கை நோக்கிய பயணமாக நான் டைரக்ட் செய்த குறும் படம்தான் “ஆம்பள புத்தி. ”
நான் சினிமா தொழில்நுட்பக் கல்வி பயின்றதும் இல்லை. எந்த இயக்குநரிடமும் உதவி இயக்குனராகப் பணிபுரிந்ததும் இல்லை. இவ்விரண்டும் இல்லாதவர்கள் எந்தப் படமும் இயக்க முடியாது என பலர் என்னைப் பயமுறுத்தினர். ஆனாலும் எனக்கு நம்பிக்கை இருந்தது. என் நம்பிக்கையின் காரணம் பார்த்துப் பார்த்தே பல தொழில்களைப் பயின்றவன் நான்!
முதன்முதலில் பத்திரிகைத் துறை ஆர்வத்துடன் வேலை தேடியபோது எனக்கு எந்த வேலையும் தெரியாது. “ப்ரூப் ரீடிங் தெரியுமா? என கேட்டார்கள். ஏதோவொரு நம்பிக்கையில் “தெரியும் ” என்றேன். வேலையில் சேர்ந்த பிறகு ஏற்கெனவே ப்ரூஃப் ரீடராக இருந்தவர்கள் எப்படி பிழை திருத்துகிறார்கள் என்று பார்த்துக் கற்றேன்.
பிறகு ரிப்போர்ட்டர் ஆக விரும்பினேன். எனக்கு சுருக்கெழுத்து தெரியாது. சுருக்கெழுத்து தெரியாமல் செய்தியாளர்கள் எப்படி செய்தி திரட்டுகிறார்கள் என்பதையும் பார்த்துக் கற்றேன். பின் செய்தியாளரும் ஆனேன். பத்திரிகைத் துறையில் அடுத்த உயர் படிநிலை சப் எடிட்டர். பார்த்து கற்ற அனுபவத்தில் சப் எடிட்டரும் ஆனேன். பிறகு ஒரு இதழைத் தொடக்கம் முதல் வெளியிடுதல் வரை முழுப் பொறுப்பாற்றும் பொறுப்பாசிரியரும் ஆனேன்!
உங்கள் அனுபவங்களின் அடிப்படையில் வெற்றிக்கான பார்முலா ..?
பழுதற்ற நோக்கம் , கற்றுக் கொள்ள தணியாத ஆர்வம், கூர்ந்து கவனித்தல், விடா முயற்சி என்பவை மூலப் பொருள்கள். இப்படி லட்சியத்தை நோக்கி நீங்கள் நம்பிக்கையுடன் நடைபோடும் போது, உங்களுக்கு உதவக் கூடிய மனிதர்களும் இறை அருளும் சேர்ந்து விட்டால் உங்கள் வெற்றியை யார் தான் தடுக்க முடியும்