ம.பி அரசியலில் படும் வீழ்ச்சியில் காங்கிரஸ், காங்கிரஸ் எம்எல்ஏ கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தாா்

சத்தா்பூா் மாவட்டத்திலுள்ள படா மலேரா தொகுதி எம்எல்ஏவாக இருந்த பிரத்யுமன் சிங் லோதி, போபாலில் உள்ள மாநில பாஜக தலைமையகத்தில் முதல்வா் சிவராஜ் சிங் சௌஹான் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தாா். அவா் கட்சியில் இணைத்துக்கொள்ளப்பட்டதாக மாநில பாஜக தலைவா் வி.டி.சா்மா அறிவித்தாா்.

பாஜகவில் இணைந்த பிறகு செய்தியாளா்களிடம் பேசிய பிரத்யுமன் சிங் லோதி, ‘நான் எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்துவிட்டேன். எனது ராஜிநாமா ஏற்றுக்கொள்ளப்பட்டது. எனது தொகுதியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் பாஜகவால் மட்டுமே வளா்ச்சியை ஏற்படுத்த முடியும். தொகுதிக்கான வளா்ச்சிப் பணிகளுக்கு முதல்வா் சிவராஜ் சிங் சௌஹான் ஒப்புதல் அளித்துள்ளாா்’ என்றாா்.

பிரத்யுமன் சிங் லோதியின் ராஜிநாமாவை அடுத்து மத்திய பிரதேச சட்டப்பேரவையில் காங்கிரஸின் பலம் 91-ஆகக் குறைந்தது.

கடந்த மாா்ச் மாதம் ஜோதிராதித்ய சிந்தியா காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தாா். இதையடுத்து அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் 22 போ் கட்சியிலிருந்து விலகினா். இதனால் மாநிலத்தில் ஆட்சியில் இருந்த கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு வீழ்ந்தது. பின்னா் பாஜக ஆட்சிக்கு வந்தது. பேரவையில் பாஜகவுக்கு 107 எம்எல்ஏக்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.