97 தேஜஸ் போர் விமானங்கள், 150 ஹெலிகாப்டர்கள்: ரூ.2.23 லட்சம் கோடி மதிப்பிலான ராணுவ தளவாடங்கள் வாங்க ஒப்புதல்

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் ரூ.2.23 லட்சம் கோடி மதிப்பிலான ராணுவ தளவாடங்களை கொள்முதல் செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

சீனாவுடன் கிழக்கு லடாக் எல்லையில் கடந்த 3 ஆண்டுகளாக மோதலை சந்தித்துள்ள நிலையில் மிகப் பெரிய அளவிலான ராணுவ தளவாட கொள்முதலுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மொத்தகொள்முதலில் 98 சதவீதம் உள்நாட்டு நிறுவனங்களிடம் கொள்முதல் செய்யப்படவுள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை தற்சார்பு இந்தியா இலக்குகளை அடைய உத்வேகம் அளிக்கும்.

விமானப்படைக்கு 97 தேஜஸ்போர் விமானங்கள், விமானப்படை மற்றும் தரைப்படை பயன்பாட்டுக்கு 156 பிரச்சாந்த் இலகு ரக ஹெலிகாப்டர்கள் வாங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன. விமானப்படைக்கு 83 தேஜஸ் போர்விமானங்களை வாங்க, எச்ஏஎல் நிறுவனத்திடம் ரூ.48,000 கோடி மதிப்பில் பாதுகாப்புத்துறை அமைச்சகம் கடந்த 2021-ம் ஆண்டுஒப்பந்தம் செய்தது. விமானப்படைக்கு வாங்கப்படும் தேஜஸ் போர் விமானங்களின் எண்ணிக்கை 180-ஆக அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

விமானப்படையில் உள்ள சுகோய் போர் விமானங்களை எச்ஏஎல் நிறுவனம் மூலம் மேம்படுத்தும் திட்டத்துக்கும் ஒப்புதல்அளிக்கப்பட்டுள்ளது. விமானப்படையிடம் தற்போது 260 சுகோய் போர் விமானங்கள் உள்ளன. அதில் 84 விமானங்களில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ரேடார்கள் மற்றும் ஏவியானிக்ஸ் கருவிகளை பொருத்தி மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. எதிரி நாட்டு பீரங்கிகளை சுட்டு வீழ்த்த பயன்படும் ஏடிஎம் டைப்-2 மற்றும் டைப்-3 குண்டுகளையும் வாங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பீரங்கிகளில் பயன்படுத்தும் 155 எம்எம் குண்டுகளை வாங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. டி-90 பீரங்கி வாகனங்களில் பயன்படுத்துவதற்கான ஏடிடி கருவிகள், மற்றும் டிஜிட்டல் பசால்டிக் கம்ப்யூட்டர்கள் வாங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கடற்படை பயன்பாட்டுக்காக எதிரிநாட்டு போர்க்கப்பல்களை அழிக்கும் நடுத்தர ரக ஏவுகணைகளை வாங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

விமானப்படை மற்றும் தரைப்படைக்கு தேவையான இலகு ரகஹெலிகாப்டர்களை எச்ஏஎல் நிறுவனத்திடமிருந்து வாங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.