திருவெம்பாவை – 14

காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாமாடச்
சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடிச்
சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதி திறம்பாடி அந்தமா மாபாடிப்
பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்
பாதத் திறம்பாடி ஆடேலோ ரெம்பாவாய்.
விளக்கம்;
விஞ்ஞானம் கூறுவது என்ன ? மனிதனும் ஒரு  விலங்கு என்று. அம்மனித னுக்குள்ளிருக்கும் விலங்  குத்தன்மைதனை ஒடுக்கி, இறுக்கி  இறைத்தன்மையை ஈவது  மெய்ஞ்ஞானம். தெய்வத்தன்மையை அடைவது மனிதனுக்கே உரிய பண்பு.  அம்மனிதருள்ளும் ஒரு சிலருக்கே அகத்தேடலில், தன்னுள்ளே தெய்வத் தேடலில் இறங்கும் யோகம் கிட்டுகிறது.  ‘தினந்தோறும் கோடிக்கணக்கான புழுபூச்சிகள் தோன்றி மறைகின்றன. நாமும் அவற்றைப் போலத் தோன்றி மடிந்து என்ன பயன்?’ என்று வீரத்துறவி மனிதன் அடுத்தக்கட்ட உயர்வுச் சிந்தனை மேற்கொண்டு தன்னையும், நாட்டையும் காக்கும் வழிவகை சொல்கிறார்.  இறையுணர்வு இல்லாமல், இரைதேடி, புகழ் தேடி, செல்வம் தேடி, உடலின்பம் தேடி, அவற்றையே வாழ்வின் நோக்கமாகக் கொண்டு எண்ணற்றோர் வாழ்க்கையை விரயமாக்குகின்றனர்.
அவ்வாறு சிவனையே போற்றும் செம்மனம் கொண்டவராகத் தாம் இருப்பதில் மார்கழி நீராட செல்லும் நங்கையர்கட்கு  மகிழ்ச்சி. இதனையே ‘பேதித்து வளர்த்தெடுத்த பெய்வளை’ என்று புகழ்கின்றனர் இந்தப் பூவையர் திருவெம்பாவை பதினான்காம் பாசுரத்தில். .
“‘நாம் எல்லோரும் குளிர்ந்த நீரில் நீராட புகுகிறோம். நீராடும்கால்,  நமது காதிலுள்ள அணிகள்  ஆடுகின்றன; கழுத்தில் நகைகளை அணிந்திருக்கிறோமே, அவை ஆடுகின்றன; மலர்கள் அணிந்த நமது  கூந்தல் அலை அலையாய் அசைகின்றன; இம்மலர்களை மொய்க்கும்   வண்டுகள் ஆடுகின்றன.
நீராடும் போது வாழ்வியலில் நம்மைக் உயர்த்தி, உய்ய வழிகாட்டும்   சிற்றம்பல திருமறைப் பொருளான ஆடல் வல்லானைத் துதிப்போம்;  பாடுவோம். வேதத்தின்  பொருளாக அவன்  நின்ற விதத்தைப் பாடுவோம். அவனே  ஆதியும் அந்தமும் ஆன எல்லாமும் ஆனா  வகையினை பாடுவோம்.
அவனை மட்டுமா பாடுவோம். தனது கைகளில் அழகுமிகு வளைகளை அணிந்த உமையவள்  நம்மை மட்டும் தனித்துவம் கொண்டோராக வேறுபடுத்தி வளர்த்தெடுத்தாளே, அவளது திருபாதங்களின் மேன்மையையும் துதித்தபடியே,  பாடியபடியே நீராடலாம், வாரீர்” என்று பாடுகிறார்கள்.