8 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

கருட பஞ்சமியையொட்டி, பக்தர்கள் காஞ்சிபுரத்தில் குவிந்ததால் அத்திவரதரை தரிசிக்க திங்கள்கிழமை சுமார் 8 மணி நேரமானது.

அத்திவரதர் பெருவிழாவின் 36-ஆவது நாளான திங்கள்கிழமை பெருமாள் இளஞ்சிவப்பு நிறப் பட்டாடையிலும், அதே நிற அங்கவஸ்திரத்திலும் காட்சியளித்தார். பெருமாளுக்கு உகந்த கருட பஞ்சமி தினமாக திங்கள்கிழமை இருந்ததால் காஞ்சிபுரம் நகரம் முழுவதுமே கட்டுக்கடங்காத கூட்ட நெரிசல் காணப்பட்டது. நகரப் பேருந்து நிலையத்தில் போக்குவரத்துப் போலீஸார் கோயிலில் கூட்டம் அதிகமாக இருப்பதால் செவ்வாய்க்கிழமை வந்து சுவாமி தரிசனம் செய்யுமாறு ஒலிபெருக்கி மூலம் அறிவித்துக் கொண்டிருந்தனர்.

மிக முக்கிய பிரமுகர்கள் வரிசையில்  ஒரு மணி நேரத்திலும், முக்கிய பிரமுகர்கள் வரிசையில் 3 மணி நேரத்திலும் அத்திவரதரை தரிசனம் செய்ய முடிந்தது. பொது தரிசனப் பாதையில்  சென்றால் அதிக நேரமாகலாம் என நினைத்து முக்கிய பிரமுகர்கள் வரிசையில் செல்ல பக்தர்கள் பலரும் முயன்றதால் அந்த வரிசையில் அதிகமான கூட்டம் காணப்பட்டது.

முக்கிய பிரமுகர்கள் வரிசையில் நின்று கொண்டிருந்த சிலர் வைத்திருந்த சிறப்பு அனுமதிச் சீட்டுகளை ஸ்கேன் செய்த போது அவை போலியானவை என்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, போலி அனுமதிச் சீட்டுகளை பக்தர்களிடம் கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததாக 13 பேரிடம் விஷ்ணுகாஞ்சி போலீஸார் விசாரணை நடத்தினர்.

இரவு 7 மணிக்கு மேல் காஞ்சிபுரத்தில் பலத்த மழை பெய்தது. கொட்டும் மழையில் நனைந்தபடி வந்து பக்தர்கள் அத்திவரதரை தரிசித்தனர். இரவு 10 மணி வரை சுமார் 3.20 லட்சம் பேர் அத்திவரதரை தரிசித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *