பாரத மக்கள் ஆரோக்கியத்துடன் முன்னேறிட பாடுபடும் ஆரோக்கிய பாரதி

நூறாண்டுகளாக சங்கப்பணி மட்டுமல்லாது, பல்வேறு வகையான சமுதாயப் பணிகளையும், ஆர்.எஸ்.எஸ் தொடர்ந்து செய்து வருகிறது. சங்கத்தில் பயிற்சி பெற்ற கார்யகர்த்தர்கள் சமுதாயத்திற்கு பயன்படும் வகையிலான பல்வேறு அமைப்புகளை தொடங்கி, மக்கள் பயன்பெறும் வகையில் பணி செய்து வருகின்றனர். இந்த வாரம் நம் நாடும், பாரத மக்களும் ஆரோக்கியத்துடன் அனைத்து துறைகளிலும் முன்னேறிட பாடுபடும் ஆரோக்கிய பாரதி பற்றி அறிவோம்…

ஒரு மனிதன் அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவற்றை பெறவும் தன் வாழ்க்கையில் பெற்ற செல்வங்களை அனுபவிக்கவும், மகிழ்ச்சி, செழிப்பு, முன்னேற்றம் போன்றவற்றை பெற்றிடவும், ஆரோக்கியம் மிக மிக அவசியம்.

மேலும் ஒரு நாடு செழிப்பும், வளர்ச்சியும் பெற்று முன்னேற்றம் பெற, அந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு தனி மனிதரின் ஆரோக்கியமும் அத்தியாவசியமாகின்றது.
இதனை கருத்தில் கொண்டு, இதற்கு செயல் வடிவம் கொடுத்து, நம் நாடும், மக்களும் ஆரோக்கியத்துடன் அனைத்து துறைகளிலும் முன்னேறிட, 2002 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 2 ஆம் தேதி அன்று, “தன்வந்திரி ஜெயந்தி” திருநாளில், ஆரோக்கிய பாரதி அமைப்பு கேரள மாநிலம் கொச்சியில் ஆரம்பிக்கப்பட்டது.


மத்தியப்பிரதேச மாநிலம் போபாலை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஆரோக்கிய பாரதி எனும் தன்னார்வ தொண்டு நிறுவனம், தேச மக்களின் ஆரோக்கியம் மற்றும் முன்னேற்றத்திற்காக, பாரம்பரியம் மிக்க நம் தேசியத்தின் பண்டைய ஆரோக்கிய வாழ்க்கை முறையை மக்களுக்கு கற்பித்தல், பாரம்பரிய மற்றும் நவீன மருத்துவ அணுகுமுறையில் மக்களின் நோய் தீர்த்தல், பொது மக்களுக்கும், பள்ளி மாணவ -மாணவியருக்கும் சில எளிய பக்க விளைவுகள் இல்லாத, நம் பாரம்பரிய வீட்டு மருத்துவம், யோகா, அவசரகால முதலுதவி சிகிச்சை, சுத்தம் -சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வுகளை, தகுந்த ஆசிரியர்கள் மூலம் போதித்து, ஆரோக்கிய விழிப்புணர்வு பெற வைத்து, அவர்களை ஆரோக்கிய மித்திரர்களாக உருவாக்குதல் மற்றும் அவர்கள் மூலமாக அவர்கள் குடும்பத்தினர், அவர்கள் வாழும் இடத்தில் உள்ள பள்ளி செல்லும் குழந்தைகள், பொதுமக்கள் ஆகியோரையும் ஆரோக்கிய விழிப்புணர்வு பெற வைத்தல், பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்தை பாதுகாத்தல் போன்ற பல்வேறு விஷயங்களில் கவனம் செலுத்துகிறது.

ஆரோக்கிய பாரதியின் இந்த முயற்சிக்கு வலுசேர்க்க, சமுதாயத்தின் ஆரோக்கியத்தில் அக்கறையும், ஆர்வமும் கொண்ட சமுதாய சமர்ப்பண குணத்துடன் உள்ள நூற்றுக்கணக்கான தன்னார்வ தொண்டர்கள் (ஆரோக்கிய மித்திரர்கள்) காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பல இடங்களில், பல்வேறு விதமான பணிகளை செய்து வருகின்றனர்.

இவர்கள் மக்களுக்கு ஆரோக்கியம் சார்ந்த தினசரி, வார மற்றும் மாத நிகழ்ச்சிகள் நடத்துதல், விசேஷ நிகழ்ச்சிகள், வகுப்புகள் போன்ற பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளை, அப்பகுதி மக்களுடன் இணைந்து நடத்தி, ஆரோக்கிய விழிப்புணர்வை உண்டாக்குகின்றனர்.நம் தேசம் முழுவதும் இப்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

உண்மையான பாரதம் கிராமங்களில்தான் வாழ்கிறது, நம் தேசத்தின் 80% மக்கள் இன்று கிராமங்களில் தான் வாழ்கின்றனர். ஆனால் இந்த 21ஆம் நூற்றாண்டில் கூட, கிராமங்களில் வாழ்பவர்களின் ஆரோக்கியம் இன்றும் கூட கேள்வி குறியாகத்தான் உள்ளது.

சரியான மருத்துவ விழிப்புணர்வு, கண்காணிப்பு போன்றவை இல்லாததால், இன்றும் நம் கிராமங்களில் உள்ள மக்கள் அவதியுறுகின்றனர். முறையான சிகிச்சை இல்லாமல் சிறு நோய்கள் கூட பெரியதாக வளர்ந்து, அவர்களின் உயிரை குடிக்கின்றது.


நகரங்களிலோ மேற்கத்திய கலாசார மோகம், மனிதர்களின் வாழ்க்கை முறையை சார்ந்த புதிய வகை வியாதிகளுக்கு வித்திடுகிறது. இவைகள் மட்டுமின்றி, மக்களிடம் உள்ள சுகாதார விழிப்புணர்வு குறைவு.

ஆரோக்கியத்தில் அலட்சியம், போதிய கல்வியறிவு இல்லாமை, சத்துணவு குறைபாடு, பல்வேறு தீய பழக்கவழக்கங்களுக்கு அடிமையாகுதல், மனம் தீய வழிகளில் அலை பாய்தல் போன்ற பல்வேறு காரணிகளும், மனிதனை நோயுற செய்கின்றன.

இவைகள் அனைத்திற்கும் நாம் நம் முன்னோர்கள் வாழ்ந்து காட்டிய பாரத கலாச்சாரத்துடன் பிண்ணிப்பிணைந்த நம் உன்னதமான தெய்வீகம் மற்றும் ஆரோக்கியம் சார்ந்த அமைதியான வாழ்க்கை முறையை விடுத்து, மேற்கத்திய கலாசாரத்தை பின்பற்றுவதும்கூட, ஒரு முக்கியமான காரணமாக அமைந்துவிட்டது என்றால், அது மிகை அல்ல.

எனவே நாம் ஆரோக்கியமாக வாழ, தேசத்தை முன்னேற்ற, நம் பாரம்பரிய வாழ்க்கை முறையை மீட்டெடுக்க வேண்டும் என்பதில் ஆரோக்கியபாரதி உறுதி கொண்டுள்ளது.


“நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்”

எனும் திருவள்ளுவரின் வாக்குக்கு ஏற்ப நோய் வந்த பிறகு, அதற்கு உரிய மருத்துவம் செய்வது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல், அவசியம் தான் என்றாலும், அந்த நோய்கள் வரும் முன் தடுப்பது, அது வராமல் காப்பது, குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துதல், அதைவிட மிக அவசியம் என்பதை முக்கிய குறிக்கோளாகக் கொண்டு, அதை நோக்கியே ஆரோக்கிய பாரதி அமைப்பு செயல்பட்டு வருகிறது.

“ஆரோக்கியம்” என்பது நம் உடல் ஆரோக்கியம் மட்டும் அல்ல, அது நம் மன ஆரோக்கியத்தையும் சார்ந்தது. ஆரோக்கியமான வாழ்க்கை முறை என்பது ஒவ்வொரு தனி மனிதனுக்கும் வித்தியாசப்படும், அது அவர்களின் வாழ்க்கை முறை, வசிக்கும் பகுதி, செய்யும் தொழில், வயது, மன நலம், உடல் நலம், ஆன்மீகம், சுற்றுப்புற சூழ்நிலை போன்ற பல்வேறு காரணிகளுக்கு ஏற்ப மாறுபடும்.

ஆயினும் ஆரோக்கிய விழிப்புணர்வும், அதை ஒட்டிய சேவைகளும், நம் தேசத்தில் உள்ள ஒவ்வொரு கடைசி குடிமகனுக்கும் சென்று சேர்வதை நாம் உறுதி செய்ய வேண்டும் எனும் உயர்ந்த இலக்கோடு, ஆரோக்கிய பாரதி அமைப்பு ஆரோக்கியம் சார்ந்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்சிகளை, நம் தேசம் முழுவதும் நடத்தி வருகிறது.

உதாரணமாக ஆரோக்கிய மித்ரா பயிற்சி வகுப்புகள், பள்ளிகள் சார்ந்த பல்வேறு ஆரோக்கிய நிகழ்ச்சிகள், நம் கிராமம் – ஆரோக்கிய கிராமம், ஆரோக்கிய விழிப்புணர்வு பேரணி, யோகா, சூரிய நமஸ்காரம், மூலிகை செடிகளையும் அதன் பலன்களையும் மக்களுக்கு அறிமுகம் செய்தல், வீட்டு மருத்துவம், முதலுதவி சிகிச்சைகள், ஆபத்து காலத்தில் மக்களுக்கு மருத்துவம் மற்றும் அனைத்து உதவிகளையும் செய்தல், ஆரோக்கியம் சார்ந்த புத்தக வெளியீடுகள், மருத்துவ மாணவர்களை ஆரோக்கிய சேவையில் ஒருங்கிணைத்தல், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விசேஷ ஆரோக்கிய நிகழ்சிகள், கர்ப சம்ஸ்கார், தன்வந்திரி ஜெயந்தி, சர்க்கரை நோயில்லா பாரதம், உலக யோகா தினம், ஆரோக்கிய சம்பதா, பாரதிய ஸ்வச் சிந்தனா, கண் தானம் மற்றும் ரத்ததான விழிப்புணர்வு நிகழ்சிகள் நடத்துதல், மருத்துவ முகாம்கள், ஆரோக்கிய பயிலரங்கங்கள் நடத்துதல் போன்றவைகள் அவற்றில் சில.

ஆரோக்கியபாரதி உங்களை அன்புடன் வரவேற்கிறது
எங்களுடன் ஆரோக்கிய மித்திரர்களாக இணைந்து, நம் தேசத்திற்கான ஆரோக்கிய தொண்டாற்றுதல், மருத்துவர்கள் எங்கள் ஆரோக்கிய மித்திரர்களுக்கும், மக்களுக்கும் ஆரோக்கிய வாழ்வு வாழவும் வழி காட்டுதல், தங்கள் கிராமம், வாழும் பகுதி / அருகில் உள்ள பள்ளிகளுக்கு ஆரோக்கிய விழிப்புணர்வு ஏற்படுத்துதல், ஆரோக்கிய பாரதியின் பல்வேறு நிகழ்சிகளில் பங்கு பெறுதல், ஆரோக்கிய பாரதியின் மக்கள் நலன் சார்ந்த விஷயங்களுக்கு நிதியுதவி செய்திடல் போன்ற தேசத்தை வலிமையாக்கும் நம் ஆரோக்கிய பாரதியின் சீரிய செயல்களில் பங்கு பெற்றிட ஆரோக்கிய பாரதி உங்களை அன்புடன் அழைக்கிறது.

கட்டுரையாளர்:- ச. கார்த்திகேயன்

சென்னை மகாநகர் ஒருங்கிணைப்பாளர்,

ஆரோக்கிய பாரதி