ஆங்கிலேயர் ஆட்சி காலம் முதல் தற்பொழுது வரை தொழிலாளர் சம்மந்தமாக செயல்பாட்டில் இருந்த 29 மத்திய சட்டங்களை 4 வகைகளாக தொகுத்து, 2025 ஆம் ஆண்டு நவம்பர் 21 முதல், நாடு முழுவதும் மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.
அவை பின்வருமாறு,
1. ஊதியத் தொகுப்பு, 2019
2. சமூகப் பாதுகாப்பு தொகுப்பு, 2020
3. தொழில் உறவுகள் தொகுப்பு, 2020
4. பணியிட பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் தொகுப்பு, 2020
1991 ஆம் ஆண்டு தனியார் மயம், தாராள மயம், உலக மயம் கொள்கைகள் அமல்படுத்தப்பட்டதால் ஏற்பட்ட தாக்கத்தின் பின்னணியில், தொழிலாளர்களுக்கான இரண்டாவது தேசிய ஆணையம் மொரார்ஜி தேசாய் அமைச்சரவையில், தொழிலாளர் துறை அமைச்சராக செயல்பட்ட ரவீந்திர வர்மா தலைமையில், 1999 ஆம் ஆண்டு அக்டோபர் 15 அன்று அமைக்கப்பட்டது.
அந்த ஆணையம் மத்திய தொழிற்சங்கங்கள், மாநில மற்றும் பிராந்திய தொழிற்சங்கங்கள், அரசு மற்றும் தனியார் தொழில் நிறுவனங்கள், வேலை அளிப்பவர்கள், மாநில அரசுகள் உள்பட தொழிலாளர் சட்டங்களுடன் தொடர்புடைய அனைத்து தரப்பினரின் கருத்துக்களை கேட்டு, அதன் அடிப்படையில் தொழிலாளர் சட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்களை அறிக்கையாக 2002 ஆம் ஆண்டு ஜூன் 1 அன்று மத்திய அரசிற்கு சமர்ப்பித்தது.
தொழிலாளர் நலனை பாதுகாக்க, அந்த அறிக்கையின் அடிப்படையில் தொழிலாளர் சட்டங்களை புனரமைக்க வேண்டுமென பாரதிய மஸ்தூர் சங்கம் உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்களும், 2002 ஆம் ஆண்டு முதல் போராடி வந்த நிலையில், தற்பொழுது மேற்கண்ட தொழிலாளர் சட்ட ஒருங்கிணைப்பு நடைபெற்று உள்ளது.
தொழிலாளர் சட்டங்களுடன் தொடர்புடைய அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கி குறிப்பாக அனைத்து மத்திய தொழிற்சங்கங்களையும் உள்ளடக்கிய முத்தரப்பு பேச்சுவார்த்தை மற்றும் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் கருத்து கேட்பு கூட்டங்கள் உள்ளிட்டவை 2015 ஆம் ஆண்டு முதல் மத்திய தொழிலாளர் அமைச்சகத்தால் நடத்தப்பட்டு, அதில் பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில், மேற்கண்ட சட்டத் தொகுப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
தொழிலாளர்களுக்கு ஏராளமான சட்டப்பூர்வ உரிமைகளையும், பயன்களையும் வழங்கக்கூடிய இந்த சட்டத் தொகுப்புகளை அமல்படுத்திய மத்திய அரசை பாரதிய மஸ்தூர் சங்கம் (பி.எம்.எஸ்.) பாராட்டுகிறது.
- அமைப்பு சார்ந்த நிறுவனங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு கிடைக்கக்கூடிய மருத்துவ சிகிச்சை, ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்பின் பல்வேறு பலன்கள் 40 கோடி அமைப்புசாரா தொழிலாளர்கள், சுயதொழில் செய்யும் தொழிலாளர்கள், செல்போன் செயலியை அடிப்படையாகக் கொண்டு வேலை செய்யும் தொழிலாளர்கள், பீடி தொழிலாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் தோட்டக்கலை தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மேற்கண்ட சட்டத் தொகுப்புகள் மூலம் பயன்பெற உள்ளனர்.
- சுதந்திரம் அடைந்து 79 ஆண்டுகளாக குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் பட்டியலில் ஏராளமான தொழில்கள் சேர்க்கப்படாமல் இருந்த காரணத்தால், அந்த தொழில்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டு வந்தனர். இந்த நிலையில், மேற்கண்ட சட்டத் தொகுப்புகள் மூலம் மத்திய அரசு அவர்கள் ஒவ்வொருவருக்கும் உறுதி செய்யப்பட்ட குறைந்தபட்ச ஊதியத்தை கிடைக்கச் செய்கிறது.
- பல மாநிலங்களில், விலைவாசி உயர்வை ஈடுசெய்வதற்கு குறைந்தபட்ச ஊதியத்துடன் பஞ்சப்படி வழங்கப்படாத நிலையில், மேற்கண்ட சட்டத் தொகுப்புகள் மூலம் பஞ்சப்படி வழங்குவதை கட்டாயமாக்கி உள்ளது.
- சாதாரண வேலை நேரம் 8 மணி நேரமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதற்கும் கூடுதலாக பணியாற்றினால், அந்த மிகைநேரப் பணிக்கு இரட்டிப்பு ஊதியம் வழங்குவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
- தொழிலாளர்களின் அடிப்படை ஊதியம் மிகக்குறைவாகவும், இதரப்படிகள் அதிகமாகவும், தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு கணக்கு காட்டப்படுவதால், அந்த தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். அதை தடுப்பதற்கு தொழிலாளர்களின் மாதாந்திர ஒட்டுமொத்த சம்பளத்தில் 50% தொகை ஊதியமாக எடுத்துக் கொள்ளப்படும். அதன் பயனாக தொழிலாளர்களின் சேமிப்பு மற்றும் எதிர்கால சமூகப் பாதுகாப்பு கூடுதல் வலிமை பெறும்.
- நமது நாட்டின் குடும்ப உணர்வை வலுப்படுத்தும் வகையில், பெண் தொழிலாளியின் மாமனார் மற்றும் மாமியார், அந்த பெண் தொழிலாளியை நம்பியுள்ள குடும்ப உறுப்பினர் என அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதன் பயனாக அவர்களுக்கும் மருத்துவ வசதி கிடைக்கும்.
- 40 வயதை கடந்த தொழிலாளர்களின் உடல் நலனை பேணிக்காக்கும் பொருட்டு, வேலை அளிப்பவர்கள் தொழிலாளர்களுக்கு வருடாந்திர மருத்துவ பரிசோதனை இலவசமாக வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
- தொழிலாளர்களுக்கு பணி நியமனக் கடிதம் கொடுப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
- எந்த ஒரு இடத்தில் நடைபெறும் அபாயகரமான பணியில் ஒரே ஒரு தொழிலாளி வேலை செய்தாலும், அவருக்கு இ.எஸ்.ஐ.சி. கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மேற்கண்டவை போன்ற ஏராளமான நன்மைகள் சட்டத்தொகுப்புகள் மூலம் தொழிலாளர்களுக்கு கிடைக்க உள்ளது.
மேற்கண்ட 4 சட்டத் தொகுப்புகளுக்கான வரைவு விதிமுறைகளை மத்திய, மாநில அரசுகள் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொழில் உறவுகள் தொகுப்பு 2020, பணியிட பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் தொகுப்பு 2020 ஆகிய 2 தொகுப்புகளில் தொழிலாளர்களுக்கு பாதகமாக இருக்கக்கூடிய சரத்துகளை திருத்தம் செய்ய வேண்டுமென மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அவர்களை பாரதிய மஸ்தூர் சங்கம் 2025 ஆம் ஆண்டு நவம்பர் 21 அன்று நேரில் சந்தித்து கடிதம் கொடுத்து வலியுறுத்தி உள்ளது.
அமைச்சர் அவர்களும் பாரதிய மஸ்தூர் சங்கத்தின் கருத்துக்களை பரிசீலனை செய்வதாக தெரிவித்துள்ளார். கடந்த 79 ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்ட தொழிலாளர்களின் நலனை காத்திட, அமல்படுத்தப்பட்டுள்ள தொழிலாளர்களுக்கான 4 சட்டத் தொகுப்புகளை, பாரதிய மஸ்தூர் சங்கம் வரவேற்கிறது.
கட்டுரையாளர் :- க. சங்கர்
மாநில பொதுச் செயலாளர்,
பாரதிய மஸ்தூர் சங்கம்