இங்கே சிந்தி சகோதரர்கள் பலர் அமர்ந்திருக்கிறார்கள். சிந்தி சகோதரர்கள் பாகிஸ்தானுக்குச் செல்ல விரும்பவில்லை. அவர்கள் பிளவுபடாத அகண்ட பாரதத்துக்கே வந்தனர். அகண்ட பாரதம் தான் நமது இலக்கு. பாரதம் ஒரே குடும்பம்தான். ஒரே வீடுதான். இந்த வீட்டின் ஒரு பகுதியை சிலர் ஆக்கிரமித்து விட்டனர். ஆக்கிரமிக்கப்பட்ட அறையில் நாற்காலி, மேஜை, துணிகள் ஆகியவை இருந்தன. ஆக்கிரமிக்கப்பட்ட அறையை நாளை மீட்போம். அந்த அறையை மீண்டும் பயன்படுத்துவோம்.
மத்தியப் பிரதேசத்தில் உள்ள சாத்னா மாவட்டத்தில் அக்டோபர் 5ம் தேதி சிந்தி முகாம் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பங்கேற்று குருதுவாரா ஒன்றை தொடங்கி வைத்தார். அவர் ஆற்றிய உரை உருக்கமாகவும், எழுச்சிகரமாகவும் இருந்தது.
“இங்கே சிந்தி சகோதரர்கள் பலர் அமர்ந்திருக்கிறார்கள். நான் மிகுந்த மகிழ்ச்சியுடன் உள்ளேன். சிந்தி சகோதரர்கள் பாகிஸ்தானுக்குச் செல்ல விரும்பவில்லை. அவர்கள் பிளவுபடாத அகண்ட பாரதத்துக்கே வந்தனர். சிந்தியில் உள்ள இல்லமும், இங்கே உள்ள இல்லமும் வெவ்வேறானவை என்று கருத வேண்டியதில்லை. அகண்ட பாரதம் தான் நமது இலக்கு. பாரதம் ஒரே குடும்பம்தான்.
ஒரே வீடுதான். இந்த வீட்டின் ஒரு பகுதியை சிலர் ஆக்கிரமித்து விட்டனர். ஆக்கிரமிக்கப்பட்ட அறையில் நாற்காலி, மேஜை, துணிகள் ஆகியவை இருந்தன. ஆக்கிரமிக்கப்பட்ட அறையை நாளை மீட்போம். அந்த அறையை மீண்டும் பயன்படுத்துவோம்’’ என்று மோகன் பாகவத் சூசகமாகவும், தெளிவாகவும் குறிப்பிட்டார். அவரது பேச்சு வலுவான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
இப்பின்னணியில் ஜம்மு − காஷ்மீரின் கடந்த கால வரலாற்றை உன்னிப்பாக கவனிப்போம். ஹைதராபாத் சமஸ்தானத்துக்கு அடுத்தபடியாக ஜம்மு − காஷ்மீர்தான் பரந்து விரிந்து பகுதியாகும். இதன் பரப்பளவு 2,22,236 சதுர கிலோ மீட்டர். இங்கு முஸ்லிம்கள் பெருமளவு இருந்தனர். இதை அபகரிக்க பாகிஸ்தான் திட்டமிட்டது. ஆனால் அது சாத்தியப்படவில்லை.
இந்நிலையில், 1947ம் ஆண்டு அக்டோபர் 22ம் தேதி ஜம்மு − காஷ்மீரை, பாகிஸ்தான் சரமாரியாக தாக்கியது. இந்த நடவடிக்கைக்கு குல்மார்க் என்று பெயர். இந்த கொடூரத் தாக்குதலில் ஆயிரக்கணக்கான ஹிந்துக்களும், சீக்கியர்களும் உயிரிழந்தனர். இதையடுத்து, 1947ம் ஆண்டு அக்டோபர் 26ம் தேதி மகாராஜா ஹரிசிங், ஜம்மு − காஷ்மீரை பாரதத்துடன் இணைப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
1949ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி ஏற்பட்ட போர் நிறுத்தத்துக்குப் பிறகு, ஜம்மு − காஷ்மீர் துண்டாடப்பட்டது. மிர்ப்பூர், முஸாபராபாத், கில்ஜித், பால்டிஸ்தான், பூஞ்ச் மாவட்டத்தின் 4 தாலுகாக்கள் ஆகியவற்றை பாகிஸ்தான் சட்டவிரோதமாக தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து விட்டது. கில்ஜித் – பால்டிஸ்தானின் பரப்பளவு 64817 சதுர கிலோ மீட்டர். மிர்ப்பூர் – முஸாபராபாத்தின் பரப்பளவு 13,297 சதுர கிலோ மீட்டர். பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்துள்ள லடாக் பகுதியின் பரப்பு 64,817 சதுர கிலோ மீட்டர். 1962ல் சீனா படையெடுத்தபோது அக்சாய் சின் என்ற பகுதியை தன்வசப்படுத்திக் கொண்டது. இதன் பரப்பு 37,555 சதுர கிலோ மீட்டர். 1963ல் சீனாவுக்கு சக்ஸ்காம் பள்ளத்தாக்கை பாகிஸ்தான் தானமாக வழங்கியது. இதன் பரப்பளவு 5,180 சதுர கிலோ மீட்டர். இதன்படி சீனா வசம் நமது நிலப்பரப்பு 42,735 சதுர கிலோ மீட்டர்.
நாடாளுமன்றத்தில் காரசாரமாக விவாதம் நடைபெற்றபோது அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு, “அக்சாய் சின் எங்கே இருக்கிறது என்றே தெரியாது. அந்த நிலப்பரப்பில் ஒரு புல் கூட முளைக்காது’’ என்று கூறினார். இதற்கு மூத்த காங்கிரஸ் தலைவர் மகாவீர் தியாகி உடனடியாக பதிலடி கொடுத்தார். நேருவின் தலை வழுக்கையாக உள்ளதைச் சுட்டிக் காட்டி, இந்த மண்டையிலும் ஒன்றும் முளைக்கவில்லை. இதை யாருக்கேனும் கொடுத்து விடலாமா? மகாவீர் தியாகி கேட்டது தேசிய அளவில் கவனத்தை ஈர்த்தது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் விவகாரம் காலங்காலமாக தொடர்ந்து நீடித்து வருகிறது. 1994ம் ஆண்டு பிப்ரவரி 22ம் தேதி ஜம்மு − காஷ்மீர், பாரதத்தின் பிரிக்க முடியாத அங்கம். ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து பாகிஸ்தான் வெளியேற வேண்டும் என்று ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இரண்டு தசாப்தங்கள் கடந்த பிறகும் கூட, இது கிணற்றில் போடப்பட்ட கல்லாகவே கிடந்தது. 2014ல் நரேந்திர மோடி பிரதமரானதையடுத்து திருப்புமுனை ஏற்பட்டது. 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி, ஜம்மு − காஷ்மீருக்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து அடியோடு ரத்து செய்யப்பட்டது. சட்டசபையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக ஜம்மு − காஷ்மீரும், சட்டசபையற்ற யூனியன் பிரதேசமாக லடாக்கும் மாற்றப்பட்டு விட்டன.
கார்கில் வெற்றித் திருநாளில் உரையாற்றிய ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங், ஆர்.எஸ்.எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹொசபலே ஆகியோர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள மக்களுக்கு பூரண நியாயம் கிடைக்க வேண்டும். எவ்வளவு விரைவில் இதை சாத்தியப்படுத்த முடியுமோ அவ்வளவு விரைவில் சாத்தியப்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டது கவனத்தில் கொள்ளத்தக்கது. ஆப்ரேஷன் சிந்தூர் வாயிலாக பாகிஸ்தானின் பயங்கரவாத கட்டமைப்புகள் அனைத்தும் தகர்த்தெறியப்பட்டு விட்டன. பாரதத்தின் பராக்கிரமம் நிலைநாட்டப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை, பிரதமர் நரேந்திர மோடி மீட்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதற்கான அறிகுறிகள் அரசியல் வானில் புலப்படுகின்றன.
கட்டுரையாளர்: உதவிப் பேராசிரியர், காஷ்மீர் ஆய்வு மையம்
ஆர்கனைசர் ஆங்கில இணையத்திலிருந்து
தமிழில் : அடவி வணங்கி