திருச்செந்தூர் சூரசம்ஹாரம் திராவிட மாடல் அரசு செய்ய தவறியது

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் திகழ்கிறது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களில் கந்தசஷ்டி திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

கந்தசஷ்டி விழாவின் கடைசி நாளான ஏழாவது நாள் சூரசம்ஹாரம் நடைபெறும். உள்ளூர், வெளியூர், வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோயிலில் குவிந்த வண்ணம் இருப்பார்கள். பக்தர்களின் பாதுகாப்பு கருதி, ஹிந்து சமய அறநிலையத்துறை என்ன நடவடிக்கை எடுத்து இருக்கிறது என்று பார்த்தால், பக்தர்களின் நலனுக்காக அவர்கள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கு பல்வேறு உதாரணங்கள் இருக்கிறது. சமீபத்தில் கூட திருச்செந்தூர் கோவிலுக்குள் தரிசனத்திற்காக அழைத்துச் செல்ல நபர் ஒன்றுக்கு 11 ஆயிரம் விதம் நான்கு பேருக்கு 44 ஆயிரம் கேட்டு கோவில் நிர்வாகிகள் பக்தர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கோயில் நிர்வாகத்துடன் கேட்ட போது அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி, அப்படியே பிரச்சினையை மூடி மறைத்து விட்டார்கள்.

கந்த சஷ்டி விழாவிற்கு வருகை தரும் பக்தர்கள் வயிறார சாப்பிடுவதற்காக மூவர் சமாதி அருகில் மாபெரும் அன்னதானம் நடைபெற்று வரும். இந்த வருடம் நடைபெற்ற அன்னதானத்தில், பக்தர்கள் அனைவரும் இருட்டில் அமர்ந்து உணவு அருந்தினார்கள். கோயில் நிர்வாகம் மின் இணைப்பு கொடுக்காததால், இருளில் உண்ண வேண்டிய அவல நிலை என பக்தர்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தும் வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோடிக்கணக்கான ரூபாய்களில் திருச்செந்தூர் முருகன் திருக்கோயிலில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருவதாக திமுக வழக்கமாக கூறி வருகிறது. ஆனால் இந்த மேம்பாட்டு பணிகள் தற்போது வரை எந்த நிலையில் இருக்கிறது? எதைத்தான் மேம்படுத்தினார்கள்? என்பது இப்போது வரை தெரியவில்லை.

திருச்செந்தூருக்கு வருகை தரும் பக்தர்கள் தங்களுடைய வாகனங்களை நிறுத்துவதற்கான இடங்களில், மழைநீர் தேங்கி இருப்பதன் காரணமாக, வாகனம் நிறுத்தத்தை தாங்களே தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என கோயில் நிர்வாகம் கூறியது. வாகனத்தில் வருகை தரும் நபர்களின் பாதுகாப்பை கூட உறுதி செய்ய முடியாத நிலையில் அரசின் நடவடிக்கைகள் இருந்து வருகிறது. எதற்கு தான் அறநிலையத்துறை இருக்கிறது? என்ற கேள்வியும் முருக பக்தர்களால் எழுப்பப்படுகிறது.

கோடிக்கணக்கில் கோயில் சொத்தை, வருமானத்தை சொந்தம் கொண்டாடும் அறநிலையத்துறை பக்தர்களுக்கு என்ன தேவை என்பதை செய்ய தவறி இருக்கிறது. இது ஒவ்வொரு முறையும் நடக்கும் அநீதியாக பார்க்கப்படுகிறது. இதற்கு நிச்சயம் முருகன் அவர் பாணியில் பதிலடி கொடுப்பார்! அறநிலையத்துறை எனும் சூரபத்மனின் கொட்டத்தை அடக்காமலா போய்விடுவார் வேலன்?