ஹிஜாப் பிரச்சனை தொடர்பாக கர்நாடக மாநில அரசு பிறப்பித்த உத்தரவை கர்நாடக உயர் நீதிமன்றம் அங்கீகரித்ததோடு வகுப்பறைக்குள் ஹிஜாப் அணிய அனுமதி கோரிய மனுக்களை தள்ளுபடி செய்தது. கல்வி நிறுவனங்களில் ஒரே மாதிரியான ஆடை விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்றும் கூறியது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஹிஜாப் அணிய விதிக்கப்பட்டுள்ள தடையை அடுத்து உடுப்பி மாவட்டத்தைச் சேர்ந்த 40 முஸ்லிம் மாணவிகள் மட்டுமே முதல்நிலைப் பல்கலைக் கழகத் தேர்வில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்ததாக தெரியவந்துள்ளது. ஆர்.என் ஷெட்டி பி.யு கல்லூரியில், 28 முஸ்லிம் மாணவிகளில் 13 பேர் தேர்வெழுதினர். சில மாணவிகள் ஹிஜாப் அணிந்து தேர்வு மையத்திற்கு வந்தபோது அனுமதி மறுக்கப்பட்டது. பண்டார்கர் கல்லூரியில் ஐந்தில் நான்கு முஸ்லிம் மாணவிகள் சீருடையில் வந்து தேர்வெழுதினர். பஸ்ரூர் சாரதா கல்லூரி மாணவிகள் அனைவரும் தேர்வெழுதினர். நாவுந்தா அரசினர் பி.யு கல்லூரியின் எட்டு மாணவிகளில் இருவர் மட்டுமே தேர்வெழுதினர்.