40 ஆண்டுகளுக்கு பின் அத்திவரதர் தரிசனம்

நேற்று குடும்பத்துடன் அத்தி வரதரைச் சேவித்தேன். காலை 8.30 மணிக்கு ஆட்டோ இறக்கிவிட்ட இடத்தில் பள்ளி பேருந்து ஒன்று கூட்டத்துக்குள் பாம்புபோல நுழைய எதிரே ஆம்புலன்ஸ் ஒன்று வர நடுவில் சிலர் பொங்கல் சாப்பிட்டுக்கொண்டு இருக்க இரண்டு காவலர்கள், . மக்கள் நின்று கொண்டு இருக்கும் வரிசையை நெரித்து ஆம்புலன்ஸுக்கு வழி விட இங்கே தான் நாமும் நிற்க வேண்டும் என்று நினைத்தபோது கொஞ்சம் பதட்டமாகத் தான் இருந்தது.

கூட்டம் எங்கு நிற்பது என்று தெரியாமல் முழிக்கப் பதட்டமே இல்லாமல் இரண்டே இரண்டு காவலர்கள் அங்கே நின்று கொண்டு இருந்ததைப் பார்க்கும்போது பயமாக இருந்தது. சில மாதங்களுக்கு முன் ஒரு வி.ஐ.பி தேசிய நெடுஞ்சாலையில் போகிறார் என்று பத்து அடிக்கு ஒரு காவலர் நின்று கொண்டு இருந்தது ஏனோ அப்போது நினைவுக்கு வந்தது.

வழியெங்கும் செருப்புகள், நிற்கும் இடத்தில் சகதி, சவுக்கு கட்டையில் கூரான ஆணி.. பாண்டி விளையாடுவது எதன் மீதும் படாமல் நகர்ந்தோம். ஒரு மணி நேரத்துக்குப் பிறகு திரும்பப் பார்க்கும்போது சுமார் பத்து அடி நகர்ந்திருந்தோம். இந்த ஒரு மணி நேரத்தில் ஆம்புலன்ஸ் மூன்று முறை சென்றது. வெய்யிலும் தலைக்கு மேலே கொதிக்க ஆரம்பிக்க, கிருஷ்ண பிரேமி வேத பாட வாசலில் சுடச் சுட தயிர்ச் சாதம் எல்லோருக்கும் கொடுத்துக்கொண்டு இருந்தார்கள். கூட்டத்தில் சிலர் அதை வாங்கி சாப்பிட்டுவிட்டு, தண்ணீர் கொடுக்கும் இடத்தில் கை அலம்பினார்கள், தண்ணீர் கிடைக்காதவர்கள் மதில்மீதும், கட்டிய கட்டை மீதும் துடைத்தார்கள். குப்பையைக் கிழே போட்டார்கள்.

அதற்குப் பிறகு தடுப்பு வைத்துப் பெட்டி பெட்டியாகக் கூட்டத்தை அனுப்பினார்கள். அப்போது ஒரு பத்து பேர் தடுப்பை நகர்த்தக் குழப்பம் ஆரம்பித்தது. நூறு பேர் தடுப்பைத் தள்ளிக்கொண்டு அடிதடியுடன் சென்றதை காவல்துறை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. யாராவது விழுந்திருந்தால், நிச்சயம் அசம்பாவிதம் நடந்திருக்கும்.

அடுத்து அங்கிருந்து கோயில் கோபுர வாசலுக்கு வந்தபோது மூன்று மணி நேரம் ஆகியிருந்தது. ஒரு இடத்தில் கும்பலாகக் காவல்துறை அதிகாரிகள், ”சீக்கிரம் உள்ளே போங்க போங்க” என்று ரோபோட் போல விரட்டிக்கொண்டு இருந்தார்கள். அவர்கள் சொன்ன வேகத்துக்குச் சென்றிருந்தால் உடனே பெருமாளைச் சேவித்திருக்கலாம் ஆனால் கூட்டம் தவழ்ந்து சென்று கொண்டு இருந்தது. காற்றோட்டம் எதுவும் இல்லாமல், வெய்யில், வேர்வை…. சின்னக் குழந்தைகள், வயதானவர்கள் கண்களில் மயக்கமும், உற்சாகமின்மையும் பார்க்க முடிந்தது.

“பேசாம வீட்டுக்கே போயிடலாம்பா “ என்று என் குழந்தைகள் சொன்னபோது “கிளம்பிவிடலாமா ?” என்று ஒரு முறை யோசித்தேன்.

“இன்னும் கொஞ்ச தூரம் தான்” என்று அலைப்பேசியை கைக்கு மேலே உயர்த்தி படம் எடுத்துப் பார்த்தபோது கூட்டம் முடிவு இல்லாமல் இருந்தது. நான்கு மணி நேரம் ஆகியும் கண்ணுக்கு எட்டிய தூரம்வரை தலைகளாகத் தெரிந்தது. தொண்டரடிப்பொடி ஆழ்வார் அருளிய திருப்பள்ளியெழுச்சியில் வரும் பாசுரம் நினைவுக்கு வந்தது.

அந்தரத்து அமரர்கள் கூட்டங்கள் இவையோ அரும் தவ முனிவரும் மருதரும் இவரோ
இந்திரன் ஆனையும் தானும் வந்து இவனோ எம்பெருமான் உன கோயிலின் வாசல்
சுந்தரர் நெருக்க விச்சாதரர் நூக்க இயக்கரும் மயங்கினர் திருவடி தொழுவான்
அந்தரம் பார் இடம் இல்லை மற்று இதுவோ அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே

திருக்கோயிலின் வாசலில் தேவந்திரன், தேவர்களும் அவர்களுடைய பரிவாரங்களுடன், தவம் புரியும் முனிவர்கள், மருதரும், யக்ஷர்களும், கந்தர்வர்களும் நெருக்கவும், வித்யாதரர்கள் தள்ள அவன் திருவடி தொழுவதற்காக மயங்கி நின்றனர். ஆகாசமும் பூமியிலும் இடைவெளி இல்லாமல் இருந்தது.

கொஞ்சம் காற்று, கால்களைக் கீழே வைக்கக் கொஞ்சம் இடம் இருந்தால் போதும் என்று தோன்றும் அளவுக்கு நெருக்கினார்கள். நான்கு மணிநேரத்துக்கு முன் காலில் சேறு படாமல் நடந்தது நினைவுக்கு வந்தது. திடீர் என்று அங்கே ஒரு பசுமாடு எட்டிப்பார்க்க இந்த மாடு உள்ளே நுழைந்தால் என்ன ஆகும் என்ற பீதி எல்லோர் கண்களிலும் தெரிந்தது. இலவசமாகக் கொடுத்த தினமலர், தினவிசிரியாக எல்லோரும் வீசிக்கொண்டு இருக்க, வரிசையின் நடுவில் தாவுகிறவர்களை மக்கள் வாய்க்கு வந்தபடி திட்டித் தங்கள் எரிச்சலைக் காண்பித்தார்கள். அப்போது ஒருவர் கூட்டத்தின் தடுப்புக்கு மீது உட்கார்ந்துகொண்டு ஒரு அட்டையை வைத்து எல்லோருக்கும் விசிறிக்கொண்டு இருந்ததை பார்க்கும்போது . திருக்கச்சி வம்சமாக இருக்குமோ என்று தோன்றியது.

ஒலிபெருக்கி ’பரங்கிமலை ரம்யா’, செங்கல்பட்டு சந்தியா.. காவல் துறை கட்டுப்பாடு அறைக்கு வரவும் உங்களுக்காக உங்கள் அக்கா, தம்பி காத்துக்கொண்டு இருக்கிறார் போன்ற அறிவிப்புகள் பழகிவிட சுமார் ஆறு மணி நேரம் வரிசையில் நின்று அத்தி வரதனை சில வினாடிகள் தரிசித்துவிட்டு வந்தோம். சேவித்துவிட்டு வந்தவர்களின் முகங்கள் மன்னன் படத்தில் கஷ்டப்பட்டு டிக்கெட் வாங்கிய ரஜினி, கவுண்டமணி போலக் காட்சி அளித்தது.

இப்படிச் செய்திருக்க வேண்டும், அப்படிச் செய்திருக்க வேண்டும் என்று அடியேன் அட்வைஸ் கொடுக்கப் போவதில்லை. ஒரு நாள் கலெக்டர் இன்னொரு நாள் ஒரு காவல் அதிகாரி வரிசையில் சாதாரண குடிமகன்போலச் சென்று அத்தி வரதனைச் சேவித்தால், மேற்கொண்டு என்ன செய்ய வேண்டும் என்று உடனே கண்டுபிடித்துவிடுவார்கள். இதற்கு ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் எல்லாம் படிக்க வேண்டாம் !. அந்தக் காலத்து ராஜாக்கள் எல்லாம் ஐ.ஏ.எஸ் படித்தவர்களா என்ன ?

இந்தப் பதிவு உங்களை discourage செய்வதற்கு இல்லை. கூட்டத்தில் நின்றுகொண்டு இருந்தபோது என் பக்கத்தில் ஒரு வயதான ஏழைப் பாட்டி பேசாமல் நின்றுகொண்டு இருந்தார். பேச்சுக் கொடுத்தேன்.

“பாட்டி நீங்கப் பேசாம சீனியர் சிட்டிசன் வரிசையில் போயிருக்கலாமே?.. இங்கே ஏன் கஷ்டப்படுகிறீர்கள் ?”

”நாற்பது வருடத்துக்கு ஒரு முறை வரார்… வரிசையில் நின்று நிதானமா சேவிக்க வேண்டும்… குறுக்கு வழி எல்லாம் வேண்டாம்.. இப்படியே நின்று சேவித்தால் தான் திருப்தி…” என்றார்.

இதைக் கேட்டபிறகு இன்னும் நான்கு மணி நேரம் கூட வரிசையில் நிற்கலாம் என்று தோன்றி. உற்சாகம் பிறந்தது.

திருமணத்தில் விழாவில் பார்த்திருக்கலாம், கல்யாண வீட்டார் யார் வருகைக்கோ காத்துக்கொண்டு இருப்பார்கள். மேடையில் இருந்தாலும் அந்த முக்கியமான நபர் வருகிறாரா என்று கண்கள் வாசலையே நோக்கி இருக்கும். நீங்கள் மேடையில் அவர்கள் பக்கம் சென்றால் “வாங்க.. மேலே டிபன் சாப்பிட போங்க” என்று சொல்லுவார்கள். அந்த முக்கியமான நபர் வந்தவுடன் மேடையிலிருந்து கீழே இறங்கி அவர்களிடம் சென்று “வாங்க வாங்க…எங்கே வராமல் போய்விடுவீர்களோ.. என்று நினைத்தேன்” என்று விசாரிப்பார்கள்.

அத்தி வரதனும் அதுபோலத் தான், இந்த மாதிரி ’முக்கியமான’ பாட்டி வருகைக்காகக் காத்துக்கொண்டு இருக்கிறார். வரதனுக்கு இவர்களே வி.ஐ.பி.

பல முறை கோயிலுக்குச் சென்றிருக்கிறோம் ஆனால் எல்லா முறையும் நமக்கு நினைவில் இருப்பதில்லை. மறந்துவிடுகிறோம். ஆனால் நேற்று ஆறு மணி நேரம் அத்தி வரதனைச் சேவித்தது இன்னும் நாற்பது வருடங்கள் கழித்தும் பசுமையாக நினைவில் இருக்கும்.

இந்தப் பதிவைப் படிப்பவர்கள், அடியேன் சந்தித்த அந்தப் பாட்டியைவிட வயது குறைவாகத் தான் இருப்பீர்கள். சேவிப்பது தான் முக்கியம். அதனால் பயப்படாமல் சென்றுவாருங்கள். ஒரு நாள் வரதனுக்கு ஒதுக்கிவிட்டு, கையில் தண்ணீர் பாட்டில், புளிப்பு மிட்டாய் கூடவே கொஞ்சம் பக்தி இருந்தால் போதும், கிளம்புங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *