இஸ்ரோ சேர்மன் கே.சிவன் மீண்டும் நிலாவை நோக்கி…

கடந்த ஆண்டு பிப்ரவரியில் 104 செயற்கைக் கோள்களை தாங்கி விண்ணில் சீறிய இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் (இஸ்ரோ) பி.எஸ்.எல்.வி. ஏவுகலம் உலகிலேயே விண்வெளி ஆராய்ச்சியில் வரலாறு படைத்தது. உலகமே வியப்பால் விழிகள் விரிய பாரதத்தைப் பார்த்தது. பாரதத்திற்கு இதுபோல ஏராளமான வெற்றிகளை குவித்த வண்ணம் உள்ளது இஸ்ரோ. ‘தேசிய வளர்ச்சியில் விண்வெளி தொழில் நுட்பத்தை பயன்படுத்துதல்என்ற குறிக்கோளுடன் இயங்கும் இஸ்ரோ, மனிதர் வாழ்வில் எத்தனையோ வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து வருகிறது. அண்மையில் இஸ்ரோவின் சேர்மனாக பொறுப்பேற்றுள்ள டாக்டர் கே.சிவன் இஸ்ரோவின் மக்கள் சேவை குறித்து ஆர்கனைசருக்கு அளித்த பேட்டியில் இருந்து.

 

இஸ்ரோ வரை வந்துள்ள உங்கள் வாழ்க்கைப் பயணம் குறித்து…?

எனக்கு நாகர்கோயிலுக்கு பக்கத்தில் உள்ள சரக்கல்விளை சொந்த ஊர். எங்கள் குடும்பம் விவசாய குடும்பம். பிளஸ்டூ வரை தமிழ் மீடியத்தில் படித்தேன். அடுத்து சென்னை குரோம்பேட்டையில் உள்ள மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியில் சேர்ந்தேன். அங்கு பட்டம் பெற்றபின் பெங்களூரு இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் சயன்ஸ் – ல் சேர்ந்தேன். அதையடுத்து விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் சேர்ந்தேன்.

கிராமப்புறத்தில் எங்களுக்கெல்லாம் பெரிய கனவு ஒன்றும் கிடையாது. அதிகபட்சம் ஆசிரியராக வேண்டும் என்று ஆசைப்படுவோம். நான் ஏரோநாட்டிக்கல் பொறியாளர் ஆவேன் என்று நினைத்துப் பார்த்ததே கிடையாது. வயலில் விளையாடிக் கொண்டிருக்கும்போது திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு வரும் விமானங்கள் விண்ணில் பறப்பதை பார்த்துக் கொண்டே இருப்பேன். அப்போதே என் மனதில் ஒரு மூளையில் ஏரோநாட்டிக்கல் பொறியாளர் ஆகும் எண்ணம் துளிர் விட்டிருக்கலாம். ஆனால் நான் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

விக்ரம் சாராபாய் மையத்தில் பி.எஸ்.எல்.வி. அணியில் பணிபுரிந்தேன். அங்கே மாதவன் நாயர், சீனிவாசன், டாக்டர் சுரேஷ் போன்ற ஜாம்பவான்களுடன் பணிபுரியும் வாய்ப்புக் கிடைத்தது. அதையடுத்து நான் பணிபுரிந்த ஜி.எஸ்.எல்.வி திட்டம் பலமுறை தோல்வியைத் தழுவியது. என்னுடைய எதிர்காலம் அவ்வளவுதான் என்று பலருக்கும் தோன்றிவிட்டது. ஆனால் எனது அணியினர் உறுதி காட்டினார்கள், உழைத்தார்கள், வென்றோம். எனது இந்த வாழ்க்கைப் பயணத்தில் வந்துபோனதெல்லாம் மறைமுகமான வரப்பிரசாதம் என்றே சொல்வேன்.

கிரையோஜெனிக் என்ஜின் உருவாக்கத்தில் நீங்கள் செய்த பங்களிப்பு?

பல கட்டங்களைக் கொண்ட ராக்கெட் எதற்கும் கிரயோஜெனிக் என்ஜின் வேண்டும்.  வழக்கமான என்ஜின்களை விட இதற்கு ஒன்றரை மடங்கு உந்துவிசை உண்டு. ஜி.எஸ்.எல்.வி. ஏவுகலத்தை பயன்படுத்தி 2.2 டன் எடையுள்ள கருவிகளை விண்ணேற்ற கிரயோஜெனிக் என்ஜின் உள்ள ஏவுகலத்தின் மொத்த எடை 450 டன்னாக இருக்கும். ஆனால் வழக்கமான என்ஜினைப் பயன்படுத்தும் அதே கலம் 1,200 டன் எடை கொண்டதாக இருக்கும் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். கிரயோஜெனிக் நுட்பத்தால் விண்கலங்கள் ‘கையடக்கமாக’ இருக்கும். அதனால் அதிக கருவிகளை விண்ணேற்ற முடியும். ஆரம்ப கட்டத்தில் கிரயோஜெனிக் உருவாக்கத்தில் வெற்றி கிடைக்கவில்லை. ஆனால் நாங்கள் விடவில்லை. இன்று கிரயோஜெனிக் என்ஜின் தொழில்நுட்பத்தில் நாம் சுயசார்பு உள்ள தேசம் ஆகிவிட்டோம்.

இஸ்ரோவில் நீங்கள் ஒரு முன்னோடியாக திகழ்கிறீர்கள். SITARA போன்ற மென்பொருள்களை உருவாக்கியிருக்கிறீர்கள். பி.எஸ்.எல்.வி. திட்டத்திற்கு உங்கள் பங்களிப்பு அபாரம். இப்படியெல்லாம் ஈடுபாடு கொள்ள உங்களை தூண்டுவது எது?

பல திட்டங்களுக்கும் உடனடித் தேவைதான் உந்துவிசையாக அமைகிறது. உதாரணமாக நான் பி.எஸ்.எல்.வி திட்டத்தில் பணிபுரியும்போது சீறிப்பாயும் ராக்கெட்டின் பாதையைக் கண்காணிக்கும் மென்பொருள் மெதுவாக செயல்பட்டது. அதைக் கையாள்வதும் கடினமாக இருந்தது. இந்தப் பிரச்சனைகளைத் தீர்க்கும் மென்பொருள் உடனடியாக தேவைப்பட்டது. செய்தோம்.

சந்திரயான்-2 திட்டம் எந்த அளவில் இருக்கிறது? அதன் முக்கிய குறிக்கோள் என்ன?

சந்திரயான்-2 திட்டத்திற்கு தேவையான எல்லா உறுப்புகளும் தயார். அவற்றை ஒருங்கிணைக்கும் பணி முன்னேறி வருகிறது. நிலாவின் சுற்றுப்பாதையில் வட்டமடிப்பது, நிலாவில் இறங்குவது, நிலாவில் நடமாடுவது ஆகிய மூன்று அம்சங்களைக் கொண்டது அந்தத் திட்டம். இந்த மூன்று செய்கைகளும் வெகு துல்லியமாக நடைபெறும் வகையில் தற்போது பரிசோதனைகள் நடத்தி வருகிறோம். 2018 ஏப்ரல் மாதத்தில் சந்திரயான்-2 விண்ணில் பாய வேண்டும் என்பது எங்கள் இலக்கு. ஆனால் நடந்துவரும் சோதனைகளின் முடிவுகளைப் பொறுத்து தேதி அமையும். எல்லாம் சரிபட்டு வரும்போது சந்திரயான்-2ஐ விண்ணேற்றுவோம்.

மங்கள்யான் எனப்படும் செவ்வாய் கிரகத்துக்கான விண்கலம் அனுப்பும் திட்டத்தின் முக்கிய குறிக்கோள் என்ன? மனிதர்கள் தங்கி பணிபுரியக் கூடிய விண்வெளி நிலையங்கள் அமைக்கும் திட்டம் உண்டா?

மனிதனை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப முயற்சிப்பதற்கு முன் நமது மங்கள்யான் திட்டம் பல விஷயங்களை செய்து முடித்தாகவேண்டும் என்று நமக்கு சுட்டிக்காட்டுகிறது. நெடுங்காலத்திற்கு முன் செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருந்ததாக விண்வெளி விஞ்ஞானம் கூறுகிறது. இப்போது தண்ணீர் இல்லாமல் போனதற்கு பல காரணங்கள். அதை நாம் ஆய்வு செய்தால் அதுபோன்றவொரு நிலவரம் பூமியில் ஏற்படாமல் தவிர்க்க வழிதேட முடியுமே?