3 புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1ம் தேதி முதல் அமல்: மத்திய அரசு அறிவிப்பு

 

பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்ட 3 புதிய குற்றவியல் சட்டங்கள், வரும் ஜூலை 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம் மற்றும் இந்திய சாட்சியங்கள் சட்டம் ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்டவை. இவற்றின் படியே, குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு தண்டனை விதிக்கப்பட்டு வந்தது.

ஆனால், இந்தச் சட்டங்கள் காலமாற்றத்திற்கு ஏற்ற வகையில் இல்லை என புகார்கள் எழுந்ததை அடுத்து, அவற்றுக்கு மாற்றாக, ‘பாரதிய நாகரிக் சுரக் ஷா சன்ஹிதா, பாரதிய சாக் ஷ்ய அதிநியம், பாரதிய நியாய சன்ஹிதா’ என்ற மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் உருவாக்கப்பட்டன. இந்தச் சட்டங்கள் குற்றவியல் நீதி அமைப்பை சரி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளன. அத்துடன் காலனி ஆதிக்க கால குறியீடுகளை மாற்றி அமைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன.

மூன்று புதிய குற்றவியல் சட்ட மசோதாக்களும் பார்லிமென்டின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன. ஜனாதிபதியும் ஒப்புதல் அளித்தார்.

இந்நிலையில், 3 புதிய குற்றவியல் சட்டங்கள், வரும் ஜூலை 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.