விதியால் வரும் துன்பத்தை தடுப்பது எப்படி?

– பா. ராமன், சேலம்

விதி என்பது மழையைப் போன்றது. அதில் நாம் நனையாமல் காத்துக்கொள்ள  தெய்வ  வழிபாடு  எனும்  குடையை  பயன்படுத்திக் கொள்ள  வேண்டும்.  – இது வாரியார் வாக்கு.

 

புதியதாக ஆசிரியராக பணியில் சேர்ந்துள்ள எனக்கு ‘நச்’ என்று நாலு வார்த்தைகள்…?

– கே. குமார், வேலூர்

உங்கள் மீது நம்பிக்கை – கற்பதில் நம்பிக்கை – கற்பிப்பதில் நம்பிக்கை – மாணவர்களிடம் நம்பிக்கை – இறைவனிடம் நம்பிக்கை என உறுதியுடன் செயல்படுங்கள். இது இறைவன் கொடுத்த நல்லதொரு வாய்ப்பு. வெற்றிபெற வாழ்த்துகள்.

 

கிறிஸ்தவர்கள்  போன்று  முஸ்லிம்கள்  மதம்  மாற்றுவதில்லையே?

– பால. நரசிம்மன், விழுப்புரம்

யார் சொன்னது? இரண்டு பேருமே போட்டி போட்டுக் கொண்டு மதம் மாற்றி வருகிறார்கள். சாதாரண குப்பன், சுப்பன் மட்டுமில்லாமல் மகாத்மா காந்திஜியின் மகனையே முஸ்லிமாக மதம் மாற்றினார்கள். அவரது மூத்த மகன் ஹரிலாலை மாற்றி ‘அப்துல்லா’ என்று பெயரையும் மாற்றினார்கள்.

 

பெண்கள் குங்குமம் வைத்திருந்தால் யாரும் வசியம் செய்ய முடியாது என்பது உண்மையா?

– ஜெபமலர், காயாமொழி

உண்மைதான். புருவத்தின் இடைப்பகுதியில் குங்குமம் வைத்திருப்பவரை யாரும் வசியப்படுத்த முடியாது. திருமணமானவர்கள் வகிட்டு நுனியில் குங்குமம் வைக்க வேண்டும். மஞ்சள் குங்குமம் தரும் பாதுகாப்பை ஸ்டிக்கர் பொட்டு தராது.

 

இந்திய-சீன-சிக்கிம் எல்லைப்பகுதியான டோக்காலாமிலிருந்து சீனா பின் வாங்கியது பற்றி?

– நந்தகோபால், திருத்தணி

எந்த நேரமும் போர் வந்து விடுமோ என்ற பதற்றம் நிலவிய சூழ்நிலையில் பிரதமர் மோடியின் ராஜதந்திரம், வெளியுறவுக் கொள்கை இவற்றுக்கு கிடைத்த வெற்றி இது.

 

எனது கணவர் ஒரு நாத்திகர். நானோ கடவுள் பக்தை. எனக்கு தாங்கள் கூறும் அறிவுரை என்ன?

– கே. உமா, கோவை

அவர் நாத்திகராக இருந்தாலும் நீங்கள் ஆத்திகராக இருப்பதை அவர் தடுப்பதில்லை என்றால் அவரது பெருந்தன்மையைப் பாராட்டுங்கள். உங்கள் பூஜாபலன் உங்கள் கணவரையும் காப்பாற்றும். கலைஞர் வீட்டுப் பெண்கள் அனைவருமே பக்தைகள்தானே!

 

டெல்லி சட்டமன்ற இடைத்தேர்தல் ‘ஆம் ஆத்மி’ வெற்றி பெற்றுள்ளதே?

– வி. சுப்பு, திருச்சி

‘பாவனா’ தொகுதியில் பாஜகவைவிட ஆம் ஆத்மி 24,000 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளது. இப்போது வாக்குப்பதிவு மிஷின் மீது சந்தேகம் இல்லை. எப்போதெல்லாம் தோற்றுப் போகிறாரோ அப்போதெல்லாம் வாக்குப் பதிவு மிஷின் மீது அவருக்கு சந்தேகம் வருகிறது.