‛‛ நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி பேர் ஏழ்மையில் இருந்து மீட்கப்பட்டு உள்ளனர் ” என ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறினார். பார்லிமென்ட் கூட்டுக்குழு கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆற்றிய உரை: புதிய பார்லிமென்டில் இன்றைய உரை எனது முதல் உரையாகும். ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற இலக்குடன் பயணித்து வருகிறோம். சுதந்திர அமிர்த பெருவிழாவின் பெருமையை வளர்ச்சியடைந்த பாரதம் உறுதி செய்யும். நமது அரசியல் சாசனம் அமல்படுத்தப்பட்டு 75 ஆண்டுகள் ஆகின்றன. சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா மிஷன் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. சந்திரயான் 3 திட்டத்தின் வெற்றியால் நிலவின் தென் துருவத்தில் பாரதத்தின் மூவர்ண கொடி பட்டொளி வீசி பறக்கிறது. வரலாற்று சிறப்பு மிக்க மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவை பார்லிமென்ட் நிறைவேற்றி உள்ளது.
உலக அரங்கில் இந்தியா கம்பீரமான வளர்ச்சி பெற்று வருகிறது. நாடு தற்போது வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக மாறி உள்ளது.கடந்த 6 மாதமாக பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பம் மிக வேகமாக அமல்படுத்தப்பட்டு உள்ளது. சென்ற ஆண்டு லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. மக்களின் நீண்ட நாட்கள் எதிர்பார்ப்பான அயோத்தி ராமர் கோவில் கட்டுமானம் செய்யப்பட்டு உள்ளது. ராமர் கோயில் கட்ட வேண்டும் என்ற கனவு நிறைவேற்றப்பட்டு உள்ளது. நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி பேர் ஏழ்மையில் இருந்து மீட்கப்பட்டு உள்ளனர். வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 3 கோடியில் இருந்து 8 கோடியாக உயர்ந்துள்ளது. ஜிஎஸ்டி வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நிதிப் பற்றாக்குறை குறைந்துள்ளது. அந்திய செலவாணி கையிருப்பு அதிகரித்துள்ளது. பல ஆண்டுகளால் எதிர்பார்த்த மாற்றங்கள் பல, கடந்த 10 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்டுள்ளன. செல்போன் உற்பத்தியில் உலகின் 2வது பெரிய நாடாக இந்தியா வளர்ந்துள்ளது. பாதுகாப்புத்துறை உற்பத்தி மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது.
தமிழகத்தில் பாதுகாப்புத்துறை உற்பத்தி மண்டலம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் டிஜிட்டல் பண பரிவர்த்தனை குறித்து உலகம் முழுவதும் பெருமையாக பேசப்படுகிறது. வளர்ச்சி அடைந்த நாடுகளில் கூட இத்தகைய நவீன டிஜிட்டல் பரிவர்த்தனைகள் இல்லை. டிஜிட்டல் புரட்சியால் வாழ்க்கை எளிதானது. ரூ.1 லட்சம் கோடி வரை தினமும் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் நடந்து வருகிறது. செல்போன் மூலம் மட்டும் ரூ.1, 200 கோடி அளவுக்கு பணப்பரிமாற்றம் நடை பெறுகிறது. உலக டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் இந்தியாவின் பங்கு 46 சதவீதமாக உள்ளது. இந்தியாவில் 39 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ரயில்வே துறையை முழுக்க முழுக்க மின்மயமாக்கும் பணி நிறைவு பெற உள்ளது. நாடு முழுவதும் 20 நகரங்களில் மெட்ரோ ரயில்கள் இயங்குகின்றன.
பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் ஏழை மக்களே இந்த நாட்டின் தூண்கள். இந்த 4 தூண்களை வலுப்படுத்தும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளது. இந்த 4 சக்திகளை கொண்டு இந்தியா இயங்கி வருகிறது. விமான நிலையங்களின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளது. ஒரே நாடு ஒரே ரேசன் திட்டத்தின் கீழ் 80 கோடி குடும்பங்களுக்கு இலவச ரேசன் பொருட்கள் வழங்கப்படுகிறது. நாடு முழுவதும் வங்கிகளின் வாராக்கடன் 4 சதவீதமாக குறைந்துள்ளது. பழைய குற்றவியல் சட்டங்கள் நீக்கப்பட்டு, புதிய சட்டங்கள் இயற்றப்பட்டு அமல் படுத்தப்பட்டு உள்ளது
தடையற்ற இணையவசதிக்காக 2 லட்சம் கிராமங்கள் ஆப்டிக் பைபர் கேபிள்கள் மூலம் இணைக்கப்பட்டு உள்ளன. உதான் திட்டத்தின் கீழ் ஏழை எளியோர் உட்பட அனைத்து தரப்பினருக்கும் விமான சேவை உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. உஜ்வாலா திட்டத்தின் கீழ் எண்ணற்ற ஏழைக்குடும்பங்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் வழங்கப்படுகிறது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 3 கோடி பேர் பயன்பெற்றுள்ளனர்.
11 கோடி வீடுகளுக்கு குழாய் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. இரண்டரை மடங்கு அதிகமாக குறைந்த பட்ச ஆதார விலையை விவசாயிகள் பெறுகின்றனர். விவசாய கடன் பெறும் நடைமுறை எளிதாக்கப்பட்டு உள்ளது. விவசாயிகளுக்கு குறைந்த விலையில் உரம் கிடைக்க ரூ.11 கோடி செலவு ஒதுக்கப்பட்டுள்ளது. எரிபொருட்களில் 12 சதவீதம் எத்தனால் கலப்பு மூலம் விவசாயிகள் பயன்பெறுவார்கள். ஏழை பெண்களுக்கு ரூ.8 லட்சம் கோடி அளவுக்கு கடன் வழங்கப்பட்டு உள்ளது. பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் குடிநீர், மின்சார வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. நாட்டின் மாதாந்திர ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.40 லட்சம் கோடிக்கும் அதிகமாக உள்ளது. நாட்டின் ஆயுத தளவாட உற்பத்தி அதிகரிக்கும் வகையில், தமிழகம் பாதுகாப்பு காரிடர்கள் அமைக்கப்பட்டு உள்ளன. பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாதத்திற்கு எதிராக பாதுகாப்பு படையினர் உறுதி உடன் உள்ளனர். நாட்டில் நக்சல் தாக்குதல்கள் குறைந்துள்ளன. முன்பை விட எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. எல்லைப்பகுதிகளில் அமைதி நிலவுகிறது. காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பயங்கரவாத சம்பவங்கள் வெகுவாக குறைந்துள்ளன. பயங்கரவாத செயல்களுக்கு உடனுக்குடன் பதிலடி கொடுக்கப்படுகின்றன. சூரிய ஆற்றல் மூலம் நடக்கும் மின் உற்பத்தியில் இந்தியா 5வது இடத்தில் உள்ளது. விரைவில் முதலிடம் பிடிக்கும். பிரதமரின் சூர்யோதயம் திட்டம் மூலம் 1 கோடி வீடுகளில் சோலார் மேற்கூரைகள் அமைக்கும் திட்டம் அறிமுகம் செய்யப்படும்.
பள்ளியில் இருந்து பாதியில் வெளியேறுபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கல்வியில் தாய்மொழிக் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவிற்கு என விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையம் அமைக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. சுற்றுலாத்துறையை மத்திய அரசு மேம்படுத்தி உள்ளது, வட கிழக்கு மாநிலங்களில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அயோத்தி கோயில் கும்பாபிஷேகத்திற்கு பிறகு, 13 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளனர். பழங்குடியின கிராமங்களிலும் 4ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. கைவினை கலைஞர்களை பயனடையும் வகையிலும், அத்தொழிலில் புதியவர்களை ஊக்குவிக்கும் வகையில் பிரதமரின் விஸ்வகர்ம திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது.
மேக் இன் இந்தியா என்ற சொல்லாடல் உலகளவில் இந்தியாவை உயர்த்திப்பிடிக்கும் குளோபல் பிராண்ட் ஆக மாறி உள்ளது. சர்வதேச விநியோக சங்கிலியை இந்தியா தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது. செமி கண்டக்டர் துறையில் அதிகளவு அன்னிய முதலீடு வந்துள்ளது. கடல் வழியே ஆப்டிக் பைபர் இணைப்பு லட்சத்தீவுக்கு வழங்கப்பட்டு உள்ளது. உலகளாவிய நாடுகள் பொருளாதார நெருக்கடியில் இருந்த போதும், இந்தியாவில் பணவீக்கத்தை அரசு கட்டுக்குள் வைத்து இருந்தது. விமான நிலையங்களின் எண்ணிக்கை 2 மடங்காக அதிகரித்து உள்ளது. பிரதமர் தலைமையிலான அரசு செயற்கை நுண்ணறிவு துறையில் கவனம் செலுத்தி வருகிறது. ஏழை நாடுகளின் குரலாக இந்தியா ஒலித்து வருகிறது. இவ்வாறு ஜனாதிபதி பேசினார்.