விஸ்வகர்மா யோஜனா’ திட்டத்தில் 1.40 லட்சம் விண்ணப்பங்கள் பதிவு

பிரதம மந்திரி ‘விஸ்வகர்மா யோஜனா’ திட்டம், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் அமைச்சகத்தால் தொடங்கப்பட்டது. இத்திட்டத்திற்கான விண்ணப்ப பதிவு, கடந்த 17ம் தேதி துவங்கிய நிலையில், தற்போது 1.40 லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் பதிவாகி உள்ளன.

இதுகுறித்து மத்திய அமைச்சர் நாராயண் ராணே கூறியதாவது: பிரதம மந்திரி விஸ்வகர்மா யோஜனா திட்டம், தொடங்கப்பட்ட 10 நாட்களுக்குள் அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பங்களைப் பெற்றிருப்பது, அதன் வெற்றிக்கு ஒரு சான்றாக உள்ளது. இத்திட்டம், சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய விஸ்வகர்மா சகோதர, சகோதரிகளின் வளர்ச்சிக்கு ஒரு மைல்கல்லாக இருக்கும். மேலும், அவர்களின் இழந்த அடையாளத்தை மீட்டெடுக்கும்.

பாரம்பரிய கைவினைஞர்களின் உற்பத்தி திறனை மேம்படுத்துவதையும், அவர்களின் தயாரிப்புகள் உள்நாட்டு மற்றும் உலகளாவிய சந்தைகளுக்கு கொண்டு செல்வதையும் நோக்கமாகக் கொண்டுஉள்ளது இத்திட்டம். இதில், பயனாளிகளுக்கு திறன் பயிற்சியோடு, தினசரி 500 ரூபாய் உதவித்தொகையும் வழங்கப்படும். மேலும், 3 லட்சம் ரூபாய் வரை பிணையமில்லாத நிதி உதவியும் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.