ஹிந்து தலித் மக்களின் குரலாய் இந்துமுன்னணி

இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதம் மாறிய தலித் கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்கின்ற வழக்கு மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விவாதம் எழுந்துள்ள நிலையில், இந்திய சமூகத்தில் அது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது, காங்கிரஸ் ஆட்சி காலத்தில் வாக்கு வங்கி அரசியலுக்காக சிறுபான்மையினரை தாஜா செய்யும் நோக்கத்தில் அமைக்கப்பட்ட ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அறிக்கை அடிப்படையில், கிறிஸ்தவ இஸ்லாமியர்களாக மதம் மாறிய தலித்துகளுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது அண்ணல் அம்பேத்கரின் சித்தாந்தத்தை சிதைக்கும் செயலாகும். ஏற்றத்தாழ்வுள்ள சமூகத்தில் ஒதுக்கப்பட்ட மக்கள் முன்னேற்றம் காண்பதற்காக அண்ணல் அம்பேத்காரால் உருவாக்கப்பட்டதே இடஒதுக்கீடு கொள்கை ஆகும். ஹிந்து மதத்தில் மட்டும் தான் ஏற்றத்தாழ்வுகள் உள்ளது என கூறிக் கொள்ளும் இஸ்லாமிய, கிறிஸ்தவ மதங்கள் தங்கள் மதத்தில் சம உரிமை உள்ளதாக கூறிவரும் நிலையில் மதம் மாறிய தலித்துகளுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீடு சலுகை தங்களுக்கும் வேண்டுமென கேட்பது அடிப்படை வாதம் அற்றதாகும். வாக்கு வங்கி அரசியலுக்காக ஹிந்து பட்டியலின மக்களின் சலுகைகளை முஸ்லிம் கிறிஸ்தவர்கள் பிரித்துக் கொடுக்க நினைப்பது ஹிந்து தலித் மக்களுக்கு செய்யும் துரோகம் ஆகும். ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அறிக்கையை ஏற்காத தற்போதைய மத்திய அரசு, முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே ஜி பாலகிருஷ்ணன் தலைமையில் மற்றொரு குழுவினை அமைத்திருப்பது வரவேற்கத்தக்கது. அந்த குழுவின் அறிக்கையும் வரும்வரை காத்திருந்து அதனையும் சேர்த்து பரிசீலிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தை அனைத்து இந்து தலித் மக்களின் குரலாய் இந்துமுன்னணி கேட்டுகொள்கிறது. மதம் மாறியவர்களுக்கு இட ஒதுக்கீடு சலுகை அளிப்பது மதமாற்றத்தை மேலும் அதிகப்படுத்தும் ஒரு காலகட்டத்தில் இது இந்திய இறையாண்மைக்கு பேராபத்தை ஏற்படுத்தும் என்பதை வாக்கு வங்கி செய்யும் அரசியல் செய்யும் கட்சிகள் உணர வேண்டும். ஹிந்து தலித் மக்களின் உரிமைகளை பறிக்க நினைக்கும் அரசியல்வாதிகளை ஹிந்து பட்டியலை இன மக்கள் அடையாளம் கண்டு அரசியல் ரீதியாக புறக்கணித்தால் மட்டுமே இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என ஹிந்து மக்களை இந்துமுன்னணி கேட்டுக்கொள்கிறது” என கூறப்பட்டுள்ளது.