ஹிந்து சாதுக்களை கொன்றவர்களுக்கு ஜாமீன்

மகாராஷ்டிர மாநிலம் பால்கரில் கடந்த ஏப்ரல் 16’ல் சாது கல்பவ்ரூக்ஷா கிரி (70),  சுஷில்கிரி மகாராஜ் (35) மற்றும் அவர்களின் ஓட்டுநர் நிலேஷ் தெல்கேட் (30) ஆகியோரை பால்கரின் காசா பகுதியில் உள்ள கட்சின்சலே கிராமத்தில் 300 பேர் கொண்ட ஒரு கும்பல் கற்கள், கட்டைகள் கொண்டு மூர்கமாக தாக்கிக் கொன்றனர். இந்த சம்பவம் வீடியோவாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட பின்னரே வெளிச்சத்துக்கு வந்தது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

சாதுக்களைக் கொடூரமாக கொன்றவர்கள் மீது  90 நாட்களுக்குள் மகாராஷ்டிர காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால் குற்றம் சாட்டப்பட்ட 28 பேருக்கும் ஜாமீந் கிடைத்துள்ளது. முன்னதாக இந்த சம்பவம் தொடர்பாக 154 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது ஜூலை மாதம் சிஐடி குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது, ஆனால் அதில் அனைவரின் பெயர்களும் இல்லை. இந்த வழக்கில் ஏப்ரல் மாதம் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு எஃப்.ஐ.ஆர் அடிப்படையில் மட்டுமே அவர்கள் கைது செய்யப்பட்டனர். இதை போன்ற காரணங்களினால் அவர்களுக்கு தற்போது ஜாமீன் கிடைத்துள்ளது.

மகாராஷ்டிர அரசின் மந்தநிலை இந்த வழக்கின் ஆரம்பத்தில் இருந்தே மிகத்தெளிவாகத் தெரிந்தது. குற்றவாளிகளைக் கைதுசெய்து வழக்கை தீவிரமாக விசாரிக்க அந்த அரசு முயற்சிக்கவில்லை. பொதுமக்களின் அழுத்தம் காரணமாகவே ஆமை வேகத்தில் செயல்பட்டது. ஆளும் கட்சி கூட்டணியில் அங்கம் வகிக்கும் சில தலைவர்களுடன் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் நெருக்கமாக இருந்த காரணத்தால் இந்த வழக்கு தொடர்பான விசாரணை ஆரம்பத்தில் இருந்தே சரியான திசையில் செல்லவில்லை என்றும் பலர் குற்றம் சாட்டியுள்ளனர்.