ஹிந்து கடவுள்களை இழிவுபடுத்தினால்… ராஜேந்திர பாலாஜி எச்சரிக்கை

“ஹிந்து கடவுள்களை இழிவுபடுத்தி பேசுவதை ஆதரிக்கும் கட்சிகள் கண்டிக்கப்படும்; தண்டிக்கப்படும்,” என, பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.

விருதுநகரில் நேற்று அவர்,

நடிகர் ரஜினி, ஊர்வலம் நடந்தது என்று தானே கூறினார்; இது அவதுாறா. ஊர்வலம் நடக்கவில்லை என்றால் நடக்கவில்லை என மறுப்பு கூறிவிட்டு செல்ல வேண்டியது தானே. தி.க.,வினர் ரஜினியை எதிர்க்கின்றனரா அல்லது பிராமண சமுகத்தை எதிர்க்கின்றனரா. ஒரு சமுதாயத்தை இழிவுபடுத்தும் இயக்கமாக, தி.க., தன்னை வெளிப்படுத்தி பிழைப்பு நடத்துவதை ஏற்று கொள்ள முடியாது. ரஜினி ஒரு ஆன்மிகவாதி. அவர் கடந்த கால நிகழ்வை பேசியிருக்கிறார். அதற்கான ஆதாரமும் காட்டி இருக்கிறார். ஈ.வெ.ரா., பற்றி அவர் அவமரியாதையாக பேசவில்லை. நானும், ஈ.வெ.ரா.,வை மதிப்பவன்தான்.

ஹிந்து கடவுள்களை இழிவுபடுத்தி பேசுவதை ஆதரிக்கும் எந்த கட்சியாக இருந்தாலும் கண்டிக்கப்படும்; தண்டிக்கப்படும். வரும் தேர்தலில், அவர்களது அரசியல் வாழ்வே முடிந்துவிடும். ரஜினியை அவமரியாதை செய்வது கண்டிக்கத்தக்கது.

எதற்கெடுத்தாலும், ஆர்.எஸ்.எஸ்., என்கிறீர்கள். ஆர்.எஸ்.எஸ்., காரர்கள் ஏதேனும் தவறு செய்து விட்டனரா; இல்லையே. டில்லி நேரு பல்கலையில், வன்முறை சம்பவங்கள் குறித்து கூட்டம் போட்டு பேசினால் தேசியவாதிகள் தாக்கதான் செய்வர். இந்தியாவில் இருந்து இந்தியாவை திட்டுபவர்களுக்கு இதுபோன்ற சம்பவங்கள் பாடம்.

தி.மு.க.,வின் முகமூடி, தி.க., தான். ஹிந்துக்களை அடித்தால் வாங்கி கொள்வர் என, தி.க.,வினர் நினைக்கின்றனர். எங்களுக்கு முதுகெலும்பு இரும்பு போன்று உள்ளது என்பதை காட்டும் காலம் வரும். அப்போது தி.மு.க., – தி.க., தவிடுபொடியாகிவிடும்.

அ.தி.மு.க., ஆட்சி ஆன்மிக ஆட்சி. எந்த மதமும் மனிதர்களை கொல்லச் சொல்லவில்லை. தவறு இழைக்காத சமுகசேவை ஆற்றும் அனைவரும் ஆன்மிகவாதிகள் தான். அனைவருக்கும் முதல்வராக தகுதியுண்டு, என முதல்வர் கூறுவது அவரது பெருந்தன்மையை குறிக்கிறது.