ஹிந்துத்துவம்: திருக்குறள் ஹிந்து மாமுனிவர் தந்த வேதம்

* மிக மிகப் புனிதமானது என்று அனைவரும் கங்கையைப் போற்றுகிறார்கள். எனவேதான் காவிரியைப் புகழும்போது, ‘கங்கை நதியையும் விடப் புனிதமானது’ என்று பேசுகிறோம். இதே முறையில் தான் திருவள்ளுவர், பிச்சை எடுக்கும் மனப்பான்மை கேவலம் என்று சொல்ல வரும்போது, பசுவிற்கு நீர் வேண்டும் என்று கூட யாசகம் கேட்கக்கூடாது என்கிறார் (குறள் 1006). அதாவது பசுப்பாதுகாப்பு தலைசிறந்த அறம் என்றாலும் அந்தக் காரணத்தைக் காட்டிக்கூட கையேந்தக் கூடாது என்று வலியுறுத்துகிறார். திருக்குறளில் இதுபோன்று ஹிந்து தத்துவங்களின் முத்திரை அதிகாரத்துக்கு அதிகாரம் பதிந்துள்ளது.

* திருக்குறள், மனிதர் அனைவருக்கும் பொதுவான ஒழுக்கங்களை வலியுறுத்தும் நன்னெறி நூல்தான். ஆனாலும் பாரதத்தின் தொன்மையான முனிவர்களது மரபில் வந்தவர் ஆதலால், திருவள்ளுவர், பாரதப் பண்பாட்டின் பின்னணியில்தான் அந்த பொதுவான நன்னெறியை விளக்கியிருக்கிறார்.

* கல்வி எவ்வளவு அவசியம் என்பதை வலியுறுத்துவதற்காக ஒரு பிறவியில் கற்ற கல்வி ஒருவனுக்க்கு ஏழு பிறப்பிலும் கைகொடுக்கும் (குறள் 398) என்று விளக்குகிறார் வள்ளுவர். மறு பிறப்பில் நம்பிக்கை என்பது யாருடைய சிறப்பு இயல்பு? அது உலகறிந்த விஷயம்.

* ‘துறவிக்கு வேந்தன் துரும்பு’ என்பது ஹிந்து சமுதாயத்தின் சிறப்பான அமைப்பை சுட்டிக்காட்டும் பழமொழி. ஹிந்து வாழ்க்கை முறையில் ஆன்மிகமே முதலிடம் பெறுகிறது என்பது இதன் பொருள். இதைத்தான் வள்ளுவரும் துறவின் மேன்மையை விளக்குகையில் இவ்வாறு கூறுகிறார்: முற்றும் துறந்தவரே உயர்ந்த நிலையினர் ஆவார்” (குறள் 348).

* திருவள்ளுவர் மனிதனின் உடலை நிலம், நீர், காற்று, ஒளி, ஆகாயம் ஆகிய ஐந்து பூதங்களின் தொகுப்பாகக் காண்கிறார் (குறள் 271). இது ஹிந்து மரபு அல்லாமல் வேறென்ன?

* தவநெறி நின்று மரணத்தை வெல்லுதல், சிரஞ்சீவியாக வாழ்தல் இவற்றை நமது வேத உபநிடதம் தந்த முன்னோர்கள் மிக உயரிய நிலைகளாக வைத்து, துருவன், நசிகேதன் கதைகளால் விளக்கினார்கள். திருவள்ளுவரும் இந்த மரபின் அடியொற்றியே தவத்தால் கிடைக்கும் சக்தி கொண்டு யமனையே வெல்லமுடியும்” (குறள் 269) என்று கூறுகிறார்.

* கற்பு என்கிற பண்பை மிக உயரியதாகப் போற்றுவது ஹிந்து சமுதாயம். கற்பு என்ற ஒரு பண்பின் காரணமாகவே அருந்ததி முதல் கண்ணகி வரை தெய்வீக ஆற்றல் உள்ளவர்களாகப் போற்றப்படுவதைப் பார்க்கிறோம். இதையே திருவள்ளுவர், கற்புக்கரசியான பெண்மணி ‘பெய்’ என்றால் மழை பெய்யும் என்று சிறிதும் மிகைப்படுத்தாமல் கூறியிருக்கிறார் (குறள் 55).

* இவ்வாறு திருக்குறளின் வாயிலாக, திருவள்ளுவ நாயனார் ஹிந்து மரபில் காலூன்றி நின்று உலகம் முழுமைக்கும் பொதுவான நீதிகளை வகுத்திருப்பதை உணர முடிகிறது. ஹிந்து மரபை அனுசரித்து அவர் திருக்குறளை இயற்றியதால்தான் அது உலகப் பொது நூலாவதற்கான ஏற்றத்தை பெற்று விளங்குகிறது.

* ஹிந்து தத்துவங்களை மட்டும் அல்லாமல் ஹிந்துக்களின் புராணச் செய்திகளையும் கூட திருக்குறளில் ஆங்காங்கு தருகிறார் திருவள்ளுவர். உதாரணம் சந்திரனை ராகு-கேது என்ற பாம்புகள் மறைந்த சம்பவம் (குறள் 1146)

* சதுர்வித புருஷார்த்தங்கள் (நான்கு வாழ்க்கை குறிக்கோள்கள்) என்று ஹிந்துக்கள் அமைத்துக் கொண்டவை தர்ம, அர்த்த, காம, மோட்சம் (அறம், பொருள், இன்பம், வீடு). இவற்றில் முதல் மூன்றையும் பற்றிய நன்னெறிகளை விளக்குவதற்காகத்தான் திருக்குறளையே இயற்றினார் திருவள்ளுவர் என்னும் ஹிந்து முனிவர். மோட்சம் (வீடுபேறு) என்பது அவரவர் அனுபவித்து அடைவதற்கு உரியது என்பதால் அதை மட்டும் திருவள்ளுவர் பாடவில்லை என்று திருக்குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகர் காரணம் கூறியிருக்கிறார்.

(ஜனவரி 15 திருவள்ளுவர் தினம்)