நூறாண்டுகளாக சங்கப்பணி மட்டுமல்லாது, பல்வேறு வகையான சமுதாயப் பணிகளையும், ஆர்.எஸ்.எஸ் தொடர்ந்து செய்து வருகிறது. சங்கத்தில் பயிற்சி பெற்ற கார்யகர்த்தர்கள் சமுதாயத்திற்கு பயன்படும் வகையிலான பல்வேறு அமைப்புகளை தொடங்கி, மக்கள் பயன்பெறும் வகையில் பணி செய்து வருகின்றனர். இந்த வாரம் ஹிந்துக்களின் உரிமைக்காகப் போராடும் இந்து முன்னணி பற்றி அறிவோம்…
நூறாண்டுகளாக சங்கப்பணி மட்டுமல்லாது, பல்வேறு வகையான சமுதாயப் பணிகளையும், ஆர்.எஸ்.எஸ் தொடர்ந்து செய்து வருகிறது. சங்கத்தில் பயிற்சி பெற்ற கார்யகர்த்தர்கள் சமுதாயத்திற்கு பயன்படும் வகையிலான பல்வேறு அமைப்புகளை தொடங்கி, மக்கள் பயன்பெறும் வகையில் பணி செய்து வருகின்றனர். இந்த வாரம் ஹிந்துக்களின் உரிமைக்காகப் போராடும் இந்து முன்னணி பற்றி அறிவோம்…
பாரத தேசத்தில் தமிழகம் ஒரு வித்தியாசமான மாநிலம். இங்கு தான் “நாத்திகம்” என்ற பெயரில், முதன்முதலில் ஹிந்து விரோதம் தலைவிரித்தாடியது. ஹிந்துக்களை சாதி வெறுப்புணர்வு மூலம் பிரித்தாளும் சூழ்ச்சி நடந்தது.
கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் மதமாற்றம் என வேட்டை நடத்துவது பகிரங்கமாக நடந்தது. இதற்கு ஆளும் கட்சி உடந்தையாகவும் இருந்தது. இதனைத் தட்டிக்கேட்க மக்கள் செல்வாக்கு உள்ள எந்த கட்சியும் தயங்கின.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தமிழக இணை அமைப்பாளராக இருந்த ஸ்ரீ இராம கோபாலன் தமிழகமெங்கும் சுற்றுப்பயணம் செய்த போது மக்கள் விரக்தியில் குமுறினார்கள்.
இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ். மாநில அமைப்பாளராக இருந்த சூர்ய நாராயண ராவ் ஜிக்கு அவரது மாநிலமான கர்நாடகாவில் இருந்து ஒரு நண்பர் தென் தமிழகத்தில் நடைபெற போகும் பெரும் அதிர்ச்சியான சம்பவம் குறித்த செய்தியை கடிதம் மூலம் அனுப்பியிருந்தார்.
அது திருநெல்வேலி மாவட்டத்தில், ஒரு லட்சம் ஹிந்து குடும்பங்களை முஸ்லீமாக மதம் மாற்ற நடக்கும் சதி. அந்த நிகழ்ச்சியில் இலங்கை, மலேசியா போன்ற வெளிநாடுகளின் இஸ்லாமிய அமைச்சர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள் என்பதுதான். இத்தகைய நிலையில் ஹிந்துக்களுக்காகப் போராட ஓர் இயக்கம் வேண்டும் என்று பலரும் குறிப்பிட்டார்கள்.

1980 ஆம் ஆண்டு செப்டம்பர் 20, 21 ஆம் தேதிகளில் கரூர் நாரத கான சபாவில், ஆர்.எஸ்.எஸ். செயற்குழுக்கூட்டம் நடந்தது. அதற்கு முதல் நாள் அதாவது 19 ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரக் (முழு நேர ஊழியர்கள்) கூட்டம் நடந்தது. அதில் ஹிந்துக்களுக்காகப் போராட ஓர் இயக்கம் பற்றி ஆலோசிக்கப்பட்டது. அடுத்த நாள் செம்பம்பர் 20 ஆம் தேதி மாநில செயற்குழுக் கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தென்பாரத அமைப்பாளர் ஸ்ரீ யாதவராவ் ஜோஷி ஒரு கேள்வியை கேட்டார்.
தமிழகத்தில் எந்தெந்தப் பகுதியில் யார் யார் வலுவாக இருக்கிறார்கள்?
பலரும் இந்த கட்சி, அந்த அமைப்பு என விவரமாக கூறினார்கள். ஆனால் ஒருவரும் 90% சதவீதம் ஹிந்துக்கள் வாழும் பகுதியில் கூட, ஹிந்துக்களின் பலமான பகுதி என்று கூறவில்லையே ஏன்? அதனால், ஹிந்துக்களுக்காக ஓர் அமைப்பு வேண்டும்.
செப்டம்பர் 21 ஆம் தேதி அன்று, தமிழகத்தில் உள்ள ஹிந்துக்களுக்காக ஓர் அமைப்பு, அது மதம் மாற்றம், மத பயங்கரவாதம், சாதி கலவரங்கள் இவற்றை தடுத்து நிறுத்த, ஹிந்துக்களைப் போராட வைக்கும் ஓர் அமைப்பு தேவை என அறிவித்தார்.
இந்த பிரச்சனையை ஆழமாக, அகலமாக சிந்தித்து அது குறித்து விவரங்களை திரட்டியுள்ள ஸ்ரீ இராம. கோபாலன் அவர்களே, அதன் பொறுப்பாளராக இருந்து செயல்படுவார் என அறிவித்தார் ஸ்ரீ யாதவராவ் ஜோஷி.
அடுத்த சில மாதங்களுக்கு புதிய அமைப்பின் வேலைகளிலும், ஆர்.எஸ்.எஸ். இணை அமைப்பாளராகவும் தொடர்வார் என அறிவிக்கப்பட்டது. ஸ்ரீ இராம கோபாலன் அவர்களின் முந்தைய திட்டப்படி, கன்னியாகுமரி சென்றார். நேரே பகவதி அம்மன் கோயிலுக்கு சென்று வழிபட்டார். அம்மா எனக்குப் புதிய சோதனை, உன்னை நம்பி ஏற்றுக்கொண்டு விட்டேன். எனக்கு நீயே துணை இருப்பாய் என்று பிரார்த்தனை செய்துவிட்டு வெளியே வந்தார்.
ஸ்ரீ இராம கோபாலன் அவர்களை காண அங்கு சங்க ஸ்வயம்சேவகர்களும் மற்றும் சில இளைஞர்களும் வந்தார்கள். ஹிந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்து பேச ஒரு அமைப்பு வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இந்த ஊரில் ஹிந்துக்களுக்கு என்ன பிரச்சனை இருக்கிறது? என்று கேட்டார்.
பகவதி அம்மன் கோயிலைச் சுற்றியுள்ள பகுதியில் வாழும் கிறிஸ்தவர்களால், அங்கு வரும் பக்தர்களுக்கு ஏராளமான தொந்தரவு, அதிலும் ஹிந்து பெண்கள் பக்தியுடன் கடலில் குளித்து ஈரத்துணியோடு அம்மனை தரிசிக்க வருவார்கள்.
அவர்கள் வரும்போது மீன் கழுவி, நீரை அவர்கள் மீது படுமாறு ஊற்றுவார்கள். இளைஞர்கள், பெண்கள் மீது மோதுவது மாதிரி வந்து மிரள வைப்பார்கள். இது குறித்து காவல்துறையில் கூறினால், எங்களை மிரட்டுகிறார்கள் என்று கூறி வெதும்பினர்.
ஹிந்துக்களுக்கு என்ன பிரச்சனை என்று இப்படி ஒரு கேள்வி கேட்க மாட்டார்களா என சமுதாயம் ஏங்கியது புரிந்தது. உடனே, போய் போலீசில் புகார் கொடுங்கள், வாங்க மறுத்தால், மிரட்டினால் போராடுங்கள், யார் முதலில் கேஸ் வாங்குகிறார்களோ அவர்களுக்கு பொறுப்பு வழங்குவேன் என்றார்.
அவரது வார்த்தையில் இருந்த தர்மத்தின் சக்தி, இளைஞர்களுக்கு புது தெம்பு தந்தது. முதன் முதலில் இப்படித்தான் அந்த இயக்கத்தை துவக்கினார் ஸ்ரீ இராம. கோபாலன். இப்படியே ஒவ்வொரு மாவட்டமாக பயணம் செய்தார். அந்தந்த ஊரில் இருக்கும் பிரச்சனைக்காக போராட வைத்தார்.

ஹிந்து அமைப்பிற்கு ஒரு பெயர் வேண்டுமே, அதன் கட்டமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்று பலரிடம் பேசினார். ஸ்ரீ இராம கோபாலன் நினைத்தது, இது மக்கள் இயக்கம், எனவே மக்களின் விருப்பப்படியே அமைவதே சரியாக இருக்கும் என்று. அப்படி தேர்ந்தெடுக்கப்பட்டது “இந்து முன்னணி” என்ற பெயர், அதன் கொடி வடிவமைப்பு, இலட்சியினை, அதில் இடம்பெற்ற “தர்மம் காக்க, அதர்மம் அகற்ற” என்ற வாசகம்.
மேலும் இந்துவாக வாழ்வோம், இந்து தர்மம் காப்போம். இந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேசி என்ற வாசகங்கள்.
இந்து முன்னணி துவங்கிய ஓராண்டிலேயே, அதாவது 1981 பிப்ரவரி 13, 14 தேதிகளில் முதல் மாநில மாநாடு “இந்து எழுச்சி மாநாடு” என்று கன்னியாகுமரி, நாகர்கோயிலில் நடைபெற்றது. ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டனர்.
2025 ஆம் ஆண்டு, ஜூன் 22 தேதி மதுரையில் 7வது மாநில மாநாடு “முருக பக்தர்கள்” மாநாடாக 5 லட்சம் பேர் கலந்துகொண்டனர் என்றால், இந்து முன்னணியின் அமைப்பு ரீதியான முயற்சி எத்தகைய வளர்ச்சி! இது இறைவனின் இயக்கம் என்பார் ஸ்ரீ இராம. கோபாலன் அவர்கள்.
இந்து முன்னணியின் சாதனைகள் சில..
முதல் ஒரு வருடத்திலேயே, வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயிலில் சுவாமி பிரதிஷ்டை மக்கள் சக்தியால் செய்தது. (1981, மார்ச் 16) ஹிந்து வாக்கு வங்கி வலிமையை உணர்த்த, கன்னியாகுமரி பத்மநாபபுரம் தொகுதியில் சுயேட்சைக்கு ஆதரவு கொடுத்து வெற்றி பெற வைத்தது.
ஹிந்துக்கள் ஜனத்தொகை குறைவதை தடுக்க, பத்து குழந்தைகள் பெற்ற தாய்க்கு “வீரத்தாய்” விருது வழங்கி கௌரவித்தது (1986).
ஓடாமல் நின்ற திருவாரூர் தேரை ஓட வைத்தது. (1989 மே 7)
இந்துக்களின் குரல் ஓங்கி ஒலித்திட, “நாடு துண்டாடப்பட்ட வரலாறு”, “அன்னையடா நம்ம பூமி”, “போராட வாடா”, “இந்துக்களின் குமுறல்”, “யாரடா தமிழன்”, என பல பிரச்சார ஒலிப்பேழை வெளியிட்டது.
-200க்கும் மேற்பட்ட பிரச்சார புத்தகங்கள் வெளியிட்டது. வீட்டில் கொண்டாடிய விநாயகர் சதுர்த்தியை, 1983ல் ஒன்றரை அடியில் ஒரே ஒரு விநாயகரை வைத்து பொது விழாவாக்கியது. இன்று தமிழகம் முழுவதும் ஒன்றரை லட்சம் இடங்களில் பொது விழாக்கள், 25 ஆயிரத்திற்கும் அதிகமான ஊர்வலங்கள் என விரிந்து பறந்துள்ளது.
திருவிளக்குப்பூஜை, கோ பூஜை, துளசி பூஜை, சுமங்கலி பூஜை, வேல் பூஜை என பல்வேறு ஆன்மீக நிகழ்ச்சிகள் மூலம் மக்களிடையே பிரபலப்படுத்தி ஹிந்து விழிப்புணர்வை ஏற்படுத்தியது. இந்து அன்னையர் முன்னணி, இந்து இளைஞர் முன்னணி, இந்து வழக்கறிஞர் முன்னணி, இந்து இணையதள முன்னணி, இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கம், இந்து வியாபாரிகள் நல சங்கம் என பலவிதமான அணிகள் மூலம் எல்லா தரப்பு மக்களிடமும், ஹிந்து சமுதாய உணர்வை தட்டி எழுப்புகிறது.
மதமாற்றம், மத பயங்கரவாதம், ஹிந்து விரோத பிரச்சாரங்களை முறியடித்து வருகிறது.
பசுத்தாய் மாத இதழ், பசுத்தாய் பதிப்பகம், பசுத்தாய் பொங்கல் மலர் என வெளியீடுகள் வெளியிட்டு வருகிறது.
ஒன்றிய அளவில், கிராம பஞ்சாயத்து மற்றும் மாநகரம் என மாநிலத்தில் 70 சதவீத இடங்களில் இந்து முன்னணி கிளை பரவியுள்ளது.
போராட தயங்காத சமுதாயத்தை உருவாக்க வேண்டும். நாம் நமது சமூகத்தை, நமது உரிமைகளை பாதுகாக்க ஜனநாயக வழியில் போராடும்போது பல இன்னல்களை, மிரட்டல்களுக்கு ஆளானாலும், சமுதாயம் தைரியமாக போராட வைக்கிறது.
ஆரம்ப காலத்தில் ஸ்ரீ இராம கோபாலன், “இந்து முன்னணிக்கு வந்தால் கேஷ் (பணம்) கிடைக்காது, கேஸ் (வழக்கு) தான் கிடைக்கும்”, “உங்கள் வீட்டில் உள்ளவர்கள் கூட உன்னை ஏற்க மறுக்கலாம், உனக்கு நீயே வாய்க்கரிசி போட்டுக்கொண்டு வா” என் ஹிந்து சமூகத்திற்கு, என் ஹிந்து சமயத்திற்கு என் உயிரையும் தருவேன் என்பவர்கள் வாருங்கள் என்பார். அப்படி வந்த பல்லாயிரம் பேர்கள், இன்று தமிழகம் முழுவதும் எழுச்சியுடன் ஹிந்து சமுதாயத்திற்கு வேலை செய்கிறார்கள்.
எத்தனை அச்சுறுத்தல், வழக்குகள் என இடையூறு செய்தாலும் அச்சமில்லை என்பவனே இந்து முன்னணி தொண்டன். இந்த காரணத்திற்காக நூற்றுக்கணக்கானவர்கள் பலியானாலும், சமயத்திற்காக நமது முன்னோர்கள் போல அச்சமற்று ஜனநாயக வழியில் போராடும் பொறுப்புணர்வை வளர்த்தெடுத்துள்ளது இந்து முன்னணி. ஹிந்து சமுதாயத்தின் காவலர்களாக, இந்து முன்னணியை மக்கள் பார்க்கப்படுகிறார்கள்.
எந்த ஊரில் ஹிந்துக்களுக்கு ஒரு பிரச்சனை என்றாலும், இந்து முன்னணியின் உதவியை நாடி வருகிறார்கள். இந்த நம்பிக்கையை இந்து முன்னணி பெற்றுள்ளது!
ஸ்ரீ இராம கோபாலன் அவர்களிடம், உங்கள் வாழ்நாள் சாதனை என்று எதனை நினைக்கிறீர்கள்? என்று பத்திரிகையாளர்கள் கேட்டபோது,
திருச்செந்தூர் முருகன் கோயிலில் தரிசன கட்டணத்தை 5 ரூபாயிலிருந்து 25 ஆக உயர்த்தினார்கள், அங்கு சாமி கும்பிட வந்த ஒரு வயதான கிராமத்து தாய், “இந்த அநியாயத்தை பக்தர்களை திரட்டி, இந்து முன்னணி தட்டிக்கேட்கும்” என அந்த அதிகாரிகளிடம் உரக்கக் கூறினார். இந்த நம்பிக்கை தான் இந்து முன்னணியின் சாதனை என்றார். அது உண்மை தானே!
கட்டுரையாளர்: – பசுத்தாய் கணேசன்
ஆசிரியர், பசுத்தாய் மாத இதழ்