ஹிண்டன்பர்க் வழக்கில் வாதங்கள் நிறைவு; கவுதம் அதானி பங்குகளின் விலை ஒரே நாளில் ரூ.1.2 லட்சம் கோடி அதிகரிப்பு

ஹிண்டன்பர்க் அறிக்கையால் அதானி குழும பங்குகளின் விலைகடும் வீழ்ச்சி கண்டது. இது, தொடர்பான வழக்கு கடந்த வெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்ற நீதிபதிடி.ஒய்.சந்திரசூட் அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வாதங்கள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து இந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. வழக்கு விசாரணையின்போது சில ஊடக அறிக்கைகளுக்காக செபியின் விசாரணையை சந்தேகப்பட முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியது. குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரம் குறித்தும் கேள்வியெழுப்பியது. இதனிடையே விசாரணையை முடிக்க மேலும் கால அவகாசம் கோரப்போவதில்லை என செபி தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது.

அதானி விவகாரத்தில் செபி எந்தவித குற்றச்சாட்டையும் தெரிவிக்காத நிலையில் பங்குச் சந்தையில் நேற்று நடைபெற்ற வர்த்தகத்தில் அதானி குழும பங்குகளுக்கு முதலீட்டாளர்களிடையே அதிக வரவேற்பு காணப்பட்டது. அதன் காரணமாக அதானி பங்குகளின் விலை நேற்று ஒரே நாளில் 15 பில்லியன் டாலர் அதாவது ரூ.1.20 லட்சம் கோடிக்கும் அதிகமாக ஏற்றம் கண்டது.

ஹிண்டன் பர்க் அறிக்கை குற்றம் சாட்டியதிலிருந்து அதானி குழும பங்குகளின் வர்த்தகம் மந்தமாக இருந்து வந்த நிலையில் நேற்று முதன் முறையாக ஒரே நாளில் அதானி பங்குகள் 13 சதவீதம் அளவுக்கு ஏற்றம் கண்டன என்பது குறிப்பிடத்தக்கது. அதானி குழுமத்தில் முதலீடு செய்துள்ள ராஜீவ் ஜெயினின் ஜிகியூஜி பார்ட்னர் நிறுவனத்துக்கு மட்டும் ரூ.3,000 கோடி அளவுக்கு ஆதாயம் கிடைத்தது. செப்டம்பர் இறுதி நிலவரப்படி அதானி குழுமத்தில் ஜிகியூஜி பார்ட்னரின் இஎம் ஈக்விட்டி பண்ட் 1.28 சதவீத பங்குகளை வைத்துள்ளது.