ஹமாஸ் தீவிரவாதிகளிடமிருந்து மூதாட்டியை பாதுகாத்த கேரள பெண்களுக்கு இஸ்ரேல் பாராட்டு

ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது, இஸ்ரேல் மூதாட்டியை பாதுகாத்த கேரள பெண்கள் இருவரை இஸ்ரேல் பாராட்டியுள்ளது. ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த 7-ம் தேதி காசா எல்லையை தாண்டி தெற்கு இஸ்ரேல் பகுதிக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர்.

அப்போது காசா எல்லை அருகேயுள்ள நிர் ஓஸ் என்ற இடத்தில் ராகேல் என்ற மூதாட்டி வசித்து வந்தார். ஏஎல்எஸ் நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்ட அவரை கேரளாவைச் சேர்ந்த சபிதா மற்றும் மீரா மோகனன் என்ற இரு பெண்கள் கவனித்து வந்துள்ளனர். கடந்த 7-ம் தேதி அன்று காலை 6.30 மணியளவில், சபிதா இரவுப் பணியை முடித்து விட்டு புறப்பட தயாரானார். அப்போது அபாய ஒலி சத்தம் கேட்டது. உடனே அவர்கள் பாதுகாப்பு அறைக்கு சென்று தங்கினர். அப்போது ராகேலின் மகள் போன் செய்து, வீட்டின் கதவுகளை பூட்டிவிட்டு உள்ளே இருக்கும்படி எச்சரிக்கை விடுத்தார்.

சிறிது நேரத்தில் ஹமாஸ் தீவிரவாதிகள் கதவை தட்டும் சத்தம் கேட்டது. அவர்கள் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்தனர். உடனே சபிதா ராகேலின் மகளுக்கு போன் செய்து கதவை தட்டும் சத்தம் கேட்பதாக கூறியுள்ளார். கதவை இறுக பற்றி திறக்க விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என ராகேலின் மகள் கூறியுள்ளார். சபிதாவும், மீராவும் தங்கள் காலணியை கழற்றி வைத்துவிட்டு, தரையில் காலை ஊன்றியபடி, கதவை திறக்கவிடாமல் பிடித்துக் கொண்டனர். தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியும், கேரள பெண்கள் கதவை திறக்காமல் இறுக பிடித்துக் கொண்டனர். அவர்களுக்கு வெளியில் என்ன நடைபெறுகிறது என யூகிக்க முடியவில்லை.

தீவிரவாதிகள் சென்றபின் மதியம் 1 மணியளவில் மீண்டும் கதவை தட்டும் சத்தம் கேட்டது. அவர்கள் இஸ்ரேல் ராணுவத்தினர். அவர்கள் வீட்டில் இருந்த அனைவரையும் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்றனர். தைரியத்துடன் செயல்பட்டு ஹமாஸ் தீவிரவாதிகளிடமிருந்து இஸ்ரேல் மூதாட்டியை பாதுகாத்த கேரள பெண்கள் இருவரின் முயற்சிகளை இஸ்ரேல் பாராட்டியுள்ளது. அவர்களின் பேட்டியை இந்தியாவில் உள்ள இஸ்ரேல் தூதரகம் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது.

மீரா மோகனன் அளித்த பேட்டியில், ‘‘எல்லை அருகே வசிப்பதால், அவசரகால பையில் பாஸ்போர்ட் உட்பட முக்கிய ஆவணங்களை வைத்திருப்போம். அபாய ஒலி சத்தம் கேட்டால், அவசர கால பையை எடுத்துக் கொண்டு பாதுகாப்பு அறையில் நுழைந்து விடுவோம். ஆனால், அந்த அவசர காலப்பை உட்பட அனைத்தையும் ஹமாஸ் தீவிரவாதிகள் எடுத்துச் சென்றுவிட்டனர்’’ என்றார்.