வேட்டி – சேலை அணிந்து வந்து நோபல் பரிசு பெற்ற இந்திய தம்பதி

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த அபிஜித் பானர்ஜி வேட்டி அணிந்தும் அவரது மனைவி சேலை அணிந்தும் வந்து பரிசினை பெற்றது உலக அளவில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம், மருத்துவம் உட்பட பல்வேறு துறைகளுக்கு வழங்கப்படும் உயரிய விருதான நோபல் பரிசு சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.இதற்கான விருது வழங்கும் விழா ஐரோப்பிய நாடான நார்வே தலைநகர் ஓஸ்லோ மற்றும் ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோம் ஆகிய இரண்டு இடங்களில் நேற்று நடந்தது.பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும் அமெரிக்க பொருளாதார நிபுணருமான அபிஜித் பானர்ஜி அவரது மனைவியும் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பொருளாதார வல்லுநரான எஸ்தர் டப்லோ மற்றும் மைக்கேல் கிரெம்மர் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

இந்த விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு அபிஜித் மற்றும் அவரது மனைவி எஸ்தர் ஆகியோர் இந்திய பாரம்பரியப்படி வேட்டி – சேலை அணிந்து வந்து மேடை ஏறி நோபல் பரிசினைப் பெற்றனர். மைக்கேல் கிரெம்மர் ‘கோட் – சூட்’ அணிந்து வந்தார்.இந்த விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு அபிஜித் மற்றும் அவரது மனைவி எஸ்தர் ஆகியோர் இந்திய பாரம்பரியப்படி வேட்டி – சேலை அணிந்து வந்து மேடை ஏறி நோபல் பரிசினைப் பெற்றனர். மைக்கேல் கிரெம்மர் ‘கோட் – சூட்’ அணிந்து வந்தார்.

அபிஜித் பானர்ஜி தங்க நிறத்தில் ஜொலிக்கும் கரை போட்ட வேட்டியும் கருப்பு நிற ‘கோட்’டும் அணிந்திருந்தார். அவரது மனைவி எஸ்தர் பச்சை மற்றும் ஊதா நிறத்திலான புடவையும் சிவப்பு நிற ரவிக்கையும் அணிந்திருந்தார்.

இந்திய பாரம்பரிய முறைப்படி அவர்கள் ஆடை அணிந்து வந்து நோபல் பரிசினை பெற்றது உலக அளவில் பலரது கவனத்தை ஈர்த்தது. இது குறித்த ‘வீடியோ’ சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. நோபல் பரிசு பெறுபவர்கள் தங்கள் துறை சார்ந்து நினைவு பரிசு ஒன்றை ஸ்வீடனில் உள்ள நோபல் அருங்காட்சியகத்திற்கு வழங்குவது வழக்கம்.

இந்த வகையில் அபிஜித் பானர்ஜி மற்றும் எஸ்தர் டப்லோ ஆகியோர் மேற்கு ஆப்ரிக்க நாடான கானாவில் வறுமையில் வாடும் பெண் ஒருவர் உருவாக்கிய அழகான இரண்டு பைகளையும் இந்தியாவை சேர்ந்த பிரதாம் என்ற தொண்டு நிறுவனம் வெளியிட்ட பள்ளி மாணவர்களுக்கான மூன்று பாட புத்தகங்களையும் நோபல் அருங்காட்சியகத்திற்கு பரிசாக அளித்தனர்.இதற்கு முன் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற இந்தியாவை சேர்ந்த அமர்தியா சென் தான் பயன்படுத்திய சைக்கிளை அருங்காட்சியகத்திற்கு பரிசாக அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.