வென்ற ஹிந்துக்களின் ஒற்றுமை

கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் ஹிந்து சமய மாநாட்டைக் கடந்த 85 ஆண்டுகளாக ஹைந்தவ சேவா சங்கம் நடத்திவந்தது. இந்நிலையில் இந்த மாநாட்டை ஹிந்து சமய அறநிலையத்துறை இம்முறை நடத்துவதாகச் சொல்லி, ஹைந்தவ சேவா சங்கத்திற்குப் போட்டியாக அழைப்பிதழ் வெளியிடப்பட்டது. இதனால் ஹிந்து விரோத தி.மு.கவினர் மீது பொதுமக்கள், துறவிகள், ஹிந்து அமைப்பினர் என அனைத்துத் தரப்பினரும் கடும் கோபம் அடைந்தனர். இதையடுத்து கன்னியாகுமரி வந்த அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சுமூகத் தீர்வு எட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபுவும், முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய பொன். ராதாகிருஷ்ணன, “1936ம் ஆண்டு முதல் ஹைந்தவ சேவா சங்கம் மண்டைக்காட்டில் நடத்திவரும் ஹிந்து சமய மாநாடு இந்த ஆண்டும் திட்டமிடப்பட்டு அழைப்பிதழ்கள் அச்சடிக்கப்பட்டது. அதில் சிறிய மாற்றங்கள் தேவை என்னும் நிலையில் தமிழக அரசு தரப்பிலும் மற்றொரு நிகழ்ச்சி நிரல் ஏற்பாடு செய்யப்பட்டு இருதரப்புக்கும் இடையே வேறுபாடு ஏற்பட்டது. இதைச் சரிசெய்யும் வகையில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, இன்று குமரி மாவட்டம் வந்து எல்லா விவரங்களையும் கேட்டு, கருத்து வேறுபாடுகளைக் களைந்து புதிய நிகழ்ச்சி நிரல் ஏற்பாடுகளைச் செய்துள்ளார். சிறு, சிறு மாற்றங்கள் செய்து 1936ம் ஆண்டில் எப்படி நடந்ததோ, அப்படி தொடர்ந்து நடத்த ஹைந்தவ சேவா சங்கத்திற்கு அனுமதி வழங்கியுள்ளார். அவருக்கு மனப்பூர்வமான பாராட்டுக்கள். வாழ்த்துகள்” என்றார். இதனைத் தொடர்ந்து பேசிய சேகர்பாபு, “மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் மாசிக் கொடைவிழாவில் பன்னெடுங் காலமாக ஹைந்தவா சேவா சங்கத்தின் சார்பில் நடக்கும் இந்நிகழ்வு திருக்கோயிலில் வைத்து நடந்தாலும் பக்தர்களின் நலனுக்காக நடத்தப்படும் நிகழ்ச்சி. இந்த ஆண்டு ஏற்கெனவே அழைப்பிதழ் அச்சிடப்பட்டு திட்டமிட்டபடி நடக்கும். இதில் இன்னொரு நோட்டீஸ் அறநிலையத்துறை அடித்திருக்கிறது. இடையில் ஏற்பட்ட சிறு,சிறு வேறுபாடுகளைத் தீர்க்கும் வகையில், இன்று காலையில் இருந்து நானும், முன்னாள் முன்னாள் அமைச்சர் பொன். ராதாகிருஷ்னன், ஹைந்தவ சேவா சங்க நிர்வாகிகளும் கலந்து பேசினோம். அதில் ஹைந்தவ சேவா சங்கத்தின் நிகழ்ச்சி நிரலில் சிறு, சிறு மாற்றங்களை செய்து அவர்களே வழக்கம்போல் நிகழ்ச்சியை நடத்தலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. ஹைந்தவ சேவா சங்கம் நடத்தும் நிகழ்ச்சியில், அனைத்துத் தரப்பினரும் இணைந்து கொள்வார்கள். ஹிந்து சமய அறநிலையத் துறையும் இதில் இணைந்து பணியாற்றும். ஹிந்து சமய அறநிலையத்துறையும், ஹைந்தவ சேவா சங்கமும் அழைத்தால் நானும் இந்த மாநாட்டில் நிச்சயம் பங்கேற்பேன்” என்றார்.