வீர மைந்தர்களுக்கு மணிமண்டபம்

சட்டப் பேரவையில் விதி 110-ன் கீழ் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வியாழக்கிழமை படித்தளித்த அறிக்கை:
குழந்தைகள் விரும்பும் பாடல்களைத் தந்து மக்கள் மனதில் நீங்காத இடம்பெற்றவர் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை. அவரது பிறந்த ஊரான குமரி மாவட்டம் தேரூரில் மணிமண்டபம் அமைக்க வேண்டுமென்ற கோரிக்கையை ஏற்று, அங்கு உருவச் சிலையுடன் கூடிய மணி மண்டபமும், நூலகமும் ரூ.1 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
பெரும்பிடுகு முத்தரையர்: தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி மாவட்டங்களில் களம் பல கண்டு வெற்றி பெற்றவர் பெரும்பிடுகு முத்தரையர். அவரது புகழுக்கு மேலும் சிறப்புச் சேர்க்கும் வகையில், திருச்சி மாவட்டத்தில் உருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபமும், நூலகமும் ரூ.1 கோடியில் உருவாக்கப்படும்.
இரட்டைமலை சீனிவாசன்: அரசியல்வாதி, சமூக சீர்திருத்தவாதி, வழக்குரைஞர் என பன்முகங்களைக் கொண்டு ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்காக குரல் கொடுத்தவர் இரட்டைமலை சீனிவாசன். அவரது சிறப்பைப் போற்றும் வகையில் அவர் பிறந்த இடமான மதுராந்தகம் கோழியாளம் கிராமத்தில் நினைவு மண்டபம், நூலகமும் ரூ.1 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
வி.கே. பழனிசாமிக் கவுண்டர்: பரம்பிக்குளம் ஆழியாறு அணைக்கட்டுத் திட்டத்தின் காரணகர்த்தாவாகவும், சட்ட மேலவை துணைத் தலைவராகவும் இருந்தவர் வி.கே.பழனிசாமிக் கவுண்டர். அவரைச் சிறப்பு செய்யும் விதமாக அவர் பிறந்த இடமான கோவை மாவட்டம் வேட்டைக்காரன்புதூரில் சிலையுடன் கூடிய மணிமண்டபமும், நூலகமும் ரூ.1 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
சர் ஏ.டி. பன்னீர்செல்வம்:  வழக்குரைஞராகவும், சட்டப் பேரவை உறுப்பினராகவும், நிதி, உள்துறை அமைச்சராகவும் இருந்தவர் சர் ஏ.டி.பன்னீர்செல்வம். அவருக்கு திருச்சி மாவட்டத்தில் சிலையுடன் கூடிய மணிமண்டபம் ரூ.50 லட்சத்தில் அமைத்து, ஆண்டுதோறும் அரசின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும்.
அல்லாள இளைய நாயகர்: நாமக்கல் மாவட்டத்தில் விவசாயிகள் நலன்பெற காவிரியின் குறுக்கே ராஜ வாய்க்கால் ஏற்படுத்தியவர் அல்லாள இளைய நாயகர். அவருக்கு புகழ் சேர்க்கும் வகையில் ஜேடர்பாளையத்தில் குவிமாடத்துடன் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் சிலை அமைக்கப்படும்.
ஒண்டிவீரன்-சுந்தரலிங்கனார்: பூலித்தேவன் படையில் படைவீரனாகவும், படைத் தளபதியாகவும் விளங்கியவர் ஒண்டிவீரன். அவரது பெருமையை மேலும் சிறப்பிக்கும் வகையில், நெல்லை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒண்டிவீரன் மணிமண்டபம் ரூ.75 லட்சத்தில் புனரமைக்கப்பட்டு அந்த வளாகத்தில் நூலகம் அமைக்கப்படும்.
வீரபாண்டிய கட்டபொம்மனின் தளபதியாக விளங்கியவர் சுந்தரலிங்கம். அவருக்க பெருமை சேர்க்கும் வகையில் ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள மணிமண்டபம் ரூ.75 லட்சத்தில் புனரமைக்கப்பட்டு, அதில் நூலகம் அமைக்கப்படும்.