வீட்டில் உட்காராமல் ஓட்டு போட நேரில் வந்த 100 வயது வாக்காளர்

திருவள்ளூர் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட பொன்னேரி சட்டசபையில், 311 ஓட்டுப்பதிவு மையங்களில், வாக்காளர்கள் ஓட்டு போட்டனர். மீஞ்சூர் அடுத்த வல்லுார் கிராமத்தில் வசிக்கும் முதியவர் ஸ்டீபன், 100, அங்குள்ள ஓட்டுப்பதிவு மையத்திற்கு உதவியாளர் ஒருவருடன் நடந்து வந்து, ஆவணங்களை அலுவலர்களிடம் காட்டி தன் ஓட்டை பதிவு செய்தார்.

கடந்த 1924ல் பிறந்த இவருக்கு தற்போது, 100 வயதாகிறது. இவர், 1954ல் இருந்து, 70 ஆண்டுகளில், பல்வேறு தேர்தல்களில் ஓட்டளித்து தொடர்ந்து ஜனநாயக கடமை செய்து வருவதாகவும், ஓட்டு போடுவது அனைவரின் கடமை எனவும் தெரிவித்தார்.

வயதானவர்கள் வீட்டிலேயே தபால் ஓட்டு போடுவதற்கு தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்திருந்தபோதும், ஓட்டுப்பதிவு மையத்திற்கு சென்று, ஓட்டு போடுவதே தன் விருப்பம் என தெரிவித்தார். தள்ளாத வயதிலும், ஓட்டுப்பதிவு மையத்திற்கு வந்து முதியவர் ஓட்டுபோட்டது அனைவரையும் வியக்க வைத்தது.