வி.ஹெச்.பி தீர்மானங்கள்

விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மாநில மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டத்தில் 4 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பல நூற்றாண்டுகளாக, பாரதத்தில் வக்ஃபு உருவாவதற்கு முன்பே ஹிந்துக்களிடம் இருந்து வரும் நிலங்களுக்கு வக்ஃபு வாரியம் உரிமை கோரும் சமீபத்திய சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதையொட்டி முதல் தீர்மானம் நிறைவேர்றப்பட்டது. அதில், ஹிந்துக்களின் நிலங்களை சட்ட விரோதமாக அபகரிக்கும் வக்ஃபு வாரியத்தை கண்டித்தும் வக்ஃபு சட்டத்தை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தியும் தீர்மானம் இயற்றப்பட்டது. மேலும், இது, சட்டம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்றும் ஹிந்துக்கள் அவர்களது சொந்த நாட்டிலேயே அகதிகளாகுவதற்கு ஒப்பானது என்றும் அதனை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. தமிழகத்தில் ஹிந்து சமய அறநிலையத்துறை மேற்பார்வையில் பணிபுரியும் நிறுவனங்கள், கோயில்கள், வாரியம் போன்றவற்றில் ஹிந்துக்கள் அல்லாதவர்கள், மத இடஒதுக்கீட்டின் அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்யப்படுகின்றனர். இதனை கண்டித்துள்ள 2வது தீர்மானத்தில், ஹிந்து சமய அறநிலையதுறையின் எந்தவொரு திட்டமும் ஹிந்துக்களுக்கு மட்டுமே பொருந்தவேண்டும், ஹிந்து சமய மற்றும் அறநிலையதுறை, ஹிந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதை நிறுத்த வேண்டும், ஹிந்து சமய அறநிலையதுறை நிறுவனங்களிலும், கோயில் குழுக்களால் நிதியளிக்கப்பட்டு நிர்வகிக்கப்படும் கல்வி நிறுவனங்களிலும் ஹிந்துக்கள் அல்லாதவர்களுக்கு இட ஒதுக்கீடோ,  நியமனமோ செய்யக் கூடாது என்றும் கூறப்பட்டது. திருச்செந்தூரில் உள்ள முருகன் கோயிலுக்கு ஹிந்துக்கள் வழங்கிய 5,309 பசுக்கள் காணாமல் போனதை குறித்து 3வது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கோயிலில் இருந்து மாடுகள் காணாமல் போனது ஹிந்து சமய அறநிலையதுறை அதிகாரிகளே காரணம்.கோயிலில் இருந்து சட்டவிரோதமாக கொடுக்கப்பட்ட பசுக்களை மீட்க வேண்டும். கோயில்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் பராமரிக்கப்படும் கோசாலைகளை பராமரிக்க அரசு தனது பட்ஜெட்டில் தேவையான நிதியை ஒதுக்க வேண்டும் என்று தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டது. சேது சமுத்திரத் திட்டத்தால் தமிழகத்திற்கு எந்தப் பலனும் இல்லை. சேது சமுத்திர திட்டத்தால் 200க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களைச் சார்ந்த மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். பாரதத்தின் வளர்ச்சியை விரும்பாத அந்நிய சக்திகளுக்கு இது சாதகமாகலாம். சர்வதேச மாஃபியாக்கள் தமிழகத்தை கடத்தல் மையமாக்கலாம்.   தி.மு.க., கம்யூனிஸ்ட் கூட்டணிகளுக்கு ராமர் பாலத்தைத் தகர்க்க வேண்டும் என்ற நோக்கத்தைத் தவிர, வேறு கண்ணோட்டம் இருப்பதாகத் தெரியவில்லை. மத்திய அரசு தெளிவாக முடிவு செய்து இத்திட்டத்தை ரத்து செய்வதுதான் தமிழகத்துக்கும் பாரத தேசத்திற்கும் நலம் பயக்கும் என 4வது தீர்மானம் கூறுகிறது.