வில்லன்களை கதாநாயன்களாக காட்டும் வக்கிரத்துக்கு முற்றுப்புள்ளி

கடந்த காலத்தில் பாடபுத்தகங்கள் வில்லன்களை கதாநாயகன்களாக உருமாற்றி காட்டின. ஆனால் அதே நேரத்தில் பாரத மாமன்னர்களை கடந்த கால புத்தகங்கள் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. யாரை முன்னுதாரணமாக கொள்ள வேண்டும், யாரை முன்னுதாரணமாக கொள்ளக் கூடாது என மாணவர்களுக்கு தெரிவிக்கும் வகையில் பாடப்புத்தகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

புதிய கல்வித்திட்டம் உண்மையிலேயே மாணவர்களின் சிந்தனையும், மனோபாவமும் உண்மைக்கு ஏற்புடையதாகத் திகழ வேண்டும் என்ற அடிப்படையில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.

என்.சி.இ.ஆர்.டி எனப்படும் கல்வி, ஆராய்ச்சி, பயிற்சிக்கான தேசிய மன்றம் 8ம் வகுப்புக்கான சமூக அறிவியல் பாடத்தில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.

பாரத நாட்டைச் சேர்ந்த மன்னர்கள் எந்த அளவுக்கு சிறப்பாக ஆண்டார்கள், சாதனை படைத்தார்கள் உள்ளிட்டவை புதிய பாட புத்தகத்தில் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. காகதீய வம்சத்தைச் சேர்ந்த மன்னர்கள் தெலுங்கு இலக்கியத்துக்கும், நீர் மேலாண்மைக்கும், கிராம நிர்வாகத்துக்கும், வருவாய் கட்டமைப்புக்கும் எந்த அளவுக்கு பங்களிப்பு நல்கியுள்ளனர் என்பது எடுத்துரைக்கப்பட்டுள்ளது. தெலுங்கானாவில் வாரங்கல் அருகே உள்ள ஹனம்கொண்டாவில் 1000 தூண்களைக் கொண்ட கோயில் மண்டபம் உள்ளது.

இது பொறியியல் அதிசயமாகும். கல்யாணி சாளுக்கிய மூன்றாவது சோமேஸ்வர் வானவியலுக்கும், இசைக்கும், மருத்துவத்துக்கும், உணவுக்கும், விளையாட்டுக்கும் மிகுந்த முக்கியத்துவம் அளித்தார்.

மகாபலிபுரம் கடற்கரையில் உள்ள கோயில் பல்லவ மன்னர்களின் சிற்பக்கலைக்கு எடுத்துக் காட்டாக விளங்குகிறது. இதை யுனெஸ்கோ உலக மரபு தலமாக அங்கீகரித்துள்ளது. மேற்கு பாரதத்தில் ஹொய்சாலர்கள் மிகச்சிறப்பாக ஆட்சி நடத்தினார்கள். பேளூரிலும், ஹலேபேடுவிலும் அவர்கள் கட்டிய ஆலயங்கள் கலைச்சிறப்பை பறைசாற்றும் எடுத்துக்காட்டுகளாக விளங்குகின்றன.

கிழக்கு பாரதத்தில் கங்கா வம்சத்தினர் நேர்த்தியாக செங்கோல் செலுத்தினார்கள். அவர்கள் பூரியில் கட்டிய ஜெகனாதர் ஆலயமும், கோனார்கில் கட்டிய சூரியக் கோயிலும் சிற்பக்கலையின் சிகரங்களாகத் திகழ்கின்றன.

காமரூபத்தில் (அஸ்ஸாம்), பிரம்மபாதா வம்சத்தினர் நடத்திய ஆட்சி அருமையானது. இதைப்போல நாட்டின் பல்வேறு பகுதிகளில் எண்ணற்ற மன்னர்கள் சிறப்பாக ஆட்சி நடத்தியுள்ளனர். ஆழ்வார்களும், நாயன்மார்களும் பக்தியை வளர்த்தார்கள். ஆதிசங்கராச்சாரியார், ராமானுஜர், பசவேஸ்வரா உள்ளிட்ட ஞானிகள், தத்துவங்களைப் போதித்தார்கள். பாரதமும், பக்தியும் வெவ்வேறானவை அல்ல.

முந்தைய பாடப் புத்தகங்களில் அன்னியர்களின் படையெடுப்புக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது. கஜினி முகமது கொள்ளையடித்தார், கோரிமுகமது, தைமூர், நாதிர்ஷா ஆகியோர் சூறையாடினார்கள் உள்ளிட்ட விவரங்கள் விரிவாக பதிவு செய்யப்பட்டிருந்தன. செல்வத்தை அபகரித்துச் சென்றார்கள் என்பது மேலோட்டமான பார்வையாகும்.

பாரதப் பண்பாட்டுக்கு அன்னிய படையெடுப்பாளர்கள் ஊறு விளைவித்தார்கள். அவர்கள் சோமநாதர் ஆலயம் உள்ளிட்டவற்றை குறிவைத்து தாக்கினார்கள். ஹிந்துக்களின் வழிபாட்டு உரிமையை நெரித்தார்கள். ஷியா வரி விதிக்கப்பட்டதை இந்த கோணத்தில்தான் உள்வாங்கிக் கொள்ள வேண்டும். அல்லாவை ஏற்றுக் கொள்ளாதவர்களை அழித்தே தீருவோம் என்ற ஜிகாதி கருத்தை அன்னிய ஆக்கிரமிப்பாளர்கள் பல்வேறு வழிகளில் நடைமுறைப்படுத்தினார்கள்.

கோயில்களை இடித்ததுடன் அவர்கள் நின்று விடவில்லை. ஹிந்துக்களை குறிப்பாக ஹிந்துப் பெண்களை நாசப்படுத்தினார்கள். அவர்களை அடிமைகளாக்கி சொந்த நாடுகளுக்கு கொண்டு சென்றார்கள்.

பாரத மரபுக்கு உகந்த வகையில் செயல்பட்டவர்கள் கடந்த கால
புத்தகங்களில் ஓரங்கட்டப்பட்டார்கள் அல்லது இருட்டடிப்புக்கு ஆளாக்கப்பட்டார்கள். இப்போது 8ம் வகுப்பு கணக்குப் புத்தகத்தில் பாஸ்கரா, பிரம்மகுப்தா, ஆரியப்பட்டா உள்ளிட்ட சுதேசி விஞ்ஞானிகளின் சாதனைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. பாரத மக்கள் அணுசக்தி குறித்து பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அறிந்திருந்தார்கள் என்பது வெளிச்சப்படுத்தப்பட்டுள்ளது.

நாளந்தா பல்கலைக்கழகத்தையும், விக்கிரமசீலா பல்கலைக்கழகத்தையும் அன்னிய ஆக்கிரமிப்பாளர்கள் முற்றிலுமாக அழித்தார்கள். புத்த பிட்சுகள் ஏராளமானோர் படுகொலை செய்யப்பட்டார்கள். பெளத்த மத ஓலைச்சுவடிகள் தீவைத்து கொளுத்தப்பட்டன. இந்த அக்கினி ஜூவாலை பல மாதங்களுக்கு தொடர்ந்து எரிந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

கல்வி புதிய வெளிச்சத்தை மாணவர்களுக்கு அளிக்க வேண்டும். எது சரியானது என்பதை புரிந்து கொண்டு, அந்த பாதையில் மாணவர்கள் பயணிக்க பாடப்புத்தகங்கள் வழி செய்ய வேண்டும். ஆனால் துரதிருஷ்ட வசமாக கடந்த காலத்தில் பயன்பாட்டில் இருந்த பாடபுத்தகங்கள் வில்லன்களை கதாநாயகன்களாக உருமாற்றி காட்டின. ஆனால் அதே நேரத்தில் பாரத மாமன்னர்களை கடந்த கால புத்தகங்கள் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை.

இடதுசாரி வரலாற்று ஆசிரியர்களே இதற்கு பின்னணியில் இருந்தார்கள் என்பது ரகசியமல்ல.
தவறுகள் திருத்திக் கொள்ளப்பட வேண்டும் என்பதை புதிய கல்விக் கொள்கை உறுதிபட நிலைநாட்டியுள்ளது.

யாரை முன்னுதாரணமாக கொள்ள வேண்டும், யாரை முன்னுதாரணமாக கொள்ளக் கூடாது என மாணவர்களுக்கு தெரிவிக்கும் வகையில் பாடப்புத்தகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மக்களிடையே பிளவை ஏற்படுத்துவது பாடப்புத்தகங்களின் நோக்கமாக இருக்கக்கூடாது.

உலகமே ஒரு குடும்பம்தான் என்ற ஒரு விசாலமான மனோபாவத்தை மாணவர்களின் மனங்களில் ஆழமாக பதிய வைக்கும் வகையில் புதிய பாடப்புத்தகங்களில் பதிவுகள் இடம்பெற்றிருப்பது வரவேற்கத்தக்கது.

ஆர்கனைசர் ஆங்கில இணையத்திலிருந்து
தமிழில் : அடவி வணங்கி