வாழ்வாதாரம் தரும் வாணவேடிக்கையில் சீன வேடிக்கை சீரழிவு

தமிழ்நாட்டின் —-விருதுநகர் மாவட்டம் சிவகாசி, பட்டாசு தொழிலின் முகம். பல்லாயிரம் பேர் பட்டாசு தொழிற்சாலை மற்றும் சார்புடைய தொழில்கள் மூலம் தொடர்ந்து வாழ வைக்கும் நகரமாகும். இந்த பகுதியில் 1,000-1,100 பட்டாசு உற்பத்தியாளர்கள் செயல்பட்டு வருகின்றனர்; நேரடியாக 3-4 லட்சம் ஊழியர்கள், சார்புடைய தொழில்களில்5-6 லட்சம் வரை, இதன் மூலம் வாழ்வாதாரம் பெற்று வருகின்றனர்.இத்தொழிலின் சந்தை மதிப்பு, சுமார்6,000 கோடியைத் தாண்டுகிறது, ஆண்டுதோறும் சுமார் 10% வளர்ச்சி வீதத்திலும் இயங்குகிறது.

இத்தகைய பட்டாசுத் தொழில், இன்று வித்தியாசமான அழுத்தத்தில் உள்ளது. ஒரு பக்கம், உள்ளூர் உற்பத்தியாளர்கள் டிஜிட்டல் உரிமம், சுற்றுச்சூழல் தரச்சான்றிதழ், பசுமைப் பட்டாசு விதிகள் போன்ற புதிய தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டியுள்ளது. இன்னொரு பக்கம், சந்தையில் அதிகரித்துக் கொண்டே வரும் சீன பட்டாசுகள் சட்டவிரோதமாக நுழைந்து, பாரத தயாரிப்புகளாகவே வேடமிட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இந்த இரு நிலைகளும் சேர்ந்து பாரம்பரிய உற்பத்தியாளர்களை சிக்கலில் தள்ளுகின்றன.

பெரிய அளவிலான கடத்தல்கள் செய்திகளில் வெளிப்பட்டுள்ளன. 2025 ஜூலை மாதம், வருவாய் நுண்ணறிவு இயக்ககம் (DRI) “ஆபரேஷன் ஃபயர் ட்ரெயில்” என்ற பெயரில், நவா சேவா, முந்த்ரா, கண்டலா துறைமுகங்களில் ஏழு கண்டெய்னர்களில், சுமார் 35 கோடி ரூபாய் மதிப்புள்ள சீனப் பட்டாசுகளை பறிமுதல் செய்தது. இந்த சரக்குகள் “அலங்கார செடிகள்” அல்லது “பிளாஸ்டிக் மேட்கள்” என்று போலிப் பெயர்களில் இறக்குமதி செய்யப்பட்டன. (நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், 2025)

இதேபோல், 2024 டிசம்பரில் சென்னை துறைமுகத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் 1.5 கோடி ரூபாய் மதிப்புள்ள சீன பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்; அவையும் போலி நிறுவனங்கள் மூலம், தவறான சரக்குகளின் பெயர்களில் இறக்குமதி செய்யப்பட்டவை. (நிய இந்தியன் எக்ஸ்பிரஸ், 2024)

இந்த சீனப்பட்டாசுகளின் சந்தை தாக்கம் தெளிவாக தெரிகிறது. 2016ல் எகானாமிக் டைம்ஸ்செய்தி தெரிவித்தபடி, சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் சுமார் 35% சந்தையை சீன இறக்குமதிகளுக்கு இழந்திருந்தனர். வருடத்திற்கு சுமார் 2,000 கண்டெய்னர்கள், 1,500 கோடி ரூபாய் மதிப்புள்ள சீனப் பட்டாசுகள்,பாரத சந்தையில் சுற்றுவதாக அப்போது மதிப்பிடப்பட்டது.

குறைந்த விலை, அதிக ஆபத்தான வேதிப்பொருட்கள் (உதாரணம்: குளோரேட்) பயன்படுத்தப்பட்டதால், இந்தப் பொருட்கள் பாதுகாப்புக்கும் சுற்றுச்சூழலுக்கும் அதிக ஆபத்தானவை. (எகானாமிக் டைம்ஸ், 2016)

இந்த போலி பட்டாசுகள் “பாரத” தயாரிப்பாகவே காட்டப்படுகின்றன. சில பறிமுதல் செய்யப்பட்ட பெட்டிகளில் (Explosives Rules) 2008படி, கட்டாயமாக இருக்க வேண்டிய உற்பத்தியாளர் பெயர், உரிமம் எண், வேதிப்பொருள் கலவை, எடை போன்ற விவரங்கள் காணப்படவில்லை. அதற்கு பதிலாக (“Pollution Free”) அல்லது (“Not Fireworks”)போன்ற பொய்யான லேபிள்கள் மட்டும் இருந்தன. (டைம்ஸ் ஆப் இந்தியா, 2018)

சில சமயங்களில், சீன பட்டாசுகள் லட்சுமி படங்கள், குருவி சின்னம், விநாயகர் அல்லது பாலிவுட்  நடிகர் புகைப்படங்களோடு  உள்ளூர்  தயாரிப்புகளின் வடிவமைப்பை பின்பற்றி வெளிவருகின்றன. சில வணிகர்கள் கூடுதலாக (“Make in India”) சிங்கம் சின்னத்தையும் தவறாக அச்சிட்டு, விற்பனை செய்வதாக தொழில் வட்டாரங்கள் குற்றம் சாட்டுகின்றன.

பாரத உற்பத்தியாளர்கள் கடினமான விதிமுறைகளுக்குள் வேலை செய்ய வேண்டியுள்ளது.  டிஜிட்டல்  உரிமம் பெறுதல், NEERI உருவாக்கிய பசுமைப் பட்டாசு வேதிப் பொருட்களைப் பயன்படுத்துதல், சான்றிதழ் பரிசோதனைக்கு செலவு செய்தல் போன்றவை அனைத்தும் அவர்களுக்கு கூடுதல் சுமையாக இருக்கின்றன.

ஆனால், சீன சரக்குகள் கடத்தப்பட்டு வந்தவுடன், எந்தச் சான்றிதழ் செலவும் இல்லாமல் சந்தையில் குறைந்த விலையில் விற்கப்படுகின்றன. வாங்குபவர்களுக்கு அவை மலிவான விலையில் அழகான பெட்டிகளில் பாக்கிங் செய்து விற்கப்படும்.உண்மையில் அவை பாதுகாப்பு அபாயம், சுற்றுச்சூழல் சேதம் மற்றும் உள்ளூர் தொழிலின் வீழ்ச்சி ஆகிய தீமைகளுக்கு வழிவகுக்கும்.

இப்போதைக்கு ஊடகங்களில் தெளிவாக தெரியாதது என்னவென்றால், இந்த போலி லேபிள்கள் சீனாவில் தயாரிக்கப்படுகிறதா? அல்லது பாரதத்தில் மீண்டும் மறுபேக்கிங் செய்யப்படுகிறதா? என்பதே. ஆனால் கிடைத்துள்ள ஆதாரங்கள் கடத்தல், போலி லேபிள்கள், ஒழுங்குமுறை குறைபாடுகள் ஆகியவை சேர்ந்து பாரத பட்டாசு தொழிலுக்கு அநீதி என்பது வெளிப்படையாகிறது.

இந்த நிலையிலிருந்து இரண்டு உண்மைகள். முதலில், பட்டாசு தொழிலை நவீனமாக்கும் முயற்சி (டிஜிட்டல் உரிமம், பசுமைப் பட்டாசு விதிகள்) நல்ல நோக்குடன் இருந்தாலும், நடைமுறை சீராக நடைபெறவில்லை. சிறிய உற்பத்தியாளர்களுக்கு அரசு ஆதரவு மற்றும் எளிய நடைமுறை இல்லாமல், அவர்கள் சுமையைச் சுமந்து செல்ல முடியாது.

இரண்டாவது, துறைமுகங்கள் மற்றும் சந்தைகளில் கண்காணிப்பு இன்னும் கடுமையாக வேண்டியது அவசியம். மீண்டும், மீண்டும் நடைபெறும் பறிமுதல் நடவடிக்கைகள், கடத்தல்கள் தனிப்பட்ட சம்பவம் அல்ல, முறையாக நடைபெறுகிறது என்பதை காட்டுகின்றன.

வாங்குபவர்களுக்கும் இங்கு முக்கியப் பங்கு உண்டு. உண்மையான பாரத பட்டாசுகளின் உற்பத்தியாளர் பெயர், உரிமம் எண், வேதிப்பொருள் விவரம், எடை ஆகியவை தெளிவாக இல்லாத பொருட்கள், மிகக் குறைந்த விலையில் கிடைக்கும், அல்லது மிகவும் பொலிவான பாக்கிங் இருக்கும். இவை சந்தேகத்திற்குரியவை. இயன்ற வரை பசுமைப் பட்டாசுகள் மட்டுமே வாங்க வேண்டும்; அவை பரிசோதிக்கப்பட்டும், அங்கீகரிக்கப்பட்டும் சந்தைக்கு வருகின்றன. உரிமம் பெற்ற கடைகளிலேயே வாங்கவும், சந்தேகத்திற்குரிய பொருட்களை உடனடியாக அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும்.

சிறிய கவனிப்புகளும், சரியான தேர்வுகளும் நம் தீபாவளியை பாதுகாப்பானதாகவும் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் மாற்றுவதோடு, சிவகாசி பட்டாசு தொழில் மற்றும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் காக்கும்.