வளரும் பாரத பொருளாதாரம்

ஒரு நாடு வளர்ச்சி காண அதன் பொருளாதாரமே அடிப்படை காரணி. கொரோனா உலகையே புரட்டிப்போட்ட சூழ்நிலையில் உலகின் பொருளாதாரம் அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டது. உலகம் இதில் இருந்து மீள பல ஆண்டுகள் ஆகும் என்று கணிக்கப்பட்ட சூழலில் நம் பாரத அரசுக்கு மேலும் ஒரு சிக்கலாக சீன எல்லை பிரச்சனை உருவெடுத்தது. இந்நிலையில் மக்களை கொரோனாவில் இருந்து காக்க வேண்டும். உயிரிழப்புகளை தடுக்க வேண்டும், எல்லையை பாதுகாக்க வேண்டும், உலக நாடுகளின் நட்பு, ராணுவ மேம்பாடு, மக்களின் பசி போக்க இலவச உணவுப்பொருள் வினியோகம், சட்ட ஒழுங்கு பிரச்சனை என பலமுனை பிரச்சனைகளை அரசு எதிர் கொண்டது.

இந்த பிரச்சனைகளுக்கு மத்தியில், நம் மத்திய அரசு எடுத்த சீரிய முயற்சிகள், தொழில்துறைக்கு ஊக்க சலுகைகள், பொருளாதார கொள்கை, தொழில்துறையினரின் ஒத்துழைப்பு, மக்களின் பொறுமை போன்ற காரணங்களால் கொரோனாவுக்கு பிறகான பொருளாதார வளர்ச்சியில் நம் பாரதம் நன்றாகவே செயல்படுகிறது என பொருளாதார புள்ளிவிவரங்கள், கள எதார்த்தங்கள் நமக்கு தெரிவிக்கின்றன.

நம் பாரதத்தின் சரக்கு போக்குவரத்து, இ-வே பில்களின் எண்ணிக்கை உயர்வு, வருமான அதிகரிப்பு, முக்கிய கச்சா பொருள்களின் போக்குவரத்து, பயன்பாடு, ஏற்றுமதி உயர்வு, நுகர்வு பொருளாதார வளர்ச்சி, கடந்த மாத 1.05 லட்சம் கோடி ஜி.எஸ்.டி வரிவசூல் போன்றவைகளை கொண்டு ஆய்வு நடத்திய இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பான எப்.ஐ.சி.சி.ஐ’யின் அறிக்கையின்படி பாரத பொருளாதாரம் வளர்ச்சி பாதையில் திரும்பியுள்ளது என்பது உறுதியாகிறது.