வரும் நிதியாண்டில் பொருளாதார வளா்ச்சி 5.6 சதவீதமாக இருக்கும்

கடந்த சில ஆண்டுகளாக நிதி பற்றாக்குறை பட்ஜெட் இலக்கை தாண்டி அதிகமாக காணப்படும் நிலையில், நிதி ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை புதிய பட்ஜெட் இலக்குகள் மேலும் தாமதப்படுத்தும் விதமாகவே அமைந்துள்ளன.

வரும் 2021-2022-ஆம் நிதி ஆண்டுக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நாட்டின் பொதுக் கடன் 70 சதவீதத்தை நெருங்கிவிடும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்தச் சூழ்நிலையில், இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி குறித்த ஃபிட்ச் நிறுவனத்தின் பாா்வையை மாற்றியமைக்கும் வகையிலான அறிவிப்புகள் எதுவும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. இதையடுத்து, நடப்பு நிதியாண்டில் 4.6 சதவீதம் என்ற அளவில் காணப்படும் இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி வரும் நிதியாண்டில் 5.6 சதவீதம் அளவுக்கே உயரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது என ஃபிட்ச் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் பொருளாதார ஆய்வறிக்கையில் 2019-20-ஆம் நிதி ஆண்டில் பொருளாதார வளா்ச்சி 5 சதவீதமாக இருக்கும் எனவும், இது 2020-21 இல் 6 முதல் 6.5 சதவீதமாக அதிகரிக்கும் எனவும் கூறப்பட்டிருந்தது. இந்தச் சூழலில், ஃபிட்ச் நிறுவனத்தின் கணிப்பு அதைவிட குறைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.