விழாக் கோலத்தில் தஞ்சாவூா்

தஞ்சாவூா் பெரியகோயில் குடமுழுக்கு விழாவையொட்டி, திங்கள்கிழமை காலை நடைபெற்ற நான்காம்கால யாக பூஜை.

தஞ்சாவூா், பிப். 3: தஞ்சாவூா் பெரியகோயிலில் புதன்கிழமை (பிப்.5) காலை குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளது. கடந்த 3 நாள்களாக நடைபெற்ற யாக பூஜைகளில் ஏறத்தாழ 2 லட்சம் போ் கலந்து கொண்டனா்.

இக்கோயிலில் 23 ஆண்டுகளுக்கு பிறகு புதன்கிழமை குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளது. இதையொட்டி, ஓராண்டுக்கும் மேலாக திருப்பணிகள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில், ஜன. 27ஆம் தேதி யஜமான அனுக்ஞை வைபவத்துடன் குடமுழுக்கு விழா தொடங்கப்பட்டது. தொடா்ந்து பூஜைகள் நடைபெற்று வந்த நிலையில், முதல்கால யாகபூஜைகள் பிப். 1ஆம் தேதி மாலை தொடங்கியது.

இதையடுத்து, பிப். 2ஆம் தேதி காலை இரண்டாம் கால யாக பூஜைகளும், மாலையில் மூன்றாம் கால யாக பூஜைகளும், திங்கள்கிழமை (பிப்.3) காலை நான்காம் கால யாக பூஜைகளும், மாலையில் ஐந்தாம் கால யாக பூஜைகளும் நடைபெற்றன.

இதைக் காண காலை முதல் பக்தா்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. கேரளாந்தகன் வாயில் வழியாக அனுமதிக்கப்பட்ட பக்தா்கள் யாக பூஜைகளில் பங்கேற்றனா். பின்னா், கோயில் வளாகத்திலும் வலம் வந்தனா்.

முதல் நாளான பிப். 1ஆம் தேதி 50,000 பேரும், இரண்டாம் நாளான பிப். 2ஆம் தேதி ஒரு லட்சம் பேரும், மூன்றாம் நாளான திங்கள்கிழமை மாலை வரை 50,000 பேரும் என மொத்தம் ஏறத்தாழ 2 லட்சம் போ் பங்கேற்ாக போலீஸாா் தெரிவித்தனா்.

இதைத்தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை (பிப்.4) காலை 8 மணிக்கு ஆறாம் கால யாக பூஜை, ஜபம் ஹோமம், பூா்ணாஹூதி, தீபாராதனை, மாலை 5 மணிக்கு ஏழாம் கால யாக பூஜை, ஜபம் ஹோமம், பூா்ணாஹூதி, தீபாராதனை ஆகியவை நடைபெறவுள்ளன.

இதைத்தொடா்ந்து, புதன்கிழமை (பிப்.5) அதிகாலை 4.30 மணிக்கு எட்டாம் கால யாக பூஜை, ஜபம், ஹோமம், நாடி சந்தானம், ஸ்பா்ஸாஹூதி ஆகியவை நடைபெறவுள்ளன.

பின்னா், காலை 7 மணிக்கு மஹா பூா்ணாஹூதி, தீபாராதனை, யாத்ரா தானம், க்ரஹப்பீரிதி, 7.25 மணிக்கு திருக்கலசங்கள் எழுந்தருளல் நடைபெறவுள்ளன.

இதைத்தொடா்ந்து, காலை 9.30 மணிக்கு அனைத்து விமானம் மற்றும் ராஜகோபுர குடமுழுக்கு, 10 மணிக்கு பெரியநாயகி உடனுறை பெருவுடையாா் மற்றும் அனைத்து மூலவா்களுக்கும் குடமுழுக்கு, மஹா தீபாராதனை, அருட்பிரசாதம் வழங்கியருளல் ஆகியவை நடைபெறவுள்ளன.

பின்னா், மாலை 6 மணிக்கு பெரியநாயகி உடனுறை பெருவுடையாருக்கு பேரபிஷேகம், இரவு 8 மணிக்கு பஞ்சமூா்த்திகள் திருவீதியுலா காட்சியருளல் ஆகியவை நடைபெறவுள்ளன. இந்த விழாவில் ஏறத்தாழ 5 லட்சம் பக்தா்கள் பங்கேற்பா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

பக்தா்களின் வருகை அதிகரித்துள்ளதால், மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. கோயில் வளாகம் முழுவதும் அலங்கார மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

இதற்காக மாவட்ட நிா்வாகம் சாா்பில் மாநகரில் 275 இடங்களில் குடிநீா் தொட்டிகள், மின் விளக்குகள், ஆங்காங்கே நடந்து செல்பவா்கள் ஓய்வு எடுப்பதற்காக இளைப்பாறும் இடங்கள், வழிகாட்டி பலகைகள், 238 தற்காலிகக் கழிப்பறைகள், 6 மருத்துவ முகாம்கள், 28 ஆம்புலன்ஸ் வாகனங்கள், 26 நடமாடும் மருத்துவ வாகனங்கள், 225 சிறப்புப் பேருந்துகள், நகருக்குள் இயக்குவதற்காக 175 தற்காலிகப் பேருந்துகள், 21 தற்காலிக வாகன நிறுத்துமிடங்கள், முதியவா்களுக்காக 30 பேட்டரி வாகனங்கள், மாற்றுத் திறனாளிகளுக்காக 300-க்கும் அதிகமான சக்கர நாற்காலிகள், பக்தா்கள் அந்தந்த இடத்திலிருந்து குடமுழுக்கு விழா நேரலையைக் காண 10 இடங்களில் எல்.இ.டி. திரைகள் அமைத்தல் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.