வருமானவரித்துறை அதிரடியால் மண்ணில் சரியும் மாளிகைகள்!

 

வேலைப்பாடு மிகுந்த வாயிற் கதவுகள், பிரம்மாண்டமான உயர்ந்த சுற்றுச்சுவர், அரண்மனைக்கு நிகராக அண்ணாந்து பார்க்க வைத்த புதிய கட்டடங்கள். அவற்றைப் பார்ப்பதற்கென்றே அந்தத் தெருவின் வழியாக அடிக்கடிப் பயணித்திருக்கிறேன்.

ஊரை அடித்து ஊலையில்…

எங்கள் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தால், 90களின் துவக்கத்தில் உங்களில் பலருக்கும் கூட இதே அனுபவம் ஏற்பட்டிருக்கும். சசிகலா குடும்பத்தார் எழுப்பிய கோட்டைகள் அவை.

அப்போதைய முதல்வருடன் இருந்த சகவாசத்தையும், ஆளுங்கட்சியின் அதிகாரத்தையும் பயன்படுத்தி சசிகலா குடும்பத்தினர் சிறகு விரித்த காலம் அது. கட்சியின் மீதும் ஆட்சியின் மீதும் எதேச்சாதிகார குடும்பத்தின் பிடி இறுகிக்கொண்டே இருந்தது. ஊரெங்கும் அதே பேச்சு. எதுவுமே ரகசியம் இல்லை. அக்கட்சியினர் உள்ளிட்ட அனைவருக்கும் தெரிந்த உண்மை இது.

மாணவப் பருவத்தில் புரியாத மன்னார்குடி மாய்மாலங்கள் இன்றைய தேதியிலும் என்னை மலைக்க வைக்கின்றன. அன்றிலிருந்து ஏறக்குறைய 25 ஆண்டுகளுக்குப் பின்னர் சசிகலா கும்பலை வருமான வரித் துறையினர் தற்சமயம் சுற்றி வளைத்துள்ளனர்.

பொதுவிலே சொல்லப் போனால் இது நடவடிக்கை என்றாலுங் கூட சரியான நடவடிக்கை தான். நாம் புரிந்து கொள்ள வேண்டியது இரண்டே விஷயங்கள் தான்.

சம்பந்தப்பட்ட மாவட்டத்தினர் களங்கம் துடைத்தெறியப்பட்டதாகவே இதைக் கருதுகின்றனர்.

சசிகலாவின் சாம்ராஜ்யம் ஒரே இரவில் எழுப்பப்பட்டதல்ல. சசிகலா என்ற தனிநபரால் மட்டுமே இவ்விஷயம் சாத்தியப்பட்டிருக்காது.

எனவே, முன்னாள் முதல்வர் இருந்திருந்தால் என்ற கேள்விக்கே இங்கு இடமில்லை. இல்லாத ஒருவரைப் பற்றி இதற்கு மேல் வியாக்கியானம் எழுதுவதும் தேவையில்லை.

நவம்பர் 8-ம் தேதியை கருப்புப் பண ஒழிப்பு தினமாக நாடெங்கும் மக்கள் கொண்டாடினர். தமிழக மக்கள் அதன் பிறகும் கொண்டாடி வருகின்றனர்.

பதுக்கலுக்கு எதிரான போர்

பணமதிப்பிழப்பு ஓராண்டு நிறைவின் அடுத்த நாள் 09.11.2017 காலை வீசப்பட்ட வருமான வரித்துறை அஸ்திரம் கருப்புப் பண முதலைகளின் அஸ்திவாரத்தை ஆட்டங் காண வைத்துவிட்டது.

கோபாலபுரம் குடும்பம் தோற்றுப் போகும் அளவு மன்னார்குடி குடும்பம் வேரோடி இருப்பது முதல் நாள் சோதனையிலேயே வெளிச்சத்துக்கு வந்தது.

மன்னை, சென்னை, புதுவை, கோவை, கோடநாடு, ஹைதராபாத், பெங்களூரு எனத் தமிழகத்திலும், சுற்றியுள்ள மாநிலங்களிலும் சசிகலா குடும்பத்தினர் குவித்த சொத்துக்கள் தொடர்பாக 187 இடங்களில் 1800-க்கும் அதிகமான வருமான வரித்துறை அதிகாரிகள் காலையில் சோதிக்கத் தொடங்கினர்.

உருகும் அரக்கு மாளிகை

ஐந்து நாட்கள் தொடந்த சோதனையால் சோர்ந்து போயிருந்த மன்னார்குடி குடும்பத்துக்கு அடுத்தடுத்து வேதனைகள் வந்து சேர்கின்றன. இப்போது தான் உடல்நலம் தேறிவந்த ம.நடராஜனுக்கு இரண்டாண்டு தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. போதாத காலம் பத்தாம் நாளில் சோதனை போயஸ் தோட்டத்துக்கும் வந்துவிட்டது.

வேதா இல்லத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் அறையில் மடிக் கனிணியும் முக்கிய ஆவணங்களும் சிக்கின எனத் தகவல் வெளியானது.

ஊரெங்கும் இதே பேச்சு

நிமிடத்திற்கு நிமிடம் பரபரப்புச் செய்திகள் இடியாய் இறங்கிடும் இந்தக் காலக் கட்டத்தில், அன்று முதல் இன்று வரை தமிழகம் அலசிக் கொண்டிருப்பது இந்த ஒரே விஷயம் தான். ஊடகங்களின் பெரும்பாலான விவாதங்கள் இதை மையப்படுத்தி தான். சசிகலா / தினகரன் குடும்பத்தினர் மீதான சோதனை தான் தினமும் தலைப்புச் செய்தி. புள்ளி விவரங்கள் மட்டும் நாள் தோறும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.

சசிகலா கட்டி வைத்த அரக்கு மாளிகையில் வருமான வரித்துறை தீ வைத்துள்ளது. கட்சிக்காரர்களே திகைக்கும் அளவுக்கு அத்தனை இடங்களில் முறைகேடான சொத்துக்கள் பதுக்கப்பட்டுள்ளன. விவரம் அறியாத அவர்களும், விவரம் அறிந்த பத்திரிகையாளர்களும் கூட இதை வரலாறு காணாத சோதனை என்றே சொல்கிறார்கள். கட்டுரை எழுதப்பட்ட பிறகும் கூட வேறு பல இடங்களில் சோதனை தொடங்கலாம், தொடரலாம்.

நடவடிக்கை எதனால்?

சென்ற ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை அறிவிப்புக்குப் பின்னர் பண, சொத்துப் பரிவர்த்தனைகளை அரசு தீவிரமாகக் கண்காணிக்கத் தொடங்கியது. கொழுத்த நண்டுகள் வளையிலிருந்து வெளிவரத் துவங்கின. அப்படி வெளிவந்த பல நண்டுகள் மன்னார்குடி சொந்தங்களாக இருந்தன.

அதனால் தான் சசிகலா குடும்பத்தினர், தூரத்து உறவினர்கள், நண்பர்கள், அவர்களது நிறுவன ஊழியர்கள், காவலாளிகள், வழக்கறிஞர்கள், குடும்ப ஜோதிடர் வரை வருமான வரித் துறையின் வலையில் அகப்பட்டனர். சசிகலா பிணையில் வெளிவந்த சில நாட்களில் நடைபெற்ற சொத்துப் பரிமாற்றங்களும் இதற்கு ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது.

என்ன கிடைத்தது என்பது பற்றி அதிகார பூர்வ அறிவிப்பு இது வரை கிடையாது. ஊடகங்களில் வெளிவருபவை எல்லாமே ஹேஷ்யங்கள் தான். வருமான வரித் துறை மத்திய அரசுக்கு மட்டுமே அறிக்கை அளிக்கும்.

பிடிபட்டவை பற்றி

என்னென்ன கிடைத்தனவோ அனைத்தையும் கணக்கிட்டு அதிலே எவை எவை கணக்கில் வராதவை எனப் பார்ப்பார்கள். கணக்கில் வராத பணம், பொருள், ஆபரணம், சொத்து ஆகியவற்றிற்கு நடைமுறையில் உள்ள சட்டப்படி அபராதம் விதிக்கப்படலாம். அல்லது பறிமுதல் செய்யப்பட்டு உரிமையாளர்களுக்கும், உடந்தையானவர்களுக்கும் தண்டனை வழங்கப்படலாம்.

இருபது ஆண்டுகளுக்கு முன்னர் இதே போன்ற சோதனையால் விளைந்த ஒரு வழக்கு இன்னமும் இழுத்துக் கொண்டே இருக்கிறது. மற்றொரு வழக்கில் இந்த ஆண்டு தான் இறுதித் தீர்ப்பும் தண்டனையும் வழங்கப்பட்டது. இந்தத் தாமதம் தான் குற்றவாளிகளுக்குத் தெம்பளிக்கிறது.

ஆனால் இம்முறை இவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் கருப்புப் பணம், பணப் பதுக்கல், முறைகேடான வழியில் பணப் பரிமாற்றம் என ஒன்றுக்கொன்று தொடர்புடைய குற்றங்கள். இல்லாத பெயர்களில் நிறுவனங்களை நடத்தியது. பொய்க் கணக்கு காட்டிப் பணப் பரிவர்த்தனை செய்தது எல்லாமே அம்பலமாகி இருக்கிறது. இக்குற்றங்களில் தமிழகத்திற்கு முதலிடம் பெற்றுத் தர முயன்று, சற்றே தோற்றுப் போனது சசிகலா குடும்பம்.

பண மதிப்பிழப்பு தோல்வி. கருப்புப் பணம் ஒழியவில்லை என மத்திய அரசின் மீது அடுக்கடுக்காகக் குற்றஞ் சாட்டிய எதிர்கட்சிகள் உண்டு.

ஊழல் செய்த அரசியல்வாதிகள் எத்தனை பேர் சிறைக்குப் போறாங்க? நடவடிக்கை, விசாரணை எல்லாமே கண் துடைப்பு! நம்ப வேண்டாம்! இப்படி அங்கலாய்த்த பொதுமக்களும் உண்டு.

பார்வையில் கோளாறு

இப்போது சாதனை அளவில் நடந்த சோதனைக்குப் பின்னர், இது அடக்குமுறை! அரசியல் தலையீடு! ஜனநாயக விரோதம்! என அரற்றக் கூடிய சில்லறைக் கட்சிகளும் உண்டு.

பிறரது உழைப்பை உண்டு கொழுத்தவர்களுக்கு இப்படிப்பட்ட நடவடிக்கைகள் கசக்கத் தான் செய்யும். அவர்கள் தாம் பாஜகவைத் தமிழகத்தில் காலூன்ற விட மாட்டோம் எனக் குதிக்கின்றனர். அவர்களைப் பொறுத்தவரை மோதி அரசைக் குறை கூற இது இன்னொரு தருணம். அவ்வளவு தான்.

வருமான வரித் துறை நடத்திய சோதனை மக்களிடையே பல விதமான கருத்துக்களையும் வெளிக் கொண்டு வந்திருக்கிறது.

முன்பு அவநம்பிக்கையோடு பேசியவர்கள் சேகர் ரெட்டி உள்ளிட்ட சில உதாரணங்களை முன் வைத்துக் கேள்வி எழுப்புகின்றனர்.

எல்லாவற்றுக்குமான பதில்

முந்தைய காங்கிரஸ் அரசுகள் செய்யத் தவறிய விஷயத்தை தற்போதைய மோதி அரசு சாதித்திருக்கிறது. கருப்புப் பண விவகாரத்தில் தண்டனைகள் கடுமையாக்கப் பட்டுள்ளன. இந்நிலையில் இக்குற்றவாளிகள் தப்புவது இனி கேள்விக்குறி தான். எனவே இந்த வழக்குடன் பிற வழக்குகளையும், ஏனைய குற்றப் பின்னணிகளையும் இணைத்துப் பார்க்கத் தேவையில்லை.

இவர்கள் மட்டும் தான் தவறிழைத்தனரா என்ற கேள்வி எழுகிறது. இவர்கள் மீதான நடவடிக்கை பிறருக்கான எச்சரிக்கை மணி. அடுத்து ஊதப்படும் அபாயச் சங்கு அவர்களுக்கானதாகவும் இருக்கலாம். எவரும் இதிலிருந்து தப்பப் போவதில்லை. ஆகவே ஈயத்தைப் பார்த்துப் பித்தளைகள் இளிக்கத் தேவையில்லை.

கருப்புப் பண ஒழிப்பில் மத்திய மோதி சர்க்காரைக் குறை கூறிய பலரும் இந்த விஷயத்தில் சசிகலா குடும்பத்திற்கு ஆதரவாகக் குரல் கொடுத்ததன் மூலம் தாங்கள் அதர்மத்தின் பக்கம் என்பதை ஆணித்தரமாக அறிவித்துள்ளனர்.

சத்தியத்துக்கு சோதனை

சோதனை வழக்கமான ஒன்று எனச் சொல்லும் தினகரன் எதற்கு இத்தனை இடங்களில் சோதனையிட வேண்டும், ஏன் வாடகை வண்டிகளில் வர வேண்டும் எனச் சொத்தையான கேள்விகளைத் தொடுக்கிறார். தம்முடன் தொடர்புடைய அனைவரும் ஒரே நேரத்தில் சுற்றி வளைக்கப்பட்டது அவரையே திணற வைத்துள்ளது. மடியிலே கனம். கணப் பொழுதில் அது உருவப்படுவதன் வலியை மறக்க சிரித்து மழுப்புகிறார்.

கடைசியாக அவர்கள் கையில் எடுத்திருப்பது ஜெயலலிதாவின் ஆவி. திமுக தலைவருக்கு மட்டுமே தெரிந்த ‘ஆன்மாவுடன் பேசும் வித்தை’யை இப்போது அதிமுகவினருக்கும் வேறு சிலரும் கூட அத்துபடி போலும்!

நீதி, நேர்மை, தர்மம் பற்றியெல்லாம் அதிமுகவினரும், இவர்களும் பேசுவது சத்தியத்துக்கு சோதனை தான்.

நம்பிக்கை தரும் நல்லரசு

சட்டம் ஒரு இருட்டறை என்பதில் தான் தினகரனுக்கு எவ்வளவு நம்பிக்கை? இம்முறை நடப்பது நரசிம்ம ராவ் ஆட்சியில்லை என்பது இந்நேரம் அவருக்குப் புரிந்திருக்கும். இல்லையேல் நரேந்திர மோடி அரசு அதைப் புரிய வைக்கும்.

2ஜி வழக்கு போலவே, குடும்ப அரசியலின் சீர்கேடுகளுக்கு தினகரன் வகையறாவினர் கருப்புப் பண விவகாரமும் ஒரு சான்று. கழகங்களின் தில்லுமுல்லுகள் இதுவரை தண்டனையில் இருந்து தப்பி இருக்கலாம். இனி சாத்தியமில்லை என்பது எதார்த்த நடைமுறை.

இதில் அரசுத் துறை இருக்கிறது, ஆனால் அரசியல் இல்லை என்பதும் ஆதாரம் ஏதுமின்றி அரசாங்கம் களமிறங்கவில்லை என்பதும் தெளிவு. தான் இத்தனை இடங்களில் ஒரே நேரத்தில் இந்த அதிரடித் தாக்குதலைத் தொடுக்க முடிந்திருக்கிறது.

பதுக்கல் பணம் பாதாளம் வரை பாயும் என்பர். அதையும் தாண்டி அடுத்த லோகத்தில் பதுக்கப்பட்டால் கூட மத்திய மோடி அரசு அதை மீட்டெடுக்கும் என்ற நம்பிக்கையை இந்தச் சோதனை விதைத்திருக்கிறது. தீர்ப்புகள் அதை அறுவடை செய்யும் நாள் வெகுதொலைவில் இல்லை.