கொல்கத்தா மாநகராட்சி, ஜூன் மாதம் இருபதாம் தேதி மேற்குவங்க தினமன்று, பார்க் சர்க்கஸ் பகுதியில் உள்ள “சுஹ்ராவர்தி அவென்யூ”வை, “கோபால் முகர்ஜி சாலை” என பெயர் மாற்றம் செய்தது.
ஹுசைன் ஷஹீத் சுஹ்ராவர்தி, மருத்துவம், கல்வி மற்றும் பொது வாழ்வில் ஆற்றிய பங்களிப்புகளை அங்கீகரிக்கும் விதமாக, பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில், கல்கத்தாவில் உள்ள சாலைக்கு 1933ல் அதிகாரப்பூர்வமாக அவரது பெயர் சூட்டப்பட்டது.
முஹம்மது அலி ஜின்னா தலைமையிலான முஸ்லிம் லீக் அழைப்பின் பேரில் “டைரக்ட் ஆக்ஷன் டே” (ஆகஸ்ட் 16, 1946) அன்று, கல்கத்தாவில் பயங்கர கலவரம் வெடித்தது. வங்காள முதலமைச்சராக இருந்த ஹுசைன் சுஹ்ராவர்தி, ஹிந்துக்கள் மீதான தாக்குதல்களைத் தூண்டியதாகவும், காவல்துறையை கட்டுப்படுத்தத் தவறியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
சர் ஹசன் சுஹ்ராவர்தி, ஹுசைன் ஷஹீத் சுஹ்ராவர்தியின் (1892–1963) தாய்வழி மாமன் ஆவார். ஹுசைனின் தாய் குஜேஸ்தா அக்தர் பானு, ஹசனின் சகோதரி. அவர் தனது உறவினர் ஜஸ்டிஸ் சர் ஜாஹித் சுஹ்ராவர்தியை மணந்தார். ஹுசைன் ஷஹீத் சுஹ்ராவர்தி பாகிஸ்தானின் 5வது பிரதமராக, 1956 செப்டம்பர் 12 முதல் 1957 அக்டோபர் 17 வரை பதவி வகித்தார். பிரிவினைக்குப் பிறகு சிறிது காலம் பாரதத்தில் தங்கி, தந்தையின் உடல்நிலைக்காகவும், குடும்ப சொத்துகளுக்காகவும் இருந்துவிட்டு பாகிஸ்தான் சென்றார். மூத்த சுஹ்ராவர்தி அறுவை சிகிச்சை நிபுணர், பிரிட்டிஷ் – இந்திய ராணுவத்தின் லெப்டினன்ட் கர்னல், கல்கத்தா பல்கலைக்கழகத்தின் முதல் முஸ்லிம் துணைவேந்தர் (1930–1934) ஆக இருந்தவர். ஆனால் இவை எல்லாம் பாரதியர்களுக்கு என்ன சிறப்பைத் தந்தது?
1932 பிப்ரவரி – மார்ச் காலத்தில் அவருக்கு நைட் பட்டம் வழங்கியது குறித்த பிரிட்டிஷ் கோப்புக் குறிப்புகள் உள்ளன. 1946 ஆகஸ்ட் கலவரத்திற்குப் பிறகு, செப்டம்பரில் அவர் கல்கத்தாவில் இறந்தார். அண்ணன் மகன் ஹுசைன் சுஹ்ராவர்தி கல்கத்தா மற்றும் ஆக்ஸ்போர்டில் படித்து, முஸ்லிம் லீக்கில் உயர்ந்தார். 1946 ஏப்ரலில் வங்காள முதலமைச்சரானார். “டைரக்ட் ஆக்ஷன் டே”க்கு முன்பே, அவரது அரசு பாரபட்சமாக செயல்பட்டது.
ஆயிரக்கணக்கான ஹிந்துக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இத்தகையதொரு சூழலில், கோபால் முகர்ஜி என்னும் கோபால் பாதா ஹிந்து இளைஞர்களை ஒன்றுதிரட்டி, ஆயுதம் ஏந்தி தாக்குதல்களை எதிர்கொண்டார். ஹிந்துக்கள் வாழும் பகுதிகளைப் பாதுகாத்தார், பதிலடி கொடுத்தார்.
இதனால் கொல்கத்தாவை பாகிஸ்தானுடன் இணைக்கும் சதி தோல்வியடைந்தது என்பது பலரின் கருத்து. அவர் “பௌபஜார் சிங்கம்” என்றும் “கல்கத்தாவைக் காப்பாற்றியவர்” என்றும் போற்றப்படுகிறார். இந்த கலவரத்தால், 2 ஆயிரம் முதல் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்ததாகவும், பாலியல் வன்முறைக்கு உள்ளானதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
ஹிந்துக்கள் மீதான தாக்குதல்களை முறியடிக்கவும், ஹிந்துக்கள் வசிக்கும் பகுதிகள் குறிப்பாக மத்திய கொல்கத்தாவை பாதுகாக்கவும், பதிலடி கொடுக்கவும், கோபால் பதா உள்ளூர் மக்களை திரட்டினார். அவரும் அவரது ஆட்களும், நிலைமையைத் தங்கள் பக்கம் திருப்பி, முக்கியப் பகுதிகளில் ஹிந்துக்கள் முழுமையாக வெளியேற்றப்படுவதைத் தடுத்தனர்.
சுஹ்ராவர்தி குடும்பத்தினர் அனைவரும், பிரிட்டிஷ் காலனித்துவ சலுகைகளையும், வீர பட்டங்களையும் பெற்று முஸ்லிம்களுக்கு சாதகமாகவும், ஹிந்துக்களின் உரிமைகளையும், கௌரவத்தையும் மிதித்து நசுக்கும் வகையிலும், இரு தேச கோட்பாட்டை ஆக்ரோஷமாக முன்னெடுத்து, முஸ்லிம் லீக் அமைப்பை சேர்ந்தவர்களாக இருந்தனர்.
1947-க்குப் பிறகு, அந்தக் குடும்பத்தின் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒவ்வொரு உறுப்பினரும், வங்காளத்தை பாரதத்திலிருந்து பிரிக்க முயன்ற சித்தாந்தத்துடன் தங்களை இணைத்துக் கொண்டு, இறுதியில் பாகிஸ்தானைத் தேர்ந்தெடுத்தனர். இத்தகைய சூழலில், முறையான பிரிவினைக்கு முன்பே இறந்த, ‘மரியாதைக்குரியவர்’ என்று சொல்லப்படும் மாமாவாக இருந்தாலும் சரி, அல்லது ‘வங்காளத்தின் கசாப்புக்காரன்’ என்று அழைக்கப்பட்ட மருமகனாக இருந்தாலும் சரி, எந்தவொரு சுஹ்ராவர்தியின் பெயரையும் கொல்கத்தாவின் ஒரு முக்கியச் சாலைக்குத் தக்கவைத்துக் கொள்வது என்பது சிறுபான்மையினரைத் திருப்திப்படுத்தும் போக்கை மட்டுமே பிரதிபலிக்கிறது.
கலவரங்களின் போது ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றிய உள்ளூர் ஹிந்துப் பாதுகாவலரான கோபால் முகர்ஜியைப் புறக்கணித்துவிட்டு, பிரிவினையின் சிற்பிகள் மற்றும் இடம் பெயர்ந்தோரின் மரபுக்கு முன்னுரிமை அளிக்கும் வரலாறு என்பது, தொழில்நுட்பத் துல்லியம் என்ற போர்வையில் தொடரவிடாமல், சரி செய்யப்பட்டது.
கட்டுரையாளர் : செய்தியாளர்
ஆர்கனைசர் ஆங்கில இணையத்திலிருந்து
தமிழில் : சுபதி கார்த்திக்