நூறாண்டுகளாக சங்கப்பணி மட்டுமல்லாது, பல்வேறு வகையான சமுதாயப் பணிகளையும், ஆர்.எஸ்.எஸ் தொடர்ந்து செய்து வருகிறது. சங்கத்தில் பயிற்சி பெற்ற கார்யகர்த்தர்கள் சமுதாயத்திற்கு பயன்படும் வகையிலான பல்வேறு அமைப்புகளை தொடங்கி, மக்கள் பயன்பெறும் வகையில் பணி செய்து வருகின்றனர். இந்த முறை ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அதிகாரப்பூர்வ ஊடகம் மற்றும் தகவல் தொடர்புப் பிரிவான “விஸ்வ சம்வாத் கேந்திரா” (வி.எஸ்.கே) பற்றி அறிவோம்…
விஸ்வ சம்வாத் கேந்திரா (வி.எஸ்.கே) 1990-களின் முற்பகுதியில், அயோத்தி இயக்கத்தின்போது ஊடக வளமாக நிறுவப்பட்டது, ஆனால் அதன் நிரந்தரமான, முறைப்படுத்தப்பட்ட வலையமைப்பு, 1992ல் அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 2000-களில் தனித்தனி மாநிலக் கிளைகள் முறைப்படுத்தப்பட்டன;
அயோத்தி இயக்கம் உலகளாவிய விவாதப் பொருளாக இருந்தபோது, அங்கிருந்து போராட்டத்தின் உண்மையான தகவல்களை வழங்குவதற்காக இந்த அமைப்பு தொடங்கப்பட்டது. ஊடகவியலாளர்கள் அங்கு சமீபத்திய மற்றும் புதுப்பிக்கப்பட்ட அனைத்து தகவல்களையும் பரிமாறிக் கொண்டனர்.
விஸ்வ சம்வாத் கேந்திரா (வி.எஸ்.கே) என்பது ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) அதிகாரப்பூர்வ ஊடக மற்றும் தகவல் தொடர்புப் பிரிவாகும். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளைப் பரப்புவதற்கும், நடப்பு நிகழ்வுகளைப் பகுப்பாய்வு செய்வதற்கும், பத்திரிகைப் பயிற்சி அளிப்பதற்கும், ஊடகத் தொடர்புகளை எளிதாக்குவதற்கும், வி.எஸ்.கே, ஒரு தேசிய அளவிலான மையங்களின் வலையமைப்பை இயக்குகிறது.
செய்யும் பணிகள்
தேச முன்னேற்றம், ஒற்றுமை மற்றும் சமூக நல்லிணக்கம்; மேலும் தேசியக் கருத்துக்களையும், பாரதப் பண்பாட்டையும் ஊடகங்களுக்கும், பொதுமக்களுக்கும் பரப்புதல் ஆகிய நோக்கங்களுடன் செயல்பட்டு வருகிறது. சேவை, பாரதத்தின் தத்துவம், பண்பாடு, பாரம்பரியம், சுற்றுச்சூழல், தன்னிறைவு போன்ற தலைப்புகளில் இந்த இணையதளத்தில் வெளியிடப்படும் கட்டுரைகளும்,
செய்திகளும் ஊடகங்களுக்கும், பொதுமக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
உள்ளூர் கலாச்சார, சமூக மற்றும் தேசியவாதப் பிரச்சினைகள் குறித்து செய்தி வெளியிடுவதற்காக, மாநிலங்கள் முழுவதும் வி.எஸ்.கே சுதந்திரமாக செயல்படுகிறது. அந்தந்த மாநிலங்கள், உள்ளூர் தகவல்களை தேசிய கண்ணோட்டத்துடன் மக்களுக்கு தெரிவிக்கின்றது. தமிழகத்தில் https://vsktamilnadu.org/ (VSK Tamilnadu) என்ற பெயரில் இயங்கி வருகிறது.
காலப் போக்கில் பரிணாம வளர்ச்சியால் வி.எஸ்.கே.வின் பணிகள் விரிவடைந்தது. இன்று அனைத்து சமூக வலைதளங்களில் (Facebook, Twitter, Instagram, youTube, App etc) தேசிய செய்திகளை கொண்டு செல்வது இதன் பணியாகும்.
ஊடகவியலாளர் தொடர்பு, தேசிய சிந்தனைக் கூடிய கட்டுரைகள் எழுதுவது அதை செய்திதாள்களில் பதிப்பிடுவது, ஆசிரியருக்கு கடிதம் (Letters to editor) எழுதும் நபர்களை ஊக்குவிப்பது, எழுத்தாளர்களை பண்படுத்துவது, செய்திகளை சேகரித்து வைப்பது, ஆவணப்படுத்துதல் (Documentation) செய்வது, ஆராய்ச்சி கட்டுரைகள் வெளிக்கொணர்வது என பல பணிகளை வி.எஸ்.கே செய்து வருகிறது.
தமிழ்நாட்டில் ஆரம்ப காலகட்டத்தில் ‘மீடியா சென்டர்’ என்ற பெயரில், 1996ம் ஆண்டு துவக்கப்பட்டது. எழுத்தார்வம் நிறைந்த மக்களை ஒன்றிணைத்து இதழியல் பயிற்சி கொடுப்பது, கருத்தரங்குகள் நடத்துவது, கடிதம் எழுதும் பயிற்சி, செய்திகளை ஆவணப்படுத்துதல் போன்ற பல வேலைகள் செய்து வந்தது. சென்னை சக்தி கார்யலய குண்டு வெடிப்பு, மண்டைக்காடு கலவரம் போன்ற ஆவணங்கள் சிறப்பு மிக்கவை.
10 ஆண்டுகள் பிறகு, மீடியா சென்டர், “விஸ்வ ஸம்வாத் கேந்திரா – தமிழ்நாடு” என்ற பெயரில் வேலைகள் விரிவுப்படுத்தப்பட்டது. வலைத்தளம், பேஸ்புக், ட்விட்டர், யூ-டுயூப் வாயிலாக தேசிய செய்திகளை பதித்து வருகிறது. “சென்னை சந்தேஷ்” என்ற பகுதியில், மாநில செய்திகளை அலசி, தேசிய கண்ணோட்ட பார்வை கொண்ட தொகுப்பு வெளியிடப்பட்டு வந்தது.
பஞ்சாமிர்தம் – மாதத்தின் இரு தினங்களில் (அமாவாசை மற்றும் பௌர்ணமி) ஐந்து நல்ல செய்திகளை (Positive news) வெளியிட்டது. இது தேசிய அளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தமிழ்நாட்டின் மண்ணிற்கும், சமுதாயத்திற்கும் வாழ்ந்த தியாகிகளின் நினைவு தினங்களில் அவர்களை சிறப்பிக்கும் வகையில் பல கட்டுரைகள் வெளியிடப்பட்டது.
சங்கத்தின் மாநில அளவிலான செய்தி அறிக்கை (Press Note) வெளியிடுவதும், பிற மாநிலத்திலிருந்து வரும் செய்தி அறிக்கைகளை தமிழாக்கம் செய்து வெளியிடுவதும், விஸ்வ ஸம்வாத் கேந்தராவின் பணியாகும்.
ஆர்.எஸ்.எஸ் அகில பாரத தலைவர் (சர்சங்கசாலக்), அகில பாரத பொதுச்செயலாளர் (சர்கார்யவாஹ்) அவர்களின் எந்த ஒரு செய்தி அறிக்கை இருந்தாலும், சரியான தகவல்களை தரும் கேந்திரம் வி.எஸ்.கே ஆகும்.
ஆர்.எஸ்.எஸ்.ஸின் சகோதர அமைப்புகளின் செய்தி அறிக்கைகளை வெளியிடுவதும், அந்த அமைப்புகளின் முக்கியமான நிகழ்வுகள், தீர்மனங்கள் வெளியிடுவதும் வி.எஸ்.கே.வின் பணியாகும்.
ஆண்டுதோறும் நடக்கும் அகில பாரத பிரதிநிதி சபா (ABPS), அகில பாரத கார்யகாரிணி மண்டல் (ABKM), நாகபுரியில் நடக்கும் விஜயதசமி விழா – இந்நிகழ்வுகளின் அனைத்து செய்திகளும் வெளியிட்டு, மாநில செய்தியாளர்களுக்கு தகவல் அனுப்புவது, வெளிவந்த செய்திகளை ஆவணப்படுத்துதல் வி.எஸ்.கே ஆகும்.
தேசிய அளவிலான முக்கிய சரித்திர கட்டுரைகளை தமிழாக்கம் செய்து, தமிழக மக்களின் கவனத்தை ஈர்த்தது – அந்த 15 நாட்கள் மற்றும் கிலாபத் இயக்கம். “அந்த 15 நாட்கள்” தொடர் கட்டுரை, பாரதம் சுதந்தரம் அடைந்த சமயத்தில், அதாவது 1947 ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 15 வரை நாட்டில் நிகழ்ந்த நிகழ்வுகள், அந்த சமயத்தில் ஆர்.எஸ்.எஸ் செய்த தொண்டுகள் பற்றிய தொகுப்பு. இந்தத் தொகுப்பை ‘விஜயபாரதம் பிரசுரம்’ புத்தகமாக வெளியிட்டது.
“கிலாபத்” இயக்கத்தின் வரலாற்று பின்னணி, நூறு ஆண்டுகளுக்கு பின்னரும் அந்த இயக்கத்தைப் பற்றி விவாத கட்டுரைகள் தொகுத்து தமிழாக்கம் செய்து வெளியிடப்பட்டது.
“ஸ்ரீராம ஜென்ம பூமி இயக்கம்”, நாடு அளவில் விவாதப் பொருளாக வடிவெடுத்த பொழுது, ‘லோக்நாயக் ஸ்ரீராம்’ என்ற கட்டுரை தொடரும், தமிழ்நாட்டின் பங்களிப்பு பற்றிய கட்டுரைகள், செய்திகள் வெளியிடப்பட்டது. தமிழ்நாட்டில் ஹிந்துக்களுக்கு எதிராக எழுப்பப்படும் வன்ம பிரச்சாரங்களை மக்களுக்கு தெரியப்படுத்தி, கட்டுரைகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
சங்கத்தின் நூற்றாண்டை முன்னிட்டு, தினம் ஒரு சிறு வீடியோ வெளியிட்டது. சங்கத்தின் சேவைப் பணிகள், இந்த வீடியோ வெளியீடு மூலம் நல்ல வரவேற்பை பெற்றது. சங்கத்தின் சேவைப் பணிகளை தொகுத்து, ஆவணப்படுத்தி வி.எஸ்.கே வாயிலாக வெளியிடப்படுகிறது. 2015 வெள்ள நிவாரண பணிகள் மிக அளவில் பேசப்பட்டன. விக்கிபீடியாவிலும் (2015 South India Floods) இந்த செய்தி இடம் பெற்றது.
நாரதர் ஜெயந்தி
“சப்தரிஷிகளில் ஒருவர்” என்றும் மதிக்கப்படுபவர் நாரதர். தகவல் தெரிவிப்பதில், ஈடு இணையற்றவர். மனிதகுல வரலாற்றின் முதல் செய்தியாளராக போற்றப்படுபவர் நாரதர். விஷய ஞானம் உள்ளவர், தகவல் களஞ்சியம், நாரதர். நுனிப்புல் மேய்கிற ஜர்னலிஸ்ட் அல்ல அவர், ஆழ்ந்த ஆராய்ச்சியும், உலக ஞானமும், அனுபவமும் கொண்டு 25,000 ஸ்லோகங்கள் கொண்ட நாரத புராணம் வழங்கிய நூலாசிரியர் அவர்.
சுதந்திரம் பெற்று 79 ஆண்டுகளாகிவிட்டன. இன்னும் பத்திரிகையாளர் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறையை நாம் வகுத்துக் கொள்ளாமல் தடுமாறுகிறோம். நல்லொழுக்கம், நற்பண்பு இவற்றிலிருந்து நான்கு காதம் போய்விட்ட இன்றைய ஊடக உலகம், கலங்கரை விளக்கமாகத் திகழும் நாரதர் வாழ்விலிருந்து கற்றுக்கொள்ள ஏராளமான படிப்பினைகள் உண்டு.
“இதழியல்” என்பது கலாச்சாரத் தேசியத்தைப் பரப்பும் தொடர் முயற்சியாகும்; இதழியல் என்பது ஒரு தொழில் மட்டுமல்ல, மாறாக சமூகப் பொறுப்புணர்வுடன் கூடிய ஒரு பணியாகும். இன்றைய மீடியா உலகம், சித்தாந்த பாசறைகளாக சிதறுண்டு கிடக்கிறது. ஆனால் தேவர்கள், அசுரர்கள், கந்தர்வர்கள், கின்னரர்கள், வானரர்கள் என எல்லா தரப்பினரிடமும் ஒன்றுபோல பழகிய நாரதர் இந்த அத்தனை சமூகங்களின் அன்பையும் பெற்றவர். இது தகவல் பரப்பும் நுட்பத்தில் நாட்டமுடைய எவருக்கும் தேவையான படிப்பினை.
நாரதரை வழிக்காட்டியாக கொண்டு, உண்மையான செய்திகளை (தகவல்களை) கொண்டு வரும் செய்தியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் ‘நாரதர் விருது’ நாடு முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிலும் சிறந்த செய்தியாளர்களை கௌரவிக்கும் வகையில் நாரதர் விருது, பல்வேறு ஊடகங்களில் பணி செய்யும் ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
கட்டுரையாளர்: ரமாதேவி ப்ரசாத்
வட தமிழக செய்தித் தொடர்பு குழு உறுப்பினர்