பத்திரிகையாளர்களுக்கு விருது வழங்கி கெளரவிப்பு

‘விஸ்வ சம்வாத் கேந்த்ரா-’ தமிழ்நாடு சார்பில், சிறப்பாக பணியாற்றும், பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்களுக்கு ‘நாரதர் விருது’ வழங்கும் விழா, சென்னை அரும்பாக்கம் டி.ஜி. வைஷ்ணவா கல்லுாரியில், 2026 ஜூன் 20 ல் நடந்தது. சிறப்பு விருந்தினராக விழாவில் பிரபல கர்னாடக இசைப் பாடகி டாக்டர் நித்யஸ்ரீ மஹாதேவன் கலந்து கொண்டார். மூத்த பத்திரிகையாளர் ஹரி எஸ்.கர்த்தா சிறப்புரையாற்றினார். இதில் தினமலர் வெளியீட்டாளர் ஆர்.ஆர். கோபால்ஜி தலைமை வகித்து பேசியது:
ஊக்கமும், ஆக்கமும்தான் எழுத்தை உற்சாகமாக்கும். கணினி யுகத்தில் எழுத்து என்பது வீடியோவாகி, வீடியோவில் இருந்து செயற்கை நுண்ணறிவு வரை மாறி வருகிறது. கடந்த 200 ஆண்டுகளாக பத்திரிகைத்துறை பல கட்டங்களை தாண்டி வந்திருக்கிறது. நான் 3வது தலைமுறை பத்திரிகையாளர். தினமலர் தொடங்கி, 75 ஆண்டுகள் ஆகிவிட்டது.
எங்கள் தாத்தா, தினமலர் நிறுவனர் அமரர் டி.வி.ராமசுப்பையர், சுதந்திரப் போராட்ட தியாகி. முற்போக்கு சிந்தனையாளர்.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பு, தென் தமிழகத்துக்கு, கன்னியாகுமரி பகுதிக்கு வருவதற்கு முன்பே ‘ஹிந்து முற்போக்கு எழுத்தாளர் சங்கம்’, ‘ஹிந்து இளைஞர் சங்கம்’ என்றெல்லாம் ஆரம்பித்தார்.
பாரம்பரியமான பத்திரிகைகள் சமூக அக்கறையுடன் வெளி வருகின்றன. ஆனால், இப்போதைய சோஷியல் மீடியாக்கள் அப்படி அல்ல. அதில், நல்ல விஷயங்கள் வருகிறது. அதைவிட கெட்ட விஷயங்கள் அதிகமாக இருக்கிறது. சமூக ஊடகங்களில் பல, உணவு விஷயத்தில் தொடங்கி, எல்லாவற்றிலும் ‘நரேட்டிவ் செட்’ (கருத்து திணிப்பு) செய்கிறார்கள். ‘ஊடகம் என்பது லாப – நோக்கம் கொண்டதல்ல. அதில் இருப்பவர்கள், நடத்துபவர்களுக்கு தெரியும். அது ஒரு தீரா ஆர்வம். அப்படி இருந்தால்தான் மீடியாவில் நிலைக்க முடியும்.
உலகமே, பாரதத்தின் இளைஞர் சக்தியை, மிகப்பெரிய ஆக்க சக்தியாக பார்க்கிறார்கள். ‘நாரதர் கலகம் நன்மைக்குத்தான்’ என்று சொல்வார்கள். தர்மத்தை ஸ்தாபிக்கத்தான் நாரதர் கலகம் நடத்துவார் என ஆர்.ஆர்.கோபால்ஜி பேசினார். பத்திரிகையாளர், எழுத்தாளர், ஊடகவியலாளர் என 8 பேருக்கு நாரதர் விருது வழங்கப்பட்டது.
> பவித்ரா நந்தகுமார், – எழுத்தாளர் & கட்டுரையாளர்
> தங்கராஜ், ஊடகவியலாளர்
> செந்தில் குமார்,- யூடியூபர் (Archives of Hindustan)
> கம்யூன் மேக்-, ஆங்கில வலைத்தளப் பத்திரிகை (Commune mag)
> ஸ்ரீடிவி, -யூடியூப் சேனல் (ShreeTV)
> B R ஸ்ரீனிவாஸ், தொலைக்காட்சி விவாத பிரமுகர்
> சந்தியா ரவிசங்கர், ஆங்கில கட்டுரையாளர்
> அபினவ் விநாயக் (தமிழ் ஜனம்)
பத்திரிகையாளர்கள், பொதுமக்கள் என பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். 