பாரத அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் ‘ஆஸ்தா வன சம்ரட்சண யோஜனா’ என்ற ரூ.3,000 கோடி திட்டத்தை அறிவித்துள்ளது. இதன் கீழ் நாடு நெடுக உள்ள 15,000 ஆஸ்தா வனங்கள் (கோயில் காடுகள்) பராமரிக்கப்படும் என்று தெரிகிறது. தலைமுறை தலைமுறையாக கோயில் காடு, அல்லது வனக்கோயில், அல்லது சாமித்தோப்பு, அல்லது ஐயப்பன் காவு என்று அழைக்கப்படும் பவித்திர வனங்களை பராமரிப்பவர்கள் நமது வனவாசி சகோதர சகோதரிகளே தான்.
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று ஐந்து திணைகளாக நிலத்தை வகுத்த நமது மூதாதையர் ஒவ்வொன்றிற்கும் திருமால், முருகன், துர்க்கை என்று அதி தேவதைகளையும் ஏற்படுத்தியிருக்கிறார்கள். குறிப்பாக குறிஞ்சி, முல்லை பகுதிகளில் காடும் மலையும் நிறைந்து இருப்பதால், அவற்றை காக்கும் தெய்வங்களை மக்கள் வழிபட்டு வந்தார்கள்.
அய்யனார், சாஸ்தா, கருப்பசாமி, வேடப்பர், காளி, மாரி, எல்லைப்பிடாரி, சப்தகன்னியர், பேச்சியம்மன், ராக்காச்சி அம்மன் என்று பல்வேறு பெயர்களில் இந்த தெய்வீக வனப் பாதுகாவலர்களை மக்கள் வழிபடுகிறார்கள். சிலப்பதிகாரமும், மணிமேகலையும் வனப்பாதுகாவல் தெய்வமான கொல்லிப்பாவை பற்றி விரிவாக பேசுகின்றன. நாமக்கல், பெரம்பலூர் மாவட்டங்களில் வியாபிக்கும் கொல்லிமலையில் கோயில் கொண்டு அரக்கர்களை சிரித்தே துரத்திய கொல்லிப்பாவையை தவமுனிவர்கள் வழிபட்டார்கள் என்பது வரலாறு. இன்றும் மக்கள் கொல்லிப்பாவையை வழிபட்டு வருகிறார்கள்.
சில கோயில் காடுகளுக்குள் ஆண்டுக்கு ஒருமுறை தான் நுழைய முடியும். அங்கே கூட அம்மனுக்கு பொங்கல் வைப்பதற்காக விறகும், சுள்ளிகளும் மட்டும் எடுப்பார்கள். எண்ணற்ற அரிய மருத்துவ குணமுள்ள மூலிகைகள் காணப்படும் இந்த வனங்களை, இப்படி அவர்கள் கண்ணைப் போல காப்பாற்றி வருவது மிகுந்த பொருள் பொதிந்தது. சமுதாயத்தின் பிற பகுதி மக்கள் சமய மரபின் அம்சமாக வன போஜன நிகழ்வு நடத்த காட்டை நாடுவது வனவாசி / நகர்வாசி இணக்கத்திற்கு பாலம் போடுவது கண்கூடு.
பாரதநாடு நெடுக எல்லா மாநிலங்களிலும், இதுபோல கோயில் காடு / வனக்கோயில் மரபு உண்டு. ராஜஸ்தான் மாநிலத்தில் புனித வனம் குறித்த ஒரு வழக்கில் 2024 டிசம்பரில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் கோயில் காடுகளை மத்திய அரசு பாதுகாக்க வேண்டும் என்று தீர்ப்பளித்திருந்தது. அதன்படி பாரத அரசு இந்த ஆஸ்தா வன பாதுகாப்பு திட்டத்தை அறிவித்துள்ளது.
நமது வனவாசி மக்களின் இந்த சுற்றுச்சூழல் சினேகிதமான சமய மரபை பாரத அரசு கட்டிக் காக்க முன்வந்திருப்பது போற்றுதலுக்குரியது.