சென்னையைப் பதம் பார்த்த 2015 வெள்ளத்திற்குப் பிறகு, ஊடகங்களில் பலர் எழுதியதுபோல, அது ஒரு புயல் அல்ல. பருவ மாற்றத்தையும், புயலையும் ஏற்படுத்தும் ஒரு காலநிலை. நிலநடுக்கோட்டை ஒட்டிய பசிபிக் பெருங்கடற் பகுதிகள் சில ஆண்டுகளில் இயல்புக்கு மாறாக உயர் வெப்பநிலையைப் பெறுகின்றன. இதனால் உலக நாடுகள் பலவற்றில் அதிக மழை, அதிக வெயில், அதிக குளிர் என பருவ சூழல் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. பாரதத்ததில் பெருமழை, அதிகப்படியான வறட்சி என பல வகைகளில் இதன் தாக்கம் தொடர் கதையாகிறது. இதுகுறித்து வாசகர்களுக்கு விளக்கும் விதமாக இந்த வார அட்டைப்பட கட்டுரை பிரசுரமாகிறது.
நிலநடுக்கோட்டிற்கு அருகாமையில் அமைந்துள்ள பசிபிக் பெருங்கடற் பகுதிகள் சில ஆண்டுகளில் இயல்புக்கு மாறாக உயர் வெப்பநிலையைப் பெறுகின்றன. இந்நிலையையே “எல்-நினோ” என அழைக்கிறோம். இந்நிலை பொதுவாக நான்கைந்து மாதங்கள் நீடிக்கும். “லாநினா” என்பது இதற்கு மாறான நிலை. எல்நினோவை ‘அண்ணன்’ என்று சொன்னால், லாநினாவைத் ‘தங்கை’ எனக் கூறலாம்.
எல்நினோ சௌதெர்ன் ஆசிலேசன் சைக்கிள் (El Nino Souther Oscillation Cycle – ENSO) என்பது கிழக்கு மத்திய பசிபிக் பகுதியில், கடலுக்கும் வளி மண்டலத்துக்கும் இடையில் ஏற்படும் வெப்பநிலை மாற்றங்களைக் குறிக்கும் அறிவியல் பெயராகும்.
2015ஆம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்திற்குப் பிறகு, ஊடகங்களில் பலர் எழுதியதுபோல இது ஒரு புயல் அல்ல. ஆனால், பருவ மாற்றத்தையும் புயலையும் ஏற்படுத்தும் ஒரு காலநிலை. ஏன் ஏற்படுகின்றன? என்று கண்டுபிடிக்க முடியாத இவ்விரண்டும், ஏறக்குறைய இரண்டிலிருந்து ஏழு ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழ்கின்றன. ஒவ்வொரு முறையும் ஒன்பது மாதங்கள் முதல் இரண்டு வருடங்கள் வரை கூட நீடிக்கக்கூடும். இதில் ‘எல்நினோ’, ‘லாநினோ’வை விட அதிகம் ஏற்படுகிறது. இவற்றின் தாக்கத்தைப் பார்க்கும் முன்னர், இவை என்ன என்பதை முதலில் பார்ப்போம்.
‘எல்-நினோ’ முதன்முதலில் தென் அமெரிக்காவின் பெரு நாட்டு மீனவர்களால், 1600களில் அடையாளம் காணப்பட்டது. இந்நாட்டுக் கடல் பகுதிகளில் டிசம்பர் மாதத்தில், சில சமயங்களில் வழக்கத்திற்கு மாறாக கடல்நீர் வெம்மையாக இருந்தது. இதனையே ‘எல்நினோ’ என்றழைத்தனர். “எல்நினோ” என்றால் ஸ்பானிஷ் மொழியில் ‘சிறுவன்’ என்றும் ‘கிறிஸ்துவின் பிள்ளை’ என்றும் பொருள்படும். பெரும்பாலும் டிசம்பரில் உணரப்பட்டதால், கிறிஸ்துமஸோடு தொடர்புபடுத்தி இப்பெயர் வழங்கப்பட்டுள்ளது. ‘லாநினா’ என்பது எல்நினோவின் சகோதரி, ‘லா’ என்பது ஸ்பானிஷில் பெண்மையைக் குறிக்கும். ‘லாநினா’ என்பது ‘சிறுமி’ என்று பொருள்படும்.
பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் இந்த பருவ மாற்றம், உலகளாவிய தாக்கத்தைத் தரவல்லது. பொதுவாக பசிபிக் பெருங்கடலில் மேல்மட்டத்தில் கிழக்கிலிருந்து மேற்காக நகருகின்ற வெப்ப நீர், திடீரென்று திசை மாறி மேற்கிலிருந்து கிழக்காக நகரத் துவங்கும். இந்த வெப்ப நீர் இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் அருகில் சேரும். எல்-நினோவின் போது வெப்பமண்டல பசிபிக் பகுதியான (Tropical Pacific) தென் அமெரிக்காவின் வடமேற்குப் பகுதியில், கடல் நீரின் வெப்பம் அதிகமாகிறது. மத்திய மற்றும் மேற்கு பசிபிக்கில், மேற்கு நோக்கி வீசும் பருவ காற்று வழக்கத்திற்கு மாறாக வலி குன்றும். (எல்நினோ அல்லாத சாதாரண காலங்களில் வெப்பமண்டல பசிபிக்கில் பருவ காற்று மேற்கு நோக்கி வீசும்). வெப்ப நீரின் திசை மாற்றத்தால், வளி மண்டலத்தில் ஏற்படும் மாற்றமே எல்-நினோவிற்குக் காரணம்.
இப்படி கடல் நீரின் வெப்பம் மேற்கிலிருந்து கிழக்கை நோக்கி நகர ஆரம்பித்தால், ‘எல்நினோ’ என்று அனுமானம் செய்கின்றனர். ஆனாலும் கடல் வெப்பம் மட்டுமல்லாமல், வளிமண்டலத்தின் மாற்றங்களையும் ஆராய்ந்தே, எல்-நினோ முடிவு செய்யப்படுகிறது. கடல்நீரின் வெப்ப மாற்றத்துடன், வளிமண்டலத்தின் வெப்பம் சுமாராக 0.5 டிகிரி செல்சியஸ் அளவில் மூன்று மாதங்களுக்குத் தொடர்ந்து அதிகமாக இருந்தால், விஞ்ஞானிகள் ‘எல்நினோ’ என்று அறிவிக்கின்றனர்.
தென் அமெரிக்கக் கண்டத்தின் மேற்குக் கடற்கரையில் “ஹம்போல்ட் நீரோட்டம்” என்ற கடல் நீரோட்டம் உள்ளது. இது “பெரு நீரோட்டம்” என்றும் அழைக்கப்படுகிறது. இந்நீரோட்டம் கடலுக்கடியில் உள்ள, மீன்கள் வளரத் தேவையான ஊட்டச்சத்து நிறைந்த நீரை மேலெழுப்பித் தருகிறது. இதனை ஆங்கிலத்தில் கோஸ்டல் அப்வெல்லிங் (Coastal Upwelling) என்றழைப்பர். இந்நீரோட்டம் பெரு நாட்டின் “லிமா” கடற்கரை நகரருகே நிலநடுக்கோட்டிற்கு இணையாகத் திரும்பி, பசிபிக் பெருங்கடலில் சுமார் 2,000 கிலோ மீட்டர் வரை கிழக்கு -மேற்காகச் செல்லுகிறது. எல்-நினோ காலத்தில் இந்த கிழக்கு-மேற்கு நீரோட்டத்திற்கு எதிர் இணையாக ஒரு புதிய நீரோட்டம் உருவாகிறது. இதனால் வெப்பமான நீர் பெரு நாட்டுக் கடற்கரையை வந்தடைகிறது. இந்த வெப்பமான நீர் மீன்கள் வளர்ச்சிக்கு ஏதுவானதல்ல. இதனால் மீன்பிடி தொழில் வெகுவாக பாதிப்படைந்து, நாட்டின் பொருளாதாரத்தையே பாதிக்கிறது.
தென் அமெரிக்காவின் தென்மேற்கில் கடல் நீரின் வெப்பம் அதிகமாகி புயலுக்கு வழிவகுக்கிறது. கடல் நீரின் வெப்பமே, நீர் ஆவியாவதற்கு வழிவகுத்து மழையைக் கொணரும். ஆக, வெப்பமண்டல பகுதியில் புயல்கள் மேற்கிலிருந்து கிழக்கிற்கு நகரும். எல்-நினோவில் கடல் நீரின் வெப்பம் அதிகமாவதால் பூமியெங்கும் பருவநிலை மாற்றங்கள் ஏற்பட்டு, இயற்கைச் சீற்றங்களும் அதிகமாகும். ஒரு பக்கம் வறட்சியும் −- பஞ்சமும், மறுபக்கம் – மழையும் − வெள்ளமும் என தாக்கம் இருக்கும்.
‘எல்நினோ’ ஏற்படுவதற்கான காரணங்கள் தெளிவாகக் கண்டுபிடிக்கப ்படவில்லை. ஒவ்வொரு முறைக்கும் சில ஒற்றுமைகள் இருந்தாலும், எப்பொழுதும் எல்-நினோ ஒரே மாதிரியாக இருப்பதில்லை. இதனாலேயே இதனைச் சரியாக முன்னுரைக்க முடிவதில்லை, ஆனால் கடல் மற்றும் வானிலை மாற்றங்களை வைத்து, வானிலை முன்னறிவிப்பு செய்யலாம். கடலின் மேற்பகுதியில் 200 அடி வரையிலான நீரின் வெப்பத்தை விஞ்ஞானிகள் கவனிக்கின்றனர். அதில் மாற்றம் ஏற்பட்டு, பருவ காற்றும் புயலும் வந்தால் எல்நினோ என்கின்றனர்.
வளர்ந்து வரும் வானிலையியல், தற்போது எல்நினோ தோன்றும் பகுதிகளை பல பிரிவுகளாகப் பிரித்துள்ளது. பசிபிக் பெருங்கடலின் நிலநடுக்கோட்டுப் பகுதிகள் நினோ 1, 2, 3, 3.4 மற்றும் 4 எனப் பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. தற்போது கடல் நீரின் வெப்பநிலை, உவர்ப்புத் தன்மை மற்றும் நீரோட்டத்தின் நிலை ஆகியவற்றை அளக்க ஆர்கோ பெருங்கடல் கண்காணிப்பு முறைமை (ARGO Ocean Observing System) என்றவொரு முறைமை அமைக்கப்பட்டுள்ளது. உலகெங்கிலும் சுமார் 4000 ஆர்கோ கண்காணிப்பு மிதவைகள் நிறுவப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. நிறுவப்பட்டதும் இம்மிதவை, மூன்று மணி நேரத்தில், 1 கிலோ மீட்டர் ஆழத்திற்குச் சென்றுவிடும். அந்த ஆழத்தில் மெள்ள மெள்ள நகர்ந்து கொண்டிருக்கும். 9½ நாட்களுக்குப் பின்னர் ஒன்பது மணி நேரத்தில், 2 கிலோ மீட்டர் கீழிறங்கி, பின்னர் கடல் மட்டத்திற்கு வரும். கீழிருந்து மேலெழும்பும்போது, கடலின் வெவ்வேறு ஆழத்தில் கடல்நீர் வெப்பநிலை, உவர்ப்புத் தன்மை, கடல் நீரோட்டத்தின் திசைவேகம் ஆகியவற்றை அளந்து, கடல் மட்டத்திற்கு வந்ததும் செயற்கைக் கோளுக்கு அனுப்பி வைக்கும். இதேபோல இம்மிதவையின் பணி தொடர்ந்து நடக்கிறது.
பொதுவாக வசந்த காலத்தில் தொடங்கும் எல்-நினோ டிசம்பர், ஜனவரியில் உச்சம் அடைந்து, அடுத்த மே மாதத்தில் முடிவடையும். ஒவ்வொரு முறையும் வெவ்வேறு விதமாக இருக்கும். எல்நினோ இதற்கு முன் 1997ல், மிகவும் வலிமையானதாக இருந்தது. பல மில்லியன் ஆண்டுகளாக எல்-நினோ ஏற்பட்டிருப்பதன் ஆதாரங்களைப் பவளப் பாறைகள், மரங்களின் வளையங்கள், குகைகள், கடலின் அடிமட்ட மண்ணில் என்று கண்டுபிடித்துள்ளனர். 2015ல், வசந்த காலத்தில் (மார்ச், ஏப்ரல், மே மாதங்களில்) எல்-நினோ இருப்பதாக அறிவிக்கப்பட்டது. உலகளாவிய அளவில் சராசரியாக 0.1 டிகிரி அளவில் அதிக வெப்பம் இருக்கும் என்று அனுமானித்தனர். 1997ல், அதிக தாக்கத்தை ஏற்படுத்திய எல்நினோவை விட 2015ல் எல் நினோவின் தாக்கம் அதிகம் இருக்கும் என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் கூறினர்.
உலகளாவிய தாக்கங்கள் எல்-நினோ நிகழ்வுகள் பொதுவாக 9 முதல் 12 மாதங்கள் வரை நீடிக்கும். இவை வழக்கமாக வசந்த காலத்தின் பிற்பகுதியிலோ அல்லது கோடை காலத்தின் முற்பகுதியிலோ தொடங்கி, நவம்பர் மற்றும் ஜனவரி மாதங்களுக்கு இடையில் உச்சத்தை அடையும்.
நிலநடுக்கோட்டுப் பசிபிக் பெருங்கடல் பகுதியில், வெப்பநிலை 0.5°C-க்கு அதிகமாகவோ அல்லது சமமாகவோ இருக்கும்போது, எல்நினோ அறிவிக்கப்படுகிறது. ஏப்ரல் 2026ல், மாதாந்திர மாறுபாடு 0.24°C ஆக இருந்தது, இதுவும் எல்-நினோ வரம்பிற்குக் கீழேதான் உள்ளது. இது ஒரு மிதமான நிகழ்வாகவே தொடங்க வாய்ப்புள்ளது.
எல்-நினோவால் வட மாநிலங்களில் பெய்யும் தென்மேற்குப் பருவமழை குறைய வாய்ப்பிருக்கிறது. தமிழகத்தில் மழை பொழிவு இயல்பாக இருக்க வாய்ப்பிருக்கிறது. வடமாநிலங்களில், வெப்பநிலை அதிகரிக்கக் கூடும். வடகிழக்குப் பருவமழைக் காலத்தில், தமிழகத்தில் ஓரிரு முறை குறைந்த கால அளவில், அதிகன மழை பொழியவும் வாய்ப்பிருக்கிறது. ஆனால் இவற்றை அறுதியிட்டு இந்த இடத்தில், இந்த நேரத்தில்தான் பெய்யும் எனக் கூறமுடியாது.
கட்டுரையாளர்: முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
ஓய்வுபெற்ற வானிலை விஞ்ஞானி