வந்தே மாதரம்

பங்கிம் சந்திரர் துர்கா பூஜையை முன்னிட்டு கல்கத்தாவிலிருந்து தனது சொந்த ஊருக்குச் செல்வதற்காக ரயிலில் பயணம் செய்தார். ரயிலில் ஜன்னலோரம் அமர்ந்து இயற்கைக் காட்சிகளை ரசித்து வந்தார். பச்சைப் பசேல் என்று வயல்வெளிகளைப் பார்க்கும்போது பாரதீஸ்வரி பசுமை ஆடையணிந்து காட்சி தருவதுபோல பரவசமடைந்தார். அவர் கவிஞரல்லவா… அப்போது அவர் உள்ளத்திலிருந்து வந்த கவிதைதான் விடுதலை போராட்ட எழுச்சி கீதமான இந்த வந்தே மாதரம்.

ஸுஜலாம் ஸுபலாம் மலயஜ சீதலாம்

ஸஸ்ய ஸ்யாமலாம் மாதரம்!

சுப்ர ஜ்யோத்ஸ்னா புளகித-யாமினீம்

புல்ல குஸுமித=த்ருமதல சோபினீம்

ஸுஹாஸினீம் ஸுமதுர பாஷிணீம்

ஸுகதாம் வரதாம் மாதரம்     (வந்தே மாதரம்)

 

எத்தனை எத்தனை நீர்நிலைகள்.

எத்தனை எத்தனை ஆறுகள்.

எத்தனை கனிகள்! எத்தனை சுவைகள்

பூவுலகில் இந்த பூமி சுவர்க்கமன்றோ! மலய மாருதம் மகிழ்வுடன் வருடும் மண் அன்றோ

பசுமை பூத்துக் குலுங்கும் இந்த பாரத பூமி.

வெண்மதி ஒளியில் மின்னிடும் இரவினள்

பூத்துக் குலுங்கும் புதுமலர் சோலையாள்

புன்னகை முகத்தினள், தேன் மொழிச் சொல்லினள்

சுகமாய் வாழ்ந்திட நமக்கு வரமாய் வந்தவள்.

 

சப்த கோடி கண்ட கலகல நிநாத கராலே

த்விசப்த கோடி புஜைர் த்ருத கரகரவாலே

கே பலே மா துமி அபலே?

பஹுபல தாரிணீம் நமாமி தாரிணீம்

ரிபுதல வாரிணீம் மாதரம் (வந்தே மாதரம்)

இந்தச் சரணத்தில் பங்கிர் சந்திரர் வங்க மாதாவையே பாரதமாதாவாகக் கொண்டிருந்தார் என்பது புலனாகிறது. சப்தகோடி” என்ற சொற்றொடர் ஏழுகோடி” வங்காள மாநிலத்தவர்களையே குறிக்கிறது.

ஆனால் இந்த வந்தே மாதர கீதம் அகில பாரத அளவில் தேசிய எழுச்சிப் பாடலாக விசுவரூபம் எடுத்தபோது சப்தகோடி” என்ற சொற்றொடரை கோடி கோடி” என்பதாக மாற்றி அமைத்தனர்.

கோடி கோடி ஜனங்களின் சீரிய கர்ஜனை கோடி கோடி புயங்களில் கொடுவாள் ஆயுதம் ஏந்தி நின்றனர் எம்மவர்தாமே.

எங்ஙனம் நீயும் அபலை ஆவாய்? ஆற்றல் கொண்டு எழுந்து நீ

மாற்றலர் தம்மை மாய்த்திட வல்லாய்

மஹாதேவி நின் தாள் சரணம்!

துமி வித்யா, துமிதர்ம!

துமி ஹ்ருதி; துமி மர்ம!

த்வம் ஹி ப்ராணா, சரீரே!

பாஹுதே துமிமா சக்தி!

ஹ்ருகுதயே துமிமா பக்தி!

தோமாரயி ப்ரதிமா கடி மந்திரே, மந்திரே!

 

வேதமும் நீயே, வேதம் வகுத்த தருமமும் நீயே,

நெஞ்சமும் நீயே,

நெஞ்சத்துறை நிமலையும் நீயே,

உடலிடைத் திகழும் உயிரும் நீயே,

எங்கள் புயங்களில் இயங்கிடும் சக்தி நீ;

எங்கள் மனங்களில் ஒளிர்ந்திடும் பக்தி நீ;

ஆலயந் தோறும் அணிபெற விளங்கும்

அம்பிகை உருவர் தேவி நின்னதே,

தாள் பணிந்தேன் நான்.

 

த்வம் ஹி துர்க்கா தவிப்ரஹரண தாரிணீ

கமலா கமல தல விஹாரிணீ

வாணி வித்யா தாயினீ

நமாமி த்வாம்!

நமாமி கமலாம் அமலாம் அதுலாம்

ஸுஜலாம் ஸுபலாம் மாதரம்  (வந்தே மாதரம்)

 

பத்துக் கரங்களில் படைகளை ஏந்திய

துர்கா தேவி நீயே யன்றோ!

செவ்விதழ் செந்தாமரை தன்னில்

சிறந்து விளங்கிடும் செல்வியும் நீயே

வித்தை நன்கு அருளும் வெண்மலர் தேவி நீ!

வீழ்ந்து பணிந்தேன் நின்தாள் தன்னில்

கமலையும் நீயே! அமலையும் நீயே!

தன்னிகர் ஒன்றிலை நின் தான் சரணம்!

இனிய நீர் பெருக்கினை!

இன்கனி வளத்தினை

 

ச்யாமளாம் ஸரளாம்

ஸுஷ்மிதாம் பூஷிதாம்

தரணீம் பரணீம் மாதரம்   (வந்தே மாதரம்)

 

சாமள நிறத்தினாய், சரள மாத்தகையினாய்

புன்னகை பூண்டு பூஷிதை ஆனாய்

பூமியில் எங்களைத் தாங்கி நிற்கின்றாய்

தாயே உன் தன் திருவடி சரணம்!