ரூ.44,000 கோடிக்கு மேம்பாட்டு திட்டம்: உத்தர பிரதேசத்தில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்

உத்தர பிரதேச மாநிலம் அசம்கரில், ரயில்வே, நகர்ப்புற மேம்பாடு, சாலை போக்குவரத்து, கல்வி மேம்பாடு என பல்வேறு மேம்பாட்டு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் பிரதமர் மோடி பேசியதாவது: ஒரு காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் தலைநகர் டெல்லியில்தான் நடைபெறும். அங்கு மற்ற மாநிலங்களை சேர்ந்தவர்கள் கலந்துகொள்வார்கள். இன்று இந்த நிகழ்வு அசம்கரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் இங்கு வந்து பங்கேற்றுள்ளனர்.

ரூ.34,000 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு தொடக்க விழா நடத்தப்பட்டுள்ளது. மேலும், டெல்லி டெர்மினல்-1 விரிவாக்கம் உட்பட ரூ.10,000 கோடி மதிப்பிலான 15 விமான நிலைய திட்டங்களும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. இது விமான போக்குவரத்து துறைக்கு உத்வேகம் அளிக்கும். கடப்பா, ஹூப்பள்ளி, பெலகாவிஆகிய இடங்களில் மொத்தம் ரூ.908 கோடி செலவில் ஆண்டுக்கு95 லட்சம் பயணிகளை கையாளும் திறன் கொண்ட புதிய முனையங்கள் அமைக்கப்படும். ஆண்டுக்கு 6.15 கோடி பயணிகளை கையாளும் திறனுடன் 12 புதிய முனையங்கள் மொத்தம் ரூ.8,903 கோடி செலவில் கட்டப்படுகின்றன.

மேலும், இந்த விரிவாக்க திட்டத்தின் ஒரு பகுதியாக புனே,கோலாப்பூர், குவாலியர், ஜபல்பூர், டெல்லி, லக்னோ, அலிகார், அசம்கர், சித்ரகூட், மொராதாபாத், ஷ்ரவஸ்தி மற்றும் அடம்பூர் விமான நிலையங்களில் புதிய முனைய கட்டிடங்கள் திறக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பிரதமர் பேசினார். லக்னோ மற்றும் ராஞ்சியில் லைட் ஹவுஸ் திட்டத்தை (எல்எச்பி) பிரதமர் தொடங்கி வைத்தார், இதில் நவீன உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய 2,000-க்கும் மேற்பட்ட குறைந்த விலை அடுக்குமாடி குடியிருப்புகள் இடம்பெற்றுள்ளன.

இதுதவிர, பிரதமரின் கிராம சடக் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.3,700 கோடிக்கு கட்டப்பட்ட 744 கிராமப்புற சாலை திட்டங்களை பிரதமர் மோடி, நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதன்மூலம், உத்தர பிரதேசத்தில் 5,400 கி.மீ தூரத்துக்கு கிராமப்புற சாலைகள் அமைக்கப்பட்டு 59 மாவட்டங்கள் பயனடைந்துள்ளன. ரயில்வே கட்டமைப்பை மேம்படுத்தும் விதமாக, பஹ்ரைச் – நன்பாரா – நேபாள்கஞ்ச் மாற்று வழித்தடத்துக்கு அடிக்கல் நாட்டியதுடன், காஜிபூர் நகரத்தில் இருந்து காஜிபூர்காட் வரையிலான புதிய ரயில் பாதையையும் பிரதமர் திறந்து வைத்தார். அருணாசல பிரதேசத்தில் ரூ.55,600 கோடி திட்டங்களுக்கு பிரதமர் நேற்று முன்தினம் அடிக்கல் நாட்டியது குறிப்பிடத்தக்கது.