ரூ.20 லட்சம் கோடியை தொட்டது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மதிப்பு

பட்டியலிடப்பட்ட இந்திய நிறுவனங்களில், 20 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பை எட்டிய முதல் நிறுவனம் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ். நேற்று, வர்த்தக நேரத்தின் இடையே, நிறுவனத்தின் பங்குகள் 2 சதவீதம் வரை அதிகரித்தது.

இதைத்தொடர்ந்து, நாட்டின் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில், 20 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பை எட்டிய முதல் நிறுவனம் என்ற பெருமையை, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பெற்றது. எனினும், நேற்று வர்த்தக நேர முடிவில், நிறுவனத்தின் சந்தை மதிப்பு 19.81 லட்சம் கோடி ரூபாயாக குறைந்தது.

நேற்று வர்த்தக முடிவில், நிறுவனத்தின் பங்கு விலை மும்பை பங்கு சந்தையில் 2,929 ரூபாயாக இருந்தது. சமீபத்தில் அதிகரிக்கத் துவங்கியுள்ள ரிலையன்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு, அதன் நிறுவனரான முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பையும் 9.05 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்க உதவியுள்ளது.

நடப்பாண்டில் மட்டும், இதுவரை, முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 1.04 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. தற்போது, உலக பணக்காரர்கள் பட்டியலில் அம்பானி, 11வது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.