ராமர் கோயில் திறப்பு விழா | 55 நாடுகளில் கொண்டாட்டம்: விஸ்வ இந்து பரிஷத் திட்டம்

அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்படும் ராமர் கோயிலின் கும்பாபிஷேகம் ஜனவரி 22-ம் தேதி நடைபெற உள்ளது.
இதனை இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் கொண்டாட விஸ்வ இந்து பரிஷத் (விஎச்பி) திட்டமிட்டுள்ளது. அயோத்தி கும்பாபிஷேக நாளில் 55 நாடுகளில் இந்துக்களை விஎச்பி ஒன்று திரட்ட உள்ளது. கும்பாபிஷேக சடங்குகள் நடைபெறும் நேரத்தில் பிரார்த்தனை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இதுகுறித்து விஎச்பி இணைப் பொதுச் செயலாளர் சுவாமி விக்யானந்த் கூறும்போது, “வெளி நாடுகளில் இந்துக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு விஎச்பி தொண்டர்கள் சென்று, அருகில் உள்ள கோயிலில் நடக்கும் நிகழ்ச்சிக்காக ஒன்றுகூடுமாறு கேட்டுக்கொள்கின்றனர். கோயில் இல்லாத இடத்தில் மக்கள் திறந்தவெளியில் கூடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
கார் பேரணிகள் மூலமாகவும் இத்தகவல் இந்துக்களிடம் கொண்டு செல்லப்படுகிறது. ஜனவரி 22-ம் தேதி கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கு முன் இந்துக்கள் ஒன்றுகூடுவார்கள். அனைத்து இடங்களிலும் எல்இடி திரைகள் மூலம் அயோத்தி கும்பாபிஷேக விழா நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். இந்த நிகழ்ச்சிக்கு புலம்பெயர் மக்களிடையே மிகுந்த உற்சாகம் காணப்படுகிறது. இந்து மதத்தை தழுவியவர்களும் இந்த நிகழ்ச்சிக்கு வருகை தரவுள்ளனர். இந்துக்களிடம் இவ்வளவு பெரிய வரவேற்பை நாங்கள் எதிர்பார்க்கவில்லை” என்றார்.